Tuesday 18 September 2012

கிருபானந்த வாரியார்


கிருபானந்த வாரியார் சொற்பொழிவுகளிலிருந்து.... 

சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.
 போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.
வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''

கடைசிப் பிள்ளை

கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது.
"சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான். என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார் கூட்டத்தினரை பார்த்து, " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "உட்காருங்க! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு கிடையாதா? உங்களோட அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ. வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்க" என்றார்.

எது ஈன்றது? எது குட்டி போட்டது?

காளமேகப் புலவர் கும்பகோணத்தில் ஓர் அன்ன சத்திரத்திலே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் எதிரில் முன் குடுமிச் சோழியப் பிராமணர் ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

எதிரில் சாப்பிடும் அந்த சோழியப் பிராமணருக்கு சாப்பிடுவதில் வேகம் இருந்தது. அவர் குடுமி அவிழ்ந்து அன்னத்தில் விழுந்தும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அவர் சாப்பிடும் வேகத்தில் அந்தக் குடுமியை வேகமாகத் தள்ளினார்.

அந்தக் குடுமியில் ஒட்டியிருந்த அன்னம் காளமேகப் புலவரின் இலையில் வந்து விழுந்தது.

புலவருக்குக் கடும் கோபம். உடனே தொடங்கினார்.

சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப்
பெருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக்
கோட்டானே நாயே குரங்கே உனைஒருத்திப்
போட்டாளே வேலையற்றுப் போய்

இங்கு புலவர் பெற்றாளே என்று பாடவில்லை. குரங்கே, நாயே என்றால்போட்டாளேஎன்றுதான் பாட வேண்டும்.

இங்கு ஒரு நுட்பத்தைக் கவனிக்க வேண்டும்.

பன்றியும் விலங்கு, நாயும் விலங்கு, மாடும் விலங்கு. எல்லாம் விலங்குதான். பசு கன்று ஈன்றது என்கிறோம். ஆனால் நாய் குட்டி போட்டது என்கிறோம். ஏன்?

ஒன்றே ஒன்று போட்டால் ஈன்றது. ஐந்து ஆறு என்றால் போட்டால் அது குட்டி போட்டது.

ரயிலில் ஒரு பெண் ஒரு குழந்தை வைத்திருந்தால் உன் குழந்தையா? என்பார்கள். அதே சமயம் நான்கைந்து இருந்தால் குட்டிகளா என்று கேட்பார்கள்.






"நேற்று" என்பது உடைந்த மண் பானை;
 "நாளை" என்பது மதில் மேல் பூனை;
 "இன்று" என்பது அழகிய ஒர் வீணை!
                         - கிருபானாந்த வாரியார். 



2 comments:

  1. Love கிருபானந்த வாரியார் always - Smiling Face and Husky voice and storie-telling mannerisms

    ReplyDelete
  2. nice..

    i remember going for கிருபானந்த வாரியார்'s சொற்பொழிவு long long long ago in Mayuram

    ReplyDelete