Saturday 1 July 2023

``பாராசிட்டமால் மருந்து கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?''





கொரோனாவின் பிடியில் நாமெல்லாம் சிக்கித் தவித்த நேரத்தில், ஆபத்பாந்தவனாகத் திகழ்ந்தன பாராசிட்டமால் மாத்திரைகள். அதன் பின்னர், காய்ச்சல் வந்தால், பலரும் பாராசிட்டமால் மாத்திரைகளைப் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே? இதே கதைதான் பாராசிட்டமால் விஷயத்திலும்.

சென்னையைச் சேர்ந்த மூன்று வயதுக் குழந்தை, காய்ச்சல் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளான். காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டமால் சிரப்பைப் பரிந்துரைத்த மருத்துவர்கள், ஒவ்வொரு வேளையும் எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்று விளக்கியுள்ளனர். காய்ச்சல் குறையாததால், குழந்தையின் தாய் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக பாராசிட்டமால் சிரப்பை மகனுக்குக் கொடுத்ததாகத் தெரிகிறது. விளைவு, ரத்த வாந்தியுடன் உடல்நிலை மோசமான அந்தக் குழந்தைக்கு, கல்லீரல் செயலிழந்தது. அந்தக் குழந்தைக்குச் சிகிச்சைகள் தொடர்கின்றன.

பாராசிட்டமால் மருந்து கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா
பாராசிட்டமால் மருந்து கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா

உடலில் உள்ள நச்சுகளைப் பிரித்து, அவற்றை உரிய முறையில் வெளியேற்றுவது கல்லீரலின் பிரதான பணி. இதனுடன், செரிமானத்துக்கு உதவுவது உட்பட எண்ணற்ற பணிகளைச் செய்யும் கல்லீரலானது, மூளை மற்றும் இதயத்துக்கு அடுத்தபடியாக உடல் இயக்கத்துக்கு முக்கியப் பங்காற்றுகிறது. அதிக அளவில் பாராசிட்டமால் மருந்தை எடுத்துக்கொள்ளும்போது, கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படும் என்றும், பாராசிட்டமால் பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் மருத்துவர்கள். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலத்திடம் பேசினோம்.

``ஆங்கில மருந்துகள், மனிதர்களின் எடை மற்றும் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படும். பாராசிட்டமால் விஷயத்தில், வயது வந்தோர் இதை மாத்திரையாகப் பயன்படுத்தலாம். 50 கிலோ எடையில் இருப்பவர்கள் இந்த மாத்திரையை 500 மில்லிகிராம் அளவிலும், 60 கிலோ எடையில் இருப்பவர்கள் 650 மில்லிகிராம் அளவிலும் எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சலின் தன்மையைப் பொறுத்து, சில மணி நேரத்துக்கு ஒருமுறை வீதம் ஒருநாளில் 3 - 4 முறைகூட இந்த மாத்திரையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படும். ஆனால், வயது வந்தோருக்கு ஒரு நாளில் எடுத்துக்கொள்ளும் இந்த மாத்திரையின் மொத்த அளவு நான்கு கிராமைத் தாண்டக் கூடாது.

``பாராசிட்டமால் மருந்து கல்லீரல் பாதிப்பை உண்டாக்குமா?'' - மருத்துவர் விளக்கம்

காய்ச்சல் அதிகமாக இருக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அல்லது சுய வைத்தியமாக பாராசிட்டமால் மாத்திரையைச் சிலர் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இதனால், உடனேயோ அல்லது சற்று தாதமாகவோ அந்த மருந்து எதிர்மறையாக வேலை செய்யும். அதனால், கல்லீரல் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு பாராசிட்டமால் கொடுப்பதில் இன்னும் கூடுதல் கவனம் தேவை. சிரப் வடிவில் இந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். அதுவும் மருத்துவர் பரிந்துரைத்திருந்தால் மட்டுமே சில மணி நேரத்துக்கு ஒருமுறை வீதம் ஒரு நாளில் அதிகபட்சமாக 4 - 6 முறை வரையும் குறிப்பிட்ட அளவில் இந்த மருந்தைக் கொடுக்கலாம். முக்கியமாக, ஒருமுறைக்கும் அடுத்த முறைக்கும் இடையே குறைந்தபட்சம் 4 - 5 மணி நேர இடைவெளி விட்டே இந்த மருந்தைக் கொடுக்க வேண்டும். இதில், எந்த இடத்தில் தவறு நடந்தாலும், பக்கவிளைவால் குழந்தைகளுக்கும் கல்லீரல் பாதிப்பு வரக்கூடும்'' என்றவர், இதுதொடர்பான சில கூடுதல் வழிகாட்டுதல்களையும் கூறினார்.

அருணாசலம்
அருணாசலம்

``குழந்தைகளுக்கு சாதாரண காய்ச்சலாக இருந்தால் ஓரிரு தினங்களில் சரியாகும். ஆனால், வைரஸ் காய்ச்சலாக இருந்தால், குணப்படுத்த சில தினங்களாவது தேவைப்படும். இதைப் புரிந்துகொள்ளாமல், குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்தால், உடனடியாக சரியாக வேண்டும் என்று பெற்றோர்கள் பலரும் நினைக்கின்றனர். குழந்தைகளைப் பொறுத்தவரை, காய்ச்சல் வந்தாலே பாராசிட்டமால் சிரப் கொடுப்பது சரியாக இருக்காது. அதிக நேரம் காய்ச்சல் நீடிக்கும்பட்சத்தில் மருத்துவரை நாட வேண்டும். வந்திருப்பது என்ன வகையான காய்ச்சல் என்பதை மருத்துவர் உறுதிசெய்த பிறகு அவர் பரிந்துரைக்கும் மருந்தை முறையாகக் கொடுக்க வேண்டும்'' என்றார் அருணாசலம்.            THANKS VIKATAN

No comments:

Post a Comment