1.மன அமைதி :
எவ்வித பதற்றமும் மன இறுக்கமும் இல்லாத மென்மையான நிலையை தான் மன அமைதி என்கிறோம்.
பொதுவாக தியானத்தின் மூலம் மன அமைதி பெறலாம் என்றாலும் கீழ்க்கண்ட எதிர்மறை குணங்களில் இருந்து விடுபட்டால் தான் அந்த தியானமே சித்திக்கும்.
எடை போடும் குணம் : ஒருவரிடம் உள்ள குறைகளை உற்று நோக்கி ஆராய்ந்து, அவர் எந்த அளவு நல்லவர், எந்த அளவுக்கு கெட்டவர் என்று தராதாரம் பார்க்கும் செயலை விட்டு பரஸ்பரம் அன்பை மட்டும் செலுத்துங்கள். ஏனெனில் இப்பூவுலகில் நீங்கள் உட்பட குறைகள் இல்லாதவர் எவரும் கிடையாது.
பிறருடைய குறைகளை அவரிடம் சுட்டிக் காட்டலாம். அது தவறில்லை. ஏனெனில் அவர் தன் தவறுகளை திருத்திக் கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமையும்.
ஒருவருடைய குறைகளை அவர் இல்லாத போது பிறரிடம் பழித்துக் கூறி புறம் பேசக் கூடாது. ஏனெனில் உங்கள் நண்பர்கள் அல்லது சுற்றியுள்ளவர்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டார்கள், ஏனெனில் நீங்கள் அவர்களைப் பற்றி பின்னால் புறம் பேசுவீர்கள் என்று அவர்கள் எண்ணுவார்கள்.
மேலும் இது உறவுகளை புண்படுத்தும். இப்படியான செயல்கள் பிரச்சினைகள் மற்றும் பிணக்குகளை உருவாக்கும்.
தான் முக்கியமானவர் என்ற உணர்வு யாரால் பறிக்கப்பட்டதோ அல்லது யாரால் பறிக்கப்பட்டிருக்கும் என்று சந்தேகம் ஏற்படுகிறதோ அந்த நபர் மீது ஏற்பட்டுள்ள பொறாமையால் இவ்வாறு புறம் கூறும் செயல் அரங்கேற்றம் ஆகிறது.
இது உறவுகளிடயே மனவருத்தத்தை ஏற்படுத்துவதோடு சமூக வாழ்க்கையிலும் நெகட்டிவ் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒப்பீடு செய்யும் குணம்: இவ்வுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தனி தன்மையுடன் படைக்கப்பட்டு உள்ளனர். அதனால் தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. ஏனெனில் நாம் ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களை விட தாழ்ந்து இருந்தால், அவர் மீது பொறாமை எழும். தன் மீது தனக்கு இருக்கும் தன்னம்பிக்கை குறையும். இது தன்னை தானே சிதைத்து கொள்ளும் நாசக்கார வேலையாகும்.
உள் சத்தியம் : மனதில் ஏற்படும் வெறுப்பு, துக்கம், கோபம், அவமானம், குற்ற உணர்வு மற்றும் பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை, நம்மில் பெரும்பாலோர் அனுபவிப்பதைத் தவிர்க்கிறோம், அவ்வாறு தவிர்ப்பதால் அவை நம் உடலில் உறைந்து போய், உடலில் நோய்களாக உருவெடுக்கும். அல்லது உறவுமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். அல்லது முன்னேற்ற முடியாதபடி தடைகளை உண்டாக்கும். அல்லது அழிவுகரமான நடத்தைகளை தூண்டும்.
வெறுப்பு, துக்கம், கோபம், அவமானம், குற்ற உணர்வு மற்றும் பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் தோன்றும் போது, இந்த உணர்வுகள் எந்தளவு உங்களை இரணப்படுத்துகிறது என்பதை உள்ளுக்குள் பாருங்கள். அதை அனுபவியுங்கள். அந்த துன்பம் சில தினங்களில் உங்களை விட்டு அகன்று விடும். இவ்வாறு பார்த்தலே சுதந்திரம். இந்த செயலுக்கு தான் உள்-சத்தியம் என்று பெயர். இச்செயல் உள் சுதந்திரம், ஞானம் மற்றும் பல வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
உள்வசனம் (Inner voice): ஒரு ஆயில் மோட்டார் ஓடுவது போல் நம் மனதில் எந்நேரமும் ஏதாவது ஒரு சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கும் இதைத்தான் உள் வசனம் என்று கூறுகிறோம். அந்த எண்ண ஓட்டங்கள் எதிர்மறையாக இருந்தால் நன்றி, நல்லெண்ணம், நல்வாழ்த்துக்கள் போன்று நேர்மறை எண்ணங்கள் பக்கம் திருப்புங்கள்.
போதுமான அளவு ஓய்வு, தூக்கம் மற்றும் சீரான உணவு போன்றன திசுக்களின் மறுசீரமைப்பிற்கு உதவுகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. தீவிர உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது.
பொன்மொழிகள் வாழ்க்கையின் முக்கிய சத்தியங்களை சுருக்கமாக உணர்த்துகின்றன, இதன் மூலம் நம் வாழ்வில் திசைமாற்றம் பெறலாம்.
பொன்மொழிகள் மன உறுதியை அதிகரிக்கின்றன, புதிய சவால்களை எதிர்கொள்வதில் உதவுகின்றன, மற்றும் முன்னேற்றத்தை ஊக்குவிக்கின்றன.
பொன்மொழிகள் ஆழமான கருத்துக்களைப் பகுத்தறியச் செய்கின்றன, இதன் மூலம் நம் சிந்தனைகள் தெளிவாகும்.
வாழ்க்கையில் மறுபடியும் எழுந்து நிற்கும் மனோபாவத்தை வளர்க்கின்றன.
நம்பிக்கை மற்றும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கின்றன.
ஒவ்வொரு பொன்மொழியும் ஒரு புதிய பாடமாக அமைகிறது, இதன் மூலம் நம் அறிவைப் புதுப்பிக்கின்றன.
2. மகிழ்ச்சி :
மகிழ்ச்சி என்பது ஒருவரின் மனதிற்கும் உடலுக்கும் ஏற்படும் சுகமான உணர்வு, திருப்தி, மற்றும் மகிழ்ச்சியான நிலை. இது ஒரு நேர்மறையான உணர்ச்சி நிலை ஆகும், இதில் ஒருவர் வாழ்க்கையை எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறார். அதற்கு கீழ்க்கண்ட குணாதிசயங்கள் மிக முக்கியமாகும்.
அன்பு அரவணைப்பு: மற்றவர்களை நேசிக்கும் மனம் மற்றும் கவனம் கொடுக்கும் பாங்கு. இது மனதுக்கிளர்ச்சியை உருவாக்கி, நல்ல உறவுகளை கட்டமைக்க உதவுகிறது.
பரஸ்பரம் நட்புணர்வு: ஒருவருக்கொருவர் நட்பு உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும் சந்தோசம் வெளிவிடுகிறது . இது உறவுகளை பராமரிக்க மற்றும் உயர்த்த உதவுகிறது.
நீதி நேர்மை: எப்போதும் உண்மையையும் நேர்மையையும் பேணி, நியாயமான முடிவுகளை எடுக்கும் திறமை. இது ஒருவரின் நற்பெயரை உயர்த்தும். இந்த வகையிலும் ஒரு வகையான மகிழ்ச்சி உண்டாகிறது.
திருப்தி: வாழ்க்கையில் கிடைக்கும் பொருட்களிலும், நிலைகளிலும் மகிழ்ச்சி அடைதல். இது மனநிலையை சாந்தமாக வைத்திருக்கும்.
மன்னித்தல்: மற்றவர்களின் தவறுகளை மன்னித்து, பழி வாங்காமல், அதற்கு மேலான மனோபாவம் கொள்தல். இது மனதிற்கு அமைதியை மகிழ்ச்சியையும் தரும்.
மன்னிப்பு கோரல்: ஒருவர் தமது தவறுகளுக்காக மன்னிப்பு கோருதல். இது மனசாட்சிக்கு நிம்மதியை தரும் மற்றும் உறவுகளை மேம்படுத்தும். மகிழ்ச்சி தரும்.
No comments:
Post a Comment