பஞ்சவர்ணம், போளூர்.
நிறைய எழுதுவது – அதிகமாகப் படிப்பது இதில் தங்களுக்கு எதில் ஈடுபாடு அதிகம் ?
நிறைய எழுத அதிகமாகப் படிக்க வேண்டும்.
*****
செந்தில் வேலவன், திண்டிவனம்.
கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ?
ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ?
மைதிலி வேணுகோபால், சென்னை.
சிறுகதை எழுதுவது எளிதா ? நாவல்கள் எழுதுவது எளிதா ?
100 மீட்டர் ஓட்டம் எளிதா ? 25 கிலோ மீட்டர் மராத்தான் ஓட்டம் எளிதா ?
*****
ஜே.மோசஸ், சிதறால்.
இளம் எழுத்தாளர்களிடம் உள்ள பலம் – பலவீனம் என்ன ?
பலம் – புதிய புதிய வார்த்தைப் பிரயோகம், நவீன சிந்தனை.
பலவீனம் – மற்ற எழுத்தாளர்களைப் படிக்காமல் எழுதுவது.
*****
கே.அரவிந்த்.
நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுதுகிறீர்களா ? அல்லது எழுதுவதற்காக கவனிக்கிறீர்களா? இரண்டாவது என்றால் விஷயங்களை இயல்பாய் ரசிக்க முடியாமல் போய்விடுமே?
கவனிக்கும்போது இரண்டுமே இயங்கும். எங்காவது ஒரு மூலையில் மூளையில் பதிவாகும். பிறகு எழுத்தாகும்.
*****
வெங்கடாசலம்.
நீங்கள் எப்படி இன்றும் தொடர்ந்து ஃபீல்டில் இருக்க முடிகிறது ?
தொடர்ந்து படிப்பதால்.
*****
ஜெ. ஜானகிசந்திரன், தம்மம்பட்டி.
ஒரு எழுத்தாளனுக்குத் தேவையான, முக்கியமான அடிப்படைக் ‘குணம்’ என்ன ?
கூர்மையான பார்வை, காது, படிப்புத் திறன்.
*****
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன் கோட்டை.
ஓர் எழுத்தாளன் எப்போது உயர்வான் ?
தன் எழுத்தின் குறைகளை அறியும்போது.
*****
டி.சுப்பிரமணியன், மேலையூர்.
இலக்கியத் துறையில் உங்கள் இமாலய இலக்கு எது ?
கடைசி வரை எழுதிக்கொண்டிருப்பது.
*****
சுமதி ராஜேந்திரன், அரக்கோணம்.
சாப்பிடும்போது புத்தகம் படிக்கும் பழக்கம் உண்டா ?
இல்லை. மற்ற எல்லா சமயங்களிலும் படிப்பேன்.
*****
டி.ரவிக்குமார், திருப்பத்தூர்.
புத்தகம் படிக்க எந்த நேரம் உகந்தது ?
எந்த நேரமும். தினம் நாலு பக்கமாவது படிக்க வேண்டும். அது எனக்கு முக்கியம்.
*****
சாருமதி, சென்னை.
எழுத ஆரம்பிக்கும்போது யாரை மனதில் நினைத்துக் கொண்டு துவங்குவீர்கள் ?
படிக்கப் போகிறவர்களை.
*****
சி.மணிவண்ணன், பெங்களூர்.
ஒரு கதை எழுதுவதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் பிடிக்கும் ?
சாதாரணமாக சில மணி நேரம். சில கதைகள் எழுதுவதற்கு வருஷங்கள் கூட ஆகும்.
*****
முகமது ரஃபீக், ஆம்பூர்.
நடைபாதைக் கடைகளில் புத்தகம் வாங்கிய அனுபவம் உண்டா ?
இள வயதில் நான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் நடைபாதைக் கடைகளில்தான். கடைக்காரர்களிடம் கெஞ்சிய அனுபவமும் உண்டு.
*****
சுகுமாரன், திருச்செந்தூர்.
நமது நாட்டில் எழுத்தாளர்கள் அனைவரும் பத்திரிகைகளை நம்பியே இருக்கும் நிலை எப்போது மாறும் ?
மாறிவிட்டதே. எல்லா முன்னணி எழுத்தாளர்களும் சகட்டுமேனிக்கு டி.வி.க்கு எழுதி வருகிறார்களே!
*****
கார்த்திகேயன்.
எப்படி உங்களால் நிறைய புத்தகங்களைப் படிக்க இயலுகிறது? வேகமாய் படிக்க எதாவது டெக்னிக் வைத்திருக்கிறீர்களா ?
அனாவசியமான புத்தகங்களைத் தவிர்த்திருக்கிறேன். படித்ததையே திரும்பிப் படிப்பதில்லை. சில வேளைகளில் speed reading முறைகளைப் பயன்படுத்துவேன்.
*****
கோபாலன், ஃப்ராங்பர்ட்.
எழுத்துலகில் நீங்கள் ஏதாவது ‘மெகா ப்ராஜெக்ட்’ யோசித்து வைத்திருக்கிறீர்களா ?
அப்படியெல்லாம் இல்லை. எழுதிக் கொண்டே இருப்பதுதான் எனக்கு மெகா.
*****
கவாஸ்கர்.
புதிதாய் ஏதாவது அறிவியல் கதைகளை எழுதிக் கொண்டிருக்கிறீர்களா ?
கதைகள் இல்லை. அவ்வப்போது சிறிய அறிவியல் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.
*****
அசோக்குமார்.
ஸ்பீட் ரீடிங் பற்றி கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்களேன் ?
1. தலையை இடம் வலமாக அசைக்காமல் வார்த்தை வார்த்தையாக மனசுக்குள் படிக்க வேண்டும்.
2. நாவல்களில் பாராக்களின் முதல் வரிகளையும், உரையாடல்களையும் மட்டும் படித்தால் கதை புரிந்து விடும்.
3. தெரிந்த விஷயத்தை விளக்கும் வரிகளை, முன்னுரை, நன்றியுரை எல்லாவற்றையும் தாவிவிட வேண்டும்.
*****
வெங்கடேஸ்வரன்.
எப்படி உங்களால் நேரம் காண முடிகிறது ? அதே இளமை வேகத்துடன் இருக்கிறீர்களே…?
நேரம் காண்பது அனாவசியங்களைத் தவிர்ப்பதால். இளமை லோரியால் ( l’oreal ) உபயம்.
*****
விவேக்.
எழுதுகையில் உங்களுக்கே உரிய பாணியில் எழுதுகிறீர்கள். நீங்கள் எழுதும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதுகிறீர்கள் ?
முதலில் யோசிக்காமல் எழுதுவேன். திருப்பிப் படிக்கும்போது சிந்தித்து திருத்துவேன்.
*****
கே.அரவிந்த்.
நீங்கள் ஸ்பென்சர் பிளாசாவுக்கு முக்காடு போட்டு வந்து ஒட்டுக் கேட்டீர்களா ? அது எப்படி நாங்கள் பயன்படுத்தும் அதனை வார்த்தைகளையும் நீங்கள் எழுதுகிறீர்கள் ?
1962-லிருந்து எழுதி வருகிறேனே, இந்தத் தகுதி கூட இல்லையேல் வெட்கம்.
*****
ராம்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க யோகாவைத் தவிரவும் வேறு வழிகள் உள்ளன என்று பதிலளித்திருக்கிறீர்கள். அவைகளைச் சொல்லி எனக்கு உதவ இயலுமா?
ஒரு வழி – நல்ல புத்தகங்கள் படிப்பது. பால் டேவிஸின் Superforce படித்துப் பாருங்கள்.
*****
சுரேஷ்.
தங்களின் எழுத்துலக வாரிசு…?
எழுத்து என்பது என் பரம்பரைச் சொத்தல்ல. இதற்கெல்லாம் வாரிசுகளை நான் நியமிக்க முடியாது.
*****
கல்யாண்.
எழுத்தில் உள்ள உங்களது நகைச்சுவை உணர்வு நிஜ வாழ்க்கையில் குறைவாமே, அப்படியா ?
நிஜ வாழ்வில் நகைச்சுவையாக இருப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணம் உங்கள் மேலதிகாரியைக் கேலி செய்ய முடியுமா ?
*****
சபீர்.
சோம்பேறித்தனத்தைக் கைவிடுவது எப்படி ?
என் முறை இது. எடுத்த காரியத்தை ஒத்திப் போட மாட்டேன். இன்று இதெல்லாம் செய்ய வேண்டும் என்று ஒரு சிறு பட்டியல் எழுதி வைத்து, மறு தினம் அதில் செய்து முடித்தவைகளை அடித்து விடுவேன்.
*****
எழுதுவதற்கென்று ஏதாவது விதிகள் உள்ளனவா?
நல்ல அப்சர்வேஷன் பவர் வேண்டும். எனது கண்களையும் காதுகளையும் எப்போதும் கவனமாகத் திறந்துவைத்திருக்கிறேன். வாசிப்பது எழுதுவதற்குப் பெரிதும் துணை புரிகிறது. எதைப்பற்றித் தெளிவாகத் தெரியுமோ அதைப் பற்றியே எழுதவேண்டும்.
*****
உங்களுடைய எழுத்து நடையை நீங்களேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டீர்களா?
ஆமாம், நானேதான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். ‘அவன் அங்கே போனான்’ அப்படின்னு எழுதணுமானா’ அவன்’ஐ எடுத்துட்டு ‘அங்கே போனான்’னு எழுதுவேன். திரும்பப் படிக்கும்போது எழுதினதைச் சின்னதாக ஆக்குவது. இலக்கணம் ஒழுங்காகத் தெரிஞ்சதனாலே அதைக் கொஞ்சம் மீறலாமேன்னு தோணித்து. இதுலே ஏற்படுகிற பலன் என்னன்னா படிப்பதிலே வாசகனுக்கும் ஒரு பங்களிப்பைக் கொடுக்கிறது. அவனுடைய புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்திக் கொண்டு அவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையில் எழுதுவது. இதுதான் என் வெற்றின்னு நினைக்கிறேன்.
*****
நீங்கள் கற்ற பாடங்கள் ?
நான் எழுதியதை இடைவெளி விட்டுப் படிக்கையில் ஒரு வாசகனின் கோணம் கிடைக்கும். எத்தனை முறை திரும்ப எழுதினாலும் ஒவ்வொரு முறையும் எழுதியது மெருகேறுகிறது; என்பதெல்லாம் நாற்பத்தோரு வருஷங்களாய்க் கற்ற பாடங்கள்.
*****
உங்கள் எழுத்து மற்றும் எழுதும் சூழ்நிலை பற்றி…
எழுத்து எனது மிகத் தனிப்பட்ட சமாசாரம். என் எழுத்து என் வீட்டில், ஒரு மூலையில், ஒரு மேஜை விளக்கின் அடியில், மிகமிகத் தனியான ஒரு சூழ்நிலையில் உருவாவது. அப்போது எனக்கும் வெளிஉலகத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
*****
எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள எதாவது எளிய முறைகள் ?
எழுத்தாற்றலை ஓரளவுக்குப் பயிற்சியால் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழ் நன்றாகத் தெரிய வேண்டும். தமிழில் நிறையப் படிக்க வேண்டும். அதிகம் பேசாமல் நிறையக் கவனிக்க வேண்டும். எழுத்து என்பது ‘Memory shaped by art‘ என்று சொல்வார்கள். உண்மை எத்தனை? கற்பனை எத்தனை? அவற்றை எந்த அளவில் கலப்பது? நடந்ததைச் சொல்வதா? நடந்திருக்க வேண்டியதைச் சொல்வதா? – இந்த ரசாயனம் புரிந்து கொள்ளக் கொஞ்சம் நாளாகும். இதற்குக் குறுக்கு வழியே இல்லை. நிறைய எழுதிப் பார்க்க வேண்டும்.
*****
பால்சாக் பற்றி ?
பால்சாக் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் எழுதினார். அத்தனை எழுத வேண்டியதில்லை. ஒரு நாளைக்கு ஒருபக்கம் எழுதினாலே வாழ்க்கையில் நூறு புத்தகம் எழுதி விடலாம்.
*****
சொந்தக் கதை அல்லது தெரிந்தவர்கள் கதை எழுதலாமா ?
The image that fiction produces is purged of the distractions, confusions, and accidents of ordinary life -என்றதுபோல தினவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். தெரிந்த மனிதர்கள்,தெரிந்த சம்பவங்கள் பற்றி முதலில் எழுதுவது நல்லது. சொந்தக் கதை எழுதுவதை விட, மனதில் வந்த கதையைச் சொந்தப் படுத்திக் கொண்டு எழுதுவது சிறப்பு.
*****
No comments:
Post a Comment