Sunday, 28 June 2026

வாழ்க்கையில் வெற்றி

ஒருமுறை ஒரு இளைஞன், வாழ்க்கையில் எப்படி எப்போதும் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருப்பது என்ற ரகசியத்தைத் தெரிந்துகொள்ள ஒரு பெரிய ஞானியிடம் சென்றான்.

ஞானி அவனிடம் ஒரு ஸ்பூனைக் கொடுத்து, அதில் இரண்டு சொட்டு எண்ணெயை ஊற்றினார். பிறகு, "நீ இந்த அரண்மனை முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டு வா. ஆனால், ஸ்பூனில் இருக்கும் எண்ணெய் கீழே சிந்தக் கூடாது" என்று நிபந்தனை விதித்தார்.

இளைஞனும் அரண்மனை முழுவதும் சுற்றிவிட்டு ஞானியிடம் திரும்பினான். அவனது கவனம் முழுவதும் ஸ்பூனில் மட்டுமே இருந்ததால், எண்ணெய் ஒரு சொட்டுகூட சிந்தவில்லை.

ஞானி அவனிடம், "அரண்மனையில் இருந்த அழகான ஓவியங்களையும், தோட்டத்தில் இருந்த பூக்களையும் பார்த்தாயா?" என்று கேட்டார். இளைஞன், "இல்லை ஐயா, என் கவனம் முழுவதும் எண்ணெயிலேயே இருந்ததால் நான் எதையும் பார்க்கவில்லை" என்றான்.

இப்போது ஞானி, "மீண்டும் ஒருமுறை அரண்மனையைச் சுற்றி வா. இந்த முறை அங்குள்ள அழகையெல்லாம் ரசித்துவிட்டு வா" என்றார். இளைஞனும் சென்றான். அரண்மனையின் அழகு, கலைப்பொருட்கள், தோட்டம் என அனைத்தையும் ரசித்துவிட்டுத் திரும்பினான். ஆனால், இந்த முறை வேடிக்கை பார்த்ததில் ஸ்பூனில் இருந்த எண்ணெய் முழுவதும் கீழே சிந்தி இருந்தது.

இப்போது ஞானி புன்னகையுடன் சொன்னார்:
"இதுதான் வாழ்க்கையின் தத்துவம். ஸ்பூனில் இருக்கும் எண்ணெய் என்பது உன்னுடைய பொறுப்புகள் மற்றும் கடமைகள். அரண்மனையின் அழகு என்பது உன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சி. கடமைகளை மறந்துவிட்டு வாழ்க்கையை ரசிப்பதோ, அல்லது பொறுப்புகளில் மட்டுமே மூழ்கி வாழ்க்கையை ரசிக்காமல் இருப்பதோ உண்மையான வாழ்க்கை அல்ல. இரண்டையும் சமமாக எடுத்துச் செல்வதே உண்மையான வாழ்க்கை ரகசியம்."


கருத்து:

வாழ்க்கையில் உழைப்பு, பணம், பொறுப்புகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு குடும்பம், மன அமைதி மற்றும் மகிழ்ச்சியும் முக்கியம். இரண்டையும் சமநிலையில் (Balance) கொண்டு செல்பவரே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்.


No comments:

Post a Comment