Monday, 1 January 2024

ஓவியம்

அது ஒரு பிரபலமான ஓவியப் பயிற்சி நிறுவனம். அங்கு சிறந்த ஓவிய ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக போட்டி ஒன்று அறிவிக்கப்படுகிறது.

போட்டியின் விதிமுறைப்படி இரண்டு ஓவியங்கள் வரைய வேண்டும்.

முதல் ஓவியம் அவர்கள் கொடுத்த தலைப்புக்கு ஏற்ற முறையில் வரைய வேண்டும்.

இரண்டாவது ஓவியம் அவரவர்‌ விருப்பம் தான். தன் கற்பனைத்திறனுக்கு ஏற்றவாறு என்ன வேண்டுமானாலும் வரையலாம்‌. இதனையெல்லாம் வரைந்து அந்த பயிற்சி நிறுவனத்தின் முகவரிக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

தபாலின் மூலம் நிறைய ஓவியங்கள் குவிந்திருந்தன. போட்டியின் நடுவர் குழு ஒவ்வொரு ஓவியமாய் பார்வையிட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஓவியமும் தனித்துவம் நிறைந்ததாய் இருந்தது.

ஒரு கடிதத்தில் அனுப்பப்பட்ட ஒரு ஓவியரின் ஓவியம் மிகவும் தத்ரூபமாய் இருந்தது. அவர்கள் கொடுத்த தலைப்புக்கு மிகப் பொருத்தமாய் அற்புதமாய் வரையப்பட்டிருந்தது.

அதே ஆவலில் இரண்டாவது ஓவியத்தைத் தேடினர். ஆனால் இன்னொரு ஓவியம் கடித உறையில் இல்லை. ஒரு ஓவியம் மட்டுமே அனுப்பப்பட்டிருந்தது. அதாவது குறிப்பிட்ட தலைப்பின் கீழ் வரையப்பட்ட‌ ஓவியம் மட்டும் இருந்தது. ஆனால் அவர்கள் விருப்பத்திற்கேற்றாற் போல வரையச்சொன்ன இரண்டாவது ஓவியம் இல்லை. குழு உறுப்பினர்கள் நன்றாகத் தேடி பார்த்தனர்.‌ ஓவியம் இல்லை.

எனவே விதிமுறை மீறப்பட்ட ஓவியம் தானே!!!ஆதலால் அரைமனதுடன் அந்த ஓவியத்தை நிராகரிக்க முற்படும்போது தான் அந்த ஓவியத்தின் பின்புறத்தில் சிறுகுறிப்பு ஒன்று எழுதப்பட்டிருப்பதைக் கவனித்தனர். அதனை வாசித்தவுடன்‌ அனைவருக்கும் ஆச்சரியம். அந்தக் குறிப்பில்,

*** இரண்டாவது ஓவியத்தைத் தேட வேண்டாம். கடிதத்தின் மேல் ஒட்டி அனுப்பிய ஸ்டாம்ப்-ஐ நன்றாக கவனிக்கவும். அது நான் வரைந்தது தான். ***

No comments:

Post a Comment