Friday 22 April 2022

கடவுள் வாழ்த்து.... 4 புறநானூறு



 கண்ணி கார்நறுங் கொன்றை, காமர்

வண்ண மார்பின் தாருங் கொன்றை;

ஊர்தி வால்வெள் ஏறே, சிறந்த

சீர்கெழு கொடியும் அவ்ஏறு என்ப;

கறைமிடறு அணியலும் அணிந்தன்று, அக்கறை

மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று, அவ்வுருத்


தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;

பிறைநுதல் வண்ணம் ஆகின்று, அப்பிறை

10 பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய


நீரறவு அறியாக் கரகத்துத்


தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

அருஞ்சொற்பொருள்:

  1. கண்ணி = தலையில் சூடப்படும் மாலை; கார் = கார் காலம்; நறுமை = மணம்; கொன்றை = கொன்றை மலர்; காமர் = அழகு.
  2. தார் = மாலை.
  3. ஊர்தி = வாகனம்; வால் = தூய; ஏறு = எருது.
  4. சீர் = அழகு; கெழு = பொருந்து.
  5. மிடறு = கழுத்து. அந்தணர் = சான்றோன்
  6. நவிலுதல் = கற்றல்; நுவலுதல் = போற்றுதல்.
  7. திறன் = கூறுபாடு.
  8. கரக்கல் = மறைத்தல்.
  9. வண்ணம் = அழகு.
  10. ஏத்துதல் = புகழ்தல்.
  11. ஏமம் = காவல்.
  12. அறவு = அழிதல், குறைதல்; கரகம் = கமண்டலம்.
  13. பொலிந்த = சிறந்த; அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

புறநானூறு கடவுள் வாழ்த்து விளக்கம்

எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமான் தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது.

அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான்.

நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது. அந்தக் கறை, சான்றோர்களால் போற்றப் படுகிறது.

சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது. அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும்.

பதினெட்டுக் கணங்கள்: 

தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரகணம், ஆகாசவாசி, போகபூமியர்

No comments:

Post a Comment