Saturday, 19 July 2014

குரு - சீடன்....1

குரு - சீடன் - லக்ஷணங்கள்


 ஓர் உயர்ந்த குருவானவர் எப்படி இருக்க வேண்டும்; ஒரு சிறந்த சீடனானவன் எப்படி இருக்க வேண்டும்? அவர்களுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்கள் எவை என்பது பற்றி நமது வேதங்களிலும், புராணங்களிலும் எண்ணற்ற விளக்கங்கள் இருக்கின்றன.
குருவின் லக்ஷணங்களைப் பற்றி, வேதாந்த தேசிகர் 'ந்யாச விமசதி:' யில் ஒரு ஸ்லோகத்தின் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
"ஸித்தம் ஸத்ஸம்ப்ரதாயே ஸ்திரதியமனகம் ச்ரோத்ரியம் ப்ரஹ்ம்நிஷ்டம்
ஸத்வஸ்தம் ஸத்யவாசம் ஸமயநியதயா ஸாதுவ்ருத்த்யா ஸமேதம்
தம்பாஸூயாதிமுக்தம் ஜிதவிஷயகணம் தீர்கபந்தும் தயாலும்
ஸ்காலித்யே சாஸிதாரம் ஸ்வபரஹிதபரம் தேசிகம் பூஷ்ணுரீப்ஸேத் "

நல்ல சம்பிரதாயத்தில் சித்தமுடையவரும், திடமான மனதுடையவரும், பாபமற்றவரும், சாஸ்திரங்களை அறிந்தவரும், ப்ரஹ்மத்தில் ஒன்றியவரும், ஸத்வ குனம் அதிகமாகப் பெற்றுள்ளவரும், உண்மை பேசுபவரும், நல்ல ஆசாரத்துடன் இருப்பவரும், டம்பம், பொறாமை போன்றவைகளில்லாதவரும், வெளிப் பொருட்கள் விஷயமான பற்றை வென்றவரும், எப்போதும் உறவினராக விளங்குபவரும், தயையுடையவரும், தவறுகளைத் திருத்துபவரும், தனக்குச் சேர்ந்தவர்களுக்கும், பிறருக்கும் நன்மையை விரும்புபவருமான குருநாதரை வணங்குகிறேன் - என்று கூறப்பட்டுள்ளது
.

ஒரு சீடனுக்கு இருக்க வேண்டிய லக்ஷணங்களை "ந்யாச விம்சதி:" பின்வருமாறு கூறுகிறது.
"ஸத்புத்தி: ஸாதுஸேவீ ஸமுசிதசரித: தத்த்வபோதாபிலாக்ஷீ
சுச்ரூஷூ: த்யக்தமான: ப்ரணிபதனபர: ப்ரச்னகாலப்ரதீக்ஷ:
சாந்தோ தாந்தோsனஸூய: சரணமுபகத: சாஸ்த்ரவிச்வாஸசாலீ
சிஷ்ய: ப்ராப்த: பரீக்ஷாம் க்ருதவிதபிமதம் தத்த்வத: சிக்ஷணீய: "

நல்ல மனதுள்ளவன், மஹான்களுக்குச் சேவை செய்பவன், சரியான நடத்தை உள்ளவன், தத்துவத்தை அறிய ஆர்வமுள்லவன், குருவின் சேவையையே கருத்தில் கொண்டிருப்பவன், அகந்தையற்றவன், குருவை நமஸ்கரிப்பதற்கு ஆர்வமுடனிருப்பவன், கேள்விகளை வினவத் தக்க தருணத்தை எதிர் நோக்குபவன், மனவடக்கம் பொருந்தியவன், புலனடக்கம் வாய்க்கப் பெற்றவன், பகைமையற்றவன், குருவிடம் சரணமடைந்தவன், சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டிருப்பவன் - தகுந்த பரீக்ஷையில் தேறிய நன்றியுள்ள இத்தகைய சீடனுக்கு விருப்பமாயுள்ளதான தத்துவம் கற்றுத்தரப்பட வேண்டும்.

இன்றைய கால குரு, சிஷ்யர்களுக்கும் இந்த லக்ஷணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆதி சங்கரர் மட்டுமே கோவிந்தபகவத் பாதரிடம் சீடனாக இருந்த போது இங்கு கூறப்பெற்ற சகல லக்ஷணங்களையும் பெற்றிருந்தார். அவரே லோக குருவாக உயர்ந்த போது, குருவிற்காக கூறப்பெற்ற அனைத்து லக்ஷணங்களையுமே பெற்றிருந்தார். அவர்தம் தாழ் பணிந்து பாரத புண்ணிய பூமியின் மக்களாகிய நாமனைவரும் நலம் பெறுவோமாக!

No comments:

Post a Comment