Saturday 10 May 2014

நட்பு....3

நட்பும் நட்புணர்வும்

ஓஷோ 



பழகிக் கொண்டிருக்கும் மனிதர்களுடன் நட்பு கொள்வது என்பது ஆரம்பத்திலேயே தவறான அடி எடுத்து வைப்பதாகும். நட்பு என்பது பகிர்தலாக இருக்க வேண்டும்.

உன்னிடம் ஏதாவது இருந்தால் பகிர்ந்து கொள். யார் உன்னிடம் பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்களோ அவர்கள் நண்பர்கள். அது தேவை பற்றி. கேள்வி அல்ல.

நீ அபாயத்தில் இருக்கும்போது ஒரு நண்பன் வந்து உதவ வேண்டும் என்ற தேவையேகிடையாது. அது சம்பந்தமில்லாதது. அவன் வரலாம், வராமலும் இருக்கலாம். ஆனால் அவன் வர வில்லையென்றால் நீ குற்றமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

அவன் வந்தால் நீ மிகவும் நன்றியோடு இரு, வரவில்லையென்றால் பரவாயில்லை. வருவதும் வராததும் அவனிஷ்டம். நீ அவனை கட்டாயப்படுத்த வேண்டியதில்லை,

நீ அவனை குற்றம் சொல்லக் கூடாது. உனக்கு கெட்ட எண்ணம் எதுவும் இருக்கக்கூடாது. எனக்குத் தேவை ஏற்படும் போது நீ ஏன் வரவில்லை என்ன வகையான நண்பன் நீ என்று கேள்வி கேட்கக் கூடாது.

நட்பு என்பது சந்தைக்கடைக்குரியது அல்ல. நட்பு என்பது கோவிலுக்குரிய மிகஅரிதான விஷயங்களில் ஒன்றாகும், அது கடைவீதிக்குரியது அல்ல. ஆனால் உனக்கு அந்த வகையான நட்பைப் பற்றி எதுவும் தெரியாது. நீ அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

நட்பு என்பது மிகப் பெரும் கலை. அன்பின் பின்னே ஒரு இயற்கையின் உந்துதல் இருக்கும், நட்பின் பின்னே எந்த இயற்கையின் உந்துதலும் இருக்காது. நட்பு என்பது தன்னுணர்வு கொண்டது. அன்பு தன்னுணர்வு இல்லாதது.

நாம் அன்பு என்று அழைப்பது மனித உணர்வை விட அதிக விலங்குணர்வு கொண்டது. நட்பு முழுக்க முழுக்க மனித உணர்வு கொண்டது. உன் உயிரியலிலேயே உள்கட்டமைப்பு கொண்டதல்ல அது. அது உயிரியலை சேர்ந்ததல்ல. ஆகவேதான் ஒருவர் நட்பில் உயர்கிறார், அவர் நட்பில் விழுவதில்லை. அது ஆன்மீக பரிமாணம் கொண்டது.

யார் என்னுடைய உண்மையான நண்பன் என கேள்வி கேட்காதே, பதிலாக நான் உண்மையான நண்பனா எனக் கேள். எப்போதும் உன்னைக் குறித்துப் பார். நாம் எப்போதும் அடுத்தவர்களைக் குறித்துத்தான் அக்கறை கொள்கிறோம். மற்றவர்களை பற்றி எதையும் உறுதியாக சொல்வது முடியாத காரியம். அது தேவையுமில்லை.

நீ எப்படி அடுத்தவரைப் பற்றி உறுதி கூற முடியும்  மற்றவர் எப்போதும் மாறுதல்தான். இந்த வினாடி அவர் அன்பாக இருக்கக் கூடும், அடுத்த வினாடி அவருக்கு அன்பு இல்லாமல் இருக்கக் கூடும். அங்கு எந்த உறுதிமொழியும் கிடையாது. நீ உன்னைப் பற்றி வேண்டுமானால் உறுதியாக கூறலாம், ஆனால் அதுவும் இந்தக் கணம் மட்டுமே.எதிர்காலம் முழுமையையும் நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தைப் பற்றி, நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் நினைத்தால் போதும். நிகழ்காலத்தில் வாழு. 

இப்போது இந்த கணத்தில் நட்பும் நட்பின் மணமும் நிரம்பியிருக்கும் போது எதற்காக அடுத்த கணத்தைப் பற்றி கவலைப் பட வேண்டும் அடுத்த கணம் இந்த கணத்திலிருந்தே பிறக்கிறது. அது உயர்ந்த ஆழ்ந்த இயல்பாக இருந்தாக வேண்டும்.

அது அதே மணத்தை உயர்ந்த இடங்களுக்கும் கொண்டு வரும். அதைப் பற்றி நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த கணத்தை ஆழ்ந்த நட்புடன் வாழு.

நட்பு யாரையும் குறிப்பாக நினைத்து இருந்தாக வேண்டிய அவசியம் இல்லை. - நீ குறிப்பிட்ட ஆட்களுடன்தான் நட்பாக இருக்க முடியும் என்பது பழைமையான கருத்து.

வெறுமனே நட்பாக இரு. நட்பை உருவாக்கிக் கொள்வதற்கு பதிலாக நட்புணர்வை உருவாக்கிக் கொள். அது உனது இருப்பின் இயல்பாக மாறட்டும். உன்னைச் சுற்றி சூழலை உருவாக்கிக் கொள். அப்போதுதான் உன்னருகில் யார் நெருங்கி வந்தாலும் நீ அவர்களுடன் நட்புணர்வோடு இருக்க முடியும்.

இந்த பிரபஞ்சம் முழுவதும் நட்புணர்வாக வேண்டும். நீ இந்த இயற்கையுடன் நட்புணர்வுடன் இருந்தால் ஆயிரம் பங்கு அதிகமாக அது உன்னுடன் நட்புணர்வுடன் இருக்கும். அதே வழியில் ஆனால் அதிகமான அளவு அது உனக்கு திருப்பித் தரும். அது உன்னை எதிரொலிக்கும்.

No comments:

Post a Comment