Monday, 30 October 2023

உடல் சூட்டை தணிக்கும் ஐந்து உணவுகள்

கோடை காலம் மட்டுமின்றி, எல்லா பருவ நிலைகளிலும் நம்மை உடல் சூடு என்பது தாக்கும். பொதுவாகவே சிலருக்கு உடலில் சூடு அதிகரிக்கும். உடல் சூடு அதிகரிப்பினால் உடலில் பல பிரச்னைகள் உண்டாகின்றன. இதனால் உடலில் எடை இழப்பு, நோய் சம்பந்தமான பிரச்னைகள் போன்றவை ஏற்படும். மேலும், அதிக சோர்வு, சரும நோய்கள் உள்ளிட்டவையும் ஏற்படும். இதைத் தடுக்க சில பழங்களை சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கவும், அதை குறையாமல் பார்த்துக்கொள்ளவும் ஒருசில பழங்களும் காய்கறிகளும் உதவும்.

இளநீர்
இளநீர்

1.இளநீர்: இளநீர் சிறந்த இயற்கை பானமாகும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை வலுபெற செய்யவும் இளநீர் உதவுகிறது. இளநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இது வியர்வை மூலம் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை திரும்பப் பெற உதவுகிறது. இது உடற்பயிற்சிக்கு பின்னர் அல்லது வெப்பமான காலநிலையின் போது உடலில் மீண்டும் நீர்ச்சத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் உடல் சூடு தணியும்.

மோர்
மோர்

2.மோர்: தயிரில் இருந்து கடைந்து தயாரிக்கப்படும் மோர், உடல் சூட்டை தணிப்பதில் பெரும் பங்காற்றுகிறது. உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் பாதிப்புகளை தடுக்கும். வைட்டமின்களை அதிகரிக்கவும் மோர் உதவுகிறது. உடல் சூட்டை தணித்து, உடலின் நீர்ச்சத்தின் அளவினை மோர் அதிகரிக்கும்.

வெள்ளரி
வெள்ளரி

3.வெள்ளரிக்காய்: வெள்ளரிக்காயில் ஃபைபர் சத்துக்கள் அதிகமாக உள்ளன. பி1, பி2, பி3, பி4, பி5 மற்றும் பி6 ஆகிய சத்துக்களையும் நோயெதிர்ப்பு சக்தியையும் வெள்ளரிக்காய் அதிகரிக்கும். மலச்சிக்கலை தவிர்க்கவும், உடலில் உள்ள கெட்ட அழுக்குகளை வெளியேற்றவும் வெள்ளரிக்காய் உதவுகிறது. வெயில் காலத்திலும் உடலின் நீர்ச்சத்தை குறையவிடாமல் பார்த்துக்கொள்ளும் உணவுகளுள் ஒன்று வெள்ளரிக்காய்.

சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்கள்

4. சிட்ரஸ் பழங்கள்: சிட்ரஸ் வகை பழங்களை உடல் சூட்டை தணிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். சுவையான ஆரஞ்சு, லெமன், கிரேப் ஃப்ரூட் உள்ளிட்டவை இந்த சிட்ரஸ் பழ வகைகளுக்குள் அடங்கும். இந்த வகை பழங்களில் வைட்டமின் சி சத்துக்கள் அடங்கியுள்ளது. இது உடல் சூட்டினாலும் வெயிலினாலும் ஏற்படும் சரும பாதிப்புகளை தவிர்க்கும்.

தர்பூசணி
தர்பூசணி

5. தர்பூசணி: வெயில் காலத்தில் அதிகம் விற்கப்படும் பழங்களுள் ஒன்று தர்பூசணி. இதில் 90 சதவிகிதம் நீர்சத்து அடங்கியுள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன. உடல் சூட்டை தணித்து சருமத்தை பாதுகாக்க தர்பூசணியை சாப்பிடலாம்.

No comments:

Post a Comment