Monday, 27 June 2022

'கடவுளைக் காண முடியுமா?' - கிருபானந்த வாரியார்

 

அரசமரத்தடியில் தியானத்தில் இருந்த பெரியவரிடம்,

'கடவுளைக் கண்ணால் காண முடியுமா?' என்று கேட்டான்
ஒரு மாணவன்.
-
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு 
கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
-
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
-
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
-
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை 
முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
-
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
-
“ஆம்! தெரிகின்றன.”
-
“முழுவதும் தெரிகின்றதா?”
-
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் 
தெரிகின்றது” என்றான். “தம்பீ! உடம்பின் பின்புறம் 
தெரிகின்றதா?”
-
மாணவன் விழித்தான்.
-
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
-
“என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது 
என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரிய
வில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம் 
முழுவதுமாவது தெரிகின்றதா?” 
-
“முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
-
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் 
காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”

“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் 
தெரிகின்றது.”
-
“தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? 
நன்கு சிந்தனை செய்து சொல்.”
-
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் 
எல்லாம் தெரிகின்றது.”
-
“தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
-
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் 
துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தலானான்..
-
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் 
தெரியவில்லை!” என்றான்.
-
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் 
தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் 
சிறிதுதான் கண்டனை. கண்டேன் கண்டேன் என்று 
பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய 
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
-
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் 
உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
-
“தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு 
இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே 
வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் 
வேண்டும்.”
-
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? 
சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் 
செய்த கண்ணாடியா?”
-
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் 
விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் 
கண்ணாடிகள் வேண்டும். ஒரு கண்ணாடி திருவருள், 
மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற 
இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான 
இறைவனைக் காணலாம்.
-
“தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை 
குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் 
இறைவனைக் காண இன்றியமையாதவை.”

No comments:

Post a Comment