Monday, 25 April 2022

கடவுள் வாழ்த்து......7 - இளங்கோ அடிகள்

 


கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.


கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி நூலை தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.

சிக்கல் என்ன என்றால், எந்தக் கடவுளை வாழ்த்தினார் என்று ஆராய புறப்பட்டுவிடும் ஒரு கும்பல்.  அந்தக் கடவுள் அவர்கள் வணங்கும் கடவுள் இல்லை என்றால், அந்த நூலையே புறக்கணித்து விடுவார்கள்.

அது சைவ நூல், அது வைணவ நூல் என்று பேதம் காணத் தொடங்கி விடுவார்கள்.

திருவள்ளுவர் "ஆதி பகவன்", "வாலறிவன்" , "எண் குணத்தான் " என்று சொன்னார்.  அது எல்லாம் சமண சமயக் கடவுள். எனவே திருவள்ளுவர் ஒரு சமணர் என்று  முத்திரை குத்தி விட்டார்கள்.

திருவள்ளுவருக்கே அந்தக் கதி.

இளங்கோ அடிகள், மரபில் இருந்து சற்றே விலகுகிறார் .

முதல் பாடலிலேயே புரட்சியை ஆரம்பிக்கிறார்.

கடவுளை விட்டு விட்டு, இயற்கையை வாழ்த்துகிறார்.

நிலவை, சூரியனை, மழையை, கதை தொடங்கும் நிலத்தை போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவும், சூரியனும், மழையும் அனைவருக்கும் பொது தானே. என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே?

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.


நிலவு, சூரியன், மழை - இது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து பெய்வதில்லை மழை, காய்வதில்லை நிலவும் சூரியனும்.

அது போல, அனைத்து குடி மக்களுக்கும் அரசன் நடு நிலையாக இருப்பான், இருக்க வேண்டும்  என்று முதல் பாட்டிலேயே எடுத்து வைக்கிறார் அடிகளார்.


அரசன் சிறந்த கொடையாளனாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு, வறியவர்களுக்கு, முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வரி விதிப்பதும், போர் செய்வதும் மட்டும் அரசன் கடமை அல்ல. மழை போல பலன் கருதாமல்  உதவ வேண்டும். 

அரசன் இரக்கம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிலவு எப்படி குளிர்ந்து, சுகமாக இருக்கிறதோ அப்படி  இதமாக இருக்க வேண்டும். கொடுங்கோலனாக, மக்களை வாட்டி வதைப்பவனாக இருக்கக் கூடாது. 

அரசாங்கம் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிச்சத்தில், அனைவரும் காணும்படி  , ஒளிவு மறைவு இன்றி நடக்க வேண்டும். சூரிய ஒளி எப்படி அனைத்தையும்  மறைக்காமல் காண உதவுகிறதோ அப்படி. 

No comments:

Post a Comment