Tuesday 7 June 2022

கண்ணதாசன் பாடலிலிருந்து ....

 “Concentration is the root of all the higher abilities in man” என்கிறார் மறைந்த உலகப் புகழ்ப்பெற்ற தற்காப்புக்கலை வீரர் புரூஸ்லீ.

“The secret of concentration is to shut down the other windows.”    என்கிறார் இன்னொரு யோகி

“மனதை ஒரு முகப்படுத்த கற்றுக் கொள்பவன் மகான் ஆவான்” என்கிறார் சுவாமி விவேகானந்தர் .

ஐவேளை தினந்தோறும் தொழுகும்  ஒரு முஸ்லீமுக்கு தொழுகையை விட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்பது என் தாழ்மையான எண்ணம்.

வில்வித்தையில் நிபுணத்துவம் பெற்ற அர்ச்சுனன் பறவையை குறி பார்த்தபோது, அவனுக்கு அந்த பறவை அமர்ந்திருந்த மரமோ, மரத்தின் இலைகளோ, அல்லது அதற்கு பின்னால் தென்பட்ட வானமோ, அதனை சுற்றியிருந்த காட்சிகள் எதுவுமே அவன் கண்ணில் படவில்லை, ஏன் அந்த பறவைகூட அவன் கண்ணுக்கு முழுமையாகத் தெரியவில்லை, அவன் கண்ணுக்கு தென்பட்டது அப்பறவையின் கழுத்து மட்டுமே.

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று ஒரு கேள்வி கேட்கின்றான்.

“சுவாமி! நீங்கள் எங்கும் பிரம்மம் உள்ளது. அதைவிடுத்து வேறெதுவும் இங்கு இல்லை என்று உறுதியாக சொல்கின்றீர்கள், ஆனால் என் கண்களுக்கோ உலகம்தான் தெரிகின்றதே தவிர பிரம்மம் தெரியவில்லையே. ஏன் சுவாமி?”  எனக் கேட்கின்றான்
.
குருஜீ ஒரு மெல்லிய புன்னகையோடு பதில் கூறுகிறார்.

“ஒருவன் நகை வாங்க பொற்கொல்லர் இல்லத்திற்குச் செல்கிறான். அவரது அறையில் அவர் உருவாக்கிய வளையல், காப்பு, மோதிரம், தோடு கம்மல், பிள்ளையார் உருவம், போன்ற ஆபரணங்கள்   செய்யப்பட்டு அழகாக காட்சி தருகின்றன. தங்கமும், அதன் தரமும், அதன் எடையும் மட்டுமே அந்த ஆசாரிக்கு முக்கியம் அதேபோன்று போல பிரம்மத்தைதவிர வேறு எதுவும் எனக்கு முக்கியம் இல்லை.    நம்மிருவருக்குமே   காட்சி ஒன்றுதான், ஆனால் பார்க்கும் பார்வைதான் வெவ்வேறு” என்று அவனுக்கு புரிய வைத்தார்.

குருஜி முதல் புரூஸ்லீ வரை அத்தனைப்பேருடைய கருத்துக்களையும் கண்ணதாசன்

“தெய்வம் என்றால் அது தெய்வம் – அது
சிலையென்றால் வெறும் சிலைதான்”

என இரண்டே வரிகளில் ஒரு மேஜிக்காரர் வரவழைக்கும் ILLUSION    போன்று  காட்சிகளை கொண்டுவந்து நமக்கு எளிதில் புரியவைத்தார் 

 நன்றி அப்துல்கையூம்

No comments:

Post a Comment