Thursday, 1 September 2022
Wednesday, 31 August 2022
தீர்ப்பு – நல்வழி
”வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே – மூதேவி
சென்றிருந்து வாழ்வாளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை".
வழக்கு மன்றத்தில் உண்மை, பொய்களை ஆராய்ந்து நடுநிலையாக, மனச்சான்றுடன் தீர்ப்பு வழங்காதவரின் வீட்டில்
பேய்கள் குடிபுகும், எருக்கஞ்செடிகள் பூக்கும், பாதாள மூலி
(நெருஞ்சில் / சீந்தில் கொடி) படரும், மூதேவி வீட்டிற்குள் குடியேறுவாள், பாம்புகள் விரும்பி வாழும்.
ஆட்சி - புறநானூறு
கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு கைப்போன் மாணின்ஊறு இன்றாகி ஆறு இனிது படுமே
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
பகைக் கூழ் அள்ளற் பட்டு
மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே
- தொண்டைமான் இளந்திரையன்
உரை:
வண்டியைச் செலுத்துவோன் மாட்சிமைப்படின் வழியில் ஒரு துன்பமும் இன்றி வண்டி இனிதாகச் செல்லும் திறனற்றவன் வண்டி ஓட்டினால் அது பகையாகிய செறிந்த சேற்றிலே சிக்கி மிகப் பல தீய துன்பங்களை மேலும் மேலும் உண்டாக்கும்.
( அரசன் திறம்பட ஆட்சி நடத்தாவிடின் உட்பகை, புறப் பகையாகிய சேற்றில் அழுந்தித் துன்புறுவான், நாடும் சீர் கேடு அடையும்).
Tuesday, 30 August 2022
திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியுள்ள விளக்கங்கள்
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர
வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே.
அறியப்படும் பொருளையும், அறியும் அறிவையும், அறிபவனையும், மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்கின்ற சத்தியின் கூட்டத்தையும், அச்சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சிவத்தின் பிரபாவத்தையும் இவையாவற்றையும் இத்திருமந்திரத்தில் நான் விளக்கியுள்ளேன்.
விளக்கம் : ஞேயம் - அறியப்படும் பொருள். ஞானம் - அறிவு. ஞாதுரு - ஞாதுருவத்து - ஞாதுரு அத்து; அத்து - சாரியை; அறிபவன். மாயை - அசுத்த மாயை. மாமாயை - சுத்த மாயை. பரை ஆயம் - சத்திகளின் கூட்டம். அகோசரவீயம் - கண்ணுக்குப் புலப்படாமல் நின்ற விதை போன்ற பொருள். சொரூபசிவன் - பற்றப்படாதது. வீயம் - பீஜம் என்பதன் திரிபு; வித்து.
விளக்கம் : ஞேயம் - அறியப்படும் பொருள். ஞானம் - அறிவு. ஞாதுரு - ஞாதுருவத்து - ஞாதுரு அத்து; அத்து - சாரியை; அறிபவன். மாயை - அசுத்த மாயை. மாமாயை - சுத்த மாயை. பரை ஆயம் - சத்திகளின் கூட்டம். அகோசரவீயம் - கண்ணுக்குப் புலப்படாமல் நின்ற விதை போன்ற பொருள். சொரூபசிவன் - பற்றப்படாதது. வீயம் - பீஜம் என்பதன் திரிபு; வித்து.
தீரன் சின்னமலை
மாவீரன் தீரன் சின்னமலை ஓர் வரலாற்று காவியம் ; தீரன் சின்னமலை 1756 ல் பழைய கோட்டை பட்டக்காரர் மரபில் பிறந்தார். தீரன் சின்னமலை யின் இயற்பெயர் தீர்த்தகிரி கி.பி 18 நூற்றாண்டில் பிற்பகுதியில் ஈரோடு மாவட்டத்தின் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓடாநிலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்தார்.
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்க போராடிய சுதந்திர போராட்ட வீரர்களில் தமிழ் நாட்டில் தீரன் சின்னமலையின் பங்கு மகத்தானது.வெள்ளையர்களை விரட்ட மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து போரிட்டார்.இளம் வயதிலேயே வீரம் செறிந்த வீரனாக பல தற்காப்புகலைகள் அறிந்து வலம் வந்து தம் நன்பர்களுக்கு போர்ப்பயிற்சி அளித்து ஓர் படையை திரட்டினார்.
கொங்கு நாட்டுவரியை மைசூருக்கு வசூலித்து சென்றவர்களை தடுத்தி நிறுத்தி கொங்கு நாட்டு மக்கள் யாருக்கும் அடிமையில்லை என்பதை முழக்கமிட்டு அறிவித்தார்."ஹைதர் அலியின் திவான் மீராசாகிப் கேட்டால் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஓர் சின்னமலை பிடுங்கி விட்டான் என கூறுங்கள் " எனக் கூறி ஆங்கிலேய வீரர்களை விரட்டி அடித்தார்.
அன்று முதல் தீர்த்தகிரி எனும் பெயர் மாறி சின்னமலை என அழைக்கப்பட்டார் . இவரின் வீரம் அறிந்த திப்பு சுல்தான் தூது அனுப்பி தீரன் சின்னமலையிடம் தமக்கு படை உதவிகள் மற்றும் ஆதரவுகளை ஆங்கிலேயர்களை எதிர்க்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு தீரன் சின்னமலையும் கொங்கு நாட்டில் தேவையான படைபல உதவிகளை தாராளமாக கேட்குமாறு கூறினார் .
இருவரும் படைபலத்தை இணைத்தனர். தீரன் சின்னமலையுடன் கூட்டு சேர்ந்து திப்புசுல்தான் மூன்றுமுறை போரில் 2500 வீரர்களை வைத்து கொண்டு ஆங்கிலேய வீரர்கள் 10,000 பேரை விரட்டி அடித்தனர். ஆங்கிலேயருக்கு கடும் சவாலாக இருந்த தீரன் சின்னமலை திப்புவின் மரணத்திற்கு பின் கி.பி 1799ல் கர்னாடாகதை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் தூந்தாஜிவாக்த் என்பவருடன் பாளையக்காரர்கள் படையை இணைத்து ஆங்கிலேயருக்கு எதிராக போர் செய்ய ஒப்பந்தம் போட்டார் தீரன் சின்ன மலை .
இரண்டு வருடங்கள் கழித்து கி.பி1801ல் கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலப்படையை பவானி காவிரிக்கரையில் வென்றார்.1802ல் சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையை துரத்தியதாக வரலாறு.
அரச்சலூரில் 1803ல் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி வெற்றிபெற்றார் இப்போரில் வெற்றி பெற்ற வெற்றிச்சின்னம் இன்றும் ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ளதென வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
போரில் வீரன் சின்னமலையை வெல்ல முடியாதென அறிந்த ஆங்கிலேயர்கள் சமையல்காரன் நல்லப்பனை பணம் தந்து தந்திரமாக தந்த ஆங்கிலேயர்களுக்கு தகவல் தந்தான் நல்லப்பன். உணவருந்திக்கொண்டிருந்த தீரன் சின்னமலை அவர் சகோதரர்கள் பெரியதம்பி,கிலேதார் தளபதி கருப்ப சேர்வை ஆகியோர்களை கைது செய்த ஆங்கிலப்படை கி.பி 1805ஆம் ஆண்டு 31ஆம் தேதி சங்ககிரி கோட்டையில் தூக்கிலிட்டு 4 பேரையும் கொன்று தன் கோபத்தை ஆங்கிலப்படை தீர்த்துக்கொண்டது.
ஆனால் தீரன் சின்னமலை மறைத்தாலும் அவர் விட்டுச்சென்ற புகழும் வீரமும் கொங்கு மண்ணில் எப்போதும் நிலைத்திருக்குமாறு அவர் வழி வந்த மக்களால் ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே ஓடா நிலையில் மணிமண்டபம் கட்டி அவர்புகழ் தேயாதவாறு பாதுகாக்கப்படுகிறது.
ஈரோடு பக்கம் வந்தால் பார்த்துவிட்டு போகலாம். பவானியில் இருந்து சேலம் செல்லும் வழியில் சங்ககிரி என்னும் இடத்தில் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டையும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் 200 வருடங்கள் கழித்து இன்றும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Monday, 29 August 2022
ஜான் பார்ட்டீன்
அமெரிக்க விஞ்ஞானி John Bardeen (ஜான் பார்ட்டீன்). டிரான்சிஸ்டரைக் கண்டு பிடித்த மாமேதை. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கபட்டது.
தன்னுடைய மகன்கள் இருவர் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
படித்துக்கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்ய இவர் விரும்பவில்லை.
அதனால் மூன்றாவது மகனை மட்டும் நோபல் பரிசு பெற விழாவுக்கு அழைத்து சென்றார்.
விழாவிற்கு தன்னுடைய ஒரு மகனை மட்டும் அழைத்து வந்ததால்,
"குடும்பத்துடன் வரவில்லையா?"
என சுவீடன் நாட்டு மன்னர் குவோஸ்டா ஜான்பார்டினை அன்பாக கடிந்து கொண்டார்.
"அடுத்த முறை விழாவுக்கு வரும்போது நிச்சயம் அவர்களை அழைத்துவருகிறேன். இப்போது அவர்கள் படித்துக் கொண்டு இருப்பதால் தொந்தரவு செய்ய வேண்டாம் என அழைத்து வரவில்லை" என்றார் ஜான்பார்டீன்.
மன்னருக்கோ ஆச்சர்யம்.. ஒரு முறை நோபல் பரிசு பெறுவதே மிகப்பெரிய சாதனை.. கடினமாக உழைக்க வேண்டும். இவர் மீண்டும் வருகிறேன் என்கிறாரே.. என்று ஆச்சர்யப்பட்டார்.
1972 ம் வருடம். மீண்டும் அதே நோபல் பரிசு கொடுக்கும் விழா.. ஜான்பார்டன் தனது மகன்களுடன் விழாவில் கலந்துகொண்டார்.. நோபல் பரிசு வழங்கப்பட்டது..
யாருக்கு? நம் ஜான்பார்டன் விஞ்ஞானிக்குத்தான். இரண்டாம் முறை மீண்டும் நோபல் பரிசு பெறுகிறார்.
எதற்கு?
மின்சாரக் கடத்திகளைப் பற்றிய உண்மைகளை இவர் கண்டுப்பிடித்திருந்தார். விழாவில் மன்னர் திக்குமுக்காடிப் போனார்.
சொன்ன சொல்லை நிறைவேற்றுவதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் பதினைந்து வருடங்கள்..எப்படி இது இவருக்கு மட்டும் சாத்தியம் ஆகியது?
தளராத தன்னம்பிக்கை. மன உறுதி.. எடுத்துக்கொண்ட செயலில் முழு கவனம். வெற்றிப் பெற்றே தீருவேன் என்ற உறுதிதான்.....
ஆம்., நண்பர்களே..,
கடினமான உழைப்புக்கு என்றுமே தோல்வி கிடையாது.
இவ்வாறு நீங்கள் விரும்பும் துறை எதுவாயினும் அதற்குத் தேவையான, முறையான பயிற்சி மற்றும்விடா முயற்சி, எடுத்த செயலை செயல்படுத்துதல் ஆகிய இம்மூன்றும் தேவை.
இவைகளை தொடர்ச்சியாக பின்பற்றும்போது, நிச்சயம் உங்கள் குறிக்கோளில் வெற்றிப்பெறுவது திண்ணம்.
நீங்கள் நினைப்பது எதுவாக இருப்பினும் உங்களை வெற்றி தேடிவரும்.
Subscribe to:
Posts (Atom)






