அனுமன் சீதையிடம், “தாயே! தங்களை துன்புறுத்திய அரக்கிகளைத் தண்டிக்க அனுமதி அளியுங்கள்” என வேண்டினார்.
“அனுமனே... பணியாட்களான அவர்களைத் தண்டிப்பது பாவம்” என்று தடுத்ததோடு, கதை ஒன்றைச் சொன்னாள். அனுமனும் ஆவலாக கேட்டார்.
புலி ஒன்று, மாலை நேரத்தில் வேடன் ஒருவனைத் துரத்தியது. உயிர் பிழைக்க ஓடிய வேடன், மரத்தின் மீதிருந்த கரடியிடம் தஞ்சமடைந்தான். இருள் சூழ்ந்தும் புலி இடம் விட்டு நகராமல் மரத்தின் கீழ் நின்றது. களைப்பால் வேடன், கரடியின் மடி மீது தலை வைத்து தூங்க ஆரம்பித்தான்.
அப்போது புலி கரடியிடம், “நம்மை வேட்டையாடும் இவனுக்கு அடைக்கலம் தருவது நல்லதல்ல. அவனை கீழே தள்ளினால் நான் பசியாறுவேன்,” என்றது.
அதை ஏற்காத கரடி, “தஞ்சம் அடைந்தவரைக் காப்பது கடமை” என மறுத்தது. சற்று நேரத்தில் வேடன் கண் விழிக்க, கரடி ஓய்வெடுக்க விரும்பியது.
வேடனின் மடி மீது தலை வைத்த கரடி தூங்கத் தொடங்கியது. அப்போது புலி, “ஏ..வேடனே! என்னிடம் தப்பிக்க எண்ணி, கரடியிடம் சிக்கி விட்டாய். கண் விழித்ததும் உன்னை கொன்று விடும்.அதைக் கீழே தள்ளினால் பசியாறிக் கொள்வேன்,” என்றது. சம்மதித்த வேடன் கரடியைத் தள்ளி விட முயன்றான். சுதாரித்த கரடி மரக்கிளையைப் பற்றிக் கொண்டது.
அது கண்டு பதறிய வேடனிடம் கரடி, 'பயப்படாதே! உன்னைக் கொல்ல மாட்டேன்' என உறுதியளித்தது.
அந்தக் கரடியைப் போல நமக்கும் உயர்ந்த மனம் வேண்டும் என்றாள் சீதை. அனுமனும் அரக்கியரைத் தண்டிக்கும் எண்ணத்தைக் கைவிட்டார்.
No comments:
Post a Comment