Wednesday 14 May 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 17


ஆன்மீகப் பயணம் 


ஆன்மீகப் பாதையில் எடுத்து வைக்கப்போகும் முதல் அடி பற்றி தெரிந்து கொள்ள மாணவிகள் ஆர்வமாக இருக்கின்றனர்.

" நமது பிரச்சனைகளுக்கும், துன்பங்களுக்கும் நாம்தான் காரணம் என்று எப்போது நாம் உணர்கின்றோமோ அப்போது நாம் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைத்து விட்டோம் என்று நிச்சயமாக  சொல்லலாம்.  பொதுவாக மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு மற்றவர்களை குறை சொல்லி அவர்கள் திருந்த அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள். தன்னிடத்தில் உள்ள குறைகளை உணரவும், தன்னைத் திருத்திக் கொள்ளவும் சிறிதும் முயல மாட்டார்கள்.  மற்றவர்கள் மீதே பழி சொல்லி, மற்றவர்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் எப்படி?" என அம்மா கேட்க,

" நீங்கள்தான் ஆன்மீகப் பாதையை காட்டிவிட்டீர்களே, எங்கள் குறைகளை உணரத் தொடங்கிவிட்டோம் " என்கிறார்கள் மாணவிகள்.

" உணர்ந்தால் மட்டும் போதாது. மனம் பண்பட பயிற்சிகள் வேண்டும். உதாரணமாக ஒருவர் உங்களை திட்டிவிட்டார் என வைத்துக்கொள்வோம். உங்கள் மனம் உடனே துன்பப் படுகின்றது. உணர்ச்சி வசப்பட்ட மனோநிலையில் நீங்கள் இருந்தால் உங்களை திட்டியவரிடம் சண்டை போட்டிருப்பீர்கள் அல்லது  மேலும் உணர்ச்சி வசப்பட்டு வேண்டாத செயல்களை செய்திருப்பீர்கள். நீங்கள் அமைதியாக சிந்தித்தால் திட்டியவரின் சொல்லா நம்மை புண்படுத்தியது .....இல்லையில்லை...என் மனம்தான் அந்த சொல்லை துன்பமாக மாற்றியது என்பதை   உணரலாம். இப்படி அமைதியாக, விழிப்புணர்வுடன் ஒவ்வொன்றையும் சிந்தித்து, சிந்தித்து செயல் படுபவன் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்து கொண்டிருக்கின்றான் என்பது அர்த்தம். பக்குவப்படும் மனம் பண்பட்டு, பண்பட்டு ஆன்மீக சாதனைகளுக்குத் தயாராகின்றது" என்கிறார்கள் அம்மா.

" எப்போதுதான்  ஆன்மீகப் பயணம் நிறைவு பெறும்?" என மாணவிகள் கேட்கின்றனர்.

" கருமையத்தூய்மைக்கான வழிமுறைகள் பார்த்தோமல்லவா, அவற்றை விழிப்புணர்வோடு கடைப்பிடித்து வரும்போது மனதில் எப்போது இன்பமும், துன்பமும் அற்ற ஒரு மனோநிலை வருகின்றதோ இன்னும் சொல்லப்போனால் எப்போது மனம் சலிப்பில்லா ஆனந்தத்தை அனுபவிக்கின்றதோ அப்போது  ஆன்மீகப் பயணம் நிறைவு பெறுவதாகக் கொள்ளலாம்."

"கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள், அம்மா " என மாணவிகள் கேட்க,

" பிரச்சனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் காரணம் மற்றவர்களும் அல்ல, நாமும் அல்ல என்ற மனோநிலை அடையும்போது ஆன்மீகத்தில் முழுமை பெறுகின்றோம். இந்த நிலை அடையும்போது  ஆன்மீகப் பயிற்சிகள் நிறைவு பெற்றிருக்கும்.  மனம் அன்பும், கருணையும் நிறைந்து பார்க்கும் தோற்றங்களெல்லாம் இறைதோற்றமாகக் கொள்ளும். புற சூழ்நிலைகள் எதுவும் மனதைப் பாதிக்காது. மனம் தன்னையும்  நொந்து கொள்ளாது. உடலாலும், மனதாலும் யாருக்கும் உதவ, மற்றவர் துன்பம் தீர்க்க எப்போதும் தயாராக இருப்பார்கள். செய்துகொண்டும் இருப்பார்கள்." என்கிறார்கள் அம்மா.

" ஆன்மிகம் என்பது இவ்வளவுதானா?" என வினவுகின்றனர் மாணவிகள்.

" மேலும் இருக்கின்றது..நம் மகரிஷி அவர்கள் விளக்கியுள்ள ' நான் யார் ' தத்துவத்தையும்  ' பிரம்ம ஞானத்தையும்' பழக, பழக எல்லா உயிர்களும் ஒன்று, எல்லா தோற்றங்களும் ஒன்று, எல்லாமே இறைநிலையின் வெளிப்பாடு என்ற உணர்நிலையில் வாழலாம். நம்மை அறியலாம். பிறரை அறியலாம். இயற்கையை அறியலாம்.இறைநிலையின் பிரதிபிம்பம் நாம்தான் என்ற உணர்நிலையில் அன்பும், கருணையுடன் தொண்டாற்றி   இன்பம் காண்போம்." என முடிக்கின்றார்கள் அம்மா.

" அப்படியெனில் இந்த மாணவப் பருவத்தில் நாங்கள் செய்ய வேண்டியதென்ன?" என கேட்கின்றார்கள் மாணவிகள்.

-  தொடரும் 

No comments:

Post a Comment