Thursday, 24 July 2014

பிரார்த்தனை....3

ரஷ்யாவில் ஒரு சிறிய தீவில் மூன்று பேர் வசித்து வந்தனர். அவர்கள் மக்கள் மத்தியில் இறைவன் அருள் பெற்ற புனிதர்கள் எனப் பிரபலமடைந்திருந்தனர். இது தீவிற்கு அருகில் இருந்த வேறொரு குருவுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. தன்னிடம் அங்கீகாரம் பெற்றால்தான் அவர்கள் உண்மையான குரு ஆக முடியும் எனச் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் அவர்களிடம் சென்று ஆசி பெற்று வந்தனர். ஒருநாள் அந்த மூவரும் எப்படியான மனிதர்கள் என்பதைப் பார்ப்பதற்காக அந்தத் தீவுக்குச் செல்ல அந்தக் குரு முடிவு செய்தார்.

அவர் மோட்டார் படகில் சென்று அந்த தீவை அடைந்தார். இந்த மூவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர். அவர் சென்றடைந்தது ஒரு காலை நேரம். இந்த மூவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்க்கும்போது கற்றறிந்த ஞானிகள் போலவே தெரியவில்லை. அவர்கள் படிப்பறிவற்ற, நாகரிகமற்ற, சாதாரண மனிதர்கள் போலவே இருந்தனர். ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் இறையருளால் கவர்ந்து வைத்திருந்த மூன்று ஞானிகள் குறித்த கற்பனையுடன் வந்திருந்த குருவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இனி அவர்களிடம் பேசுவதிலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என நினைத்தார்.

குருவைப் பார்த்த அந்த மூவரும் காலைத் தொட்டு வணங்கினர். குருவுக்குத் திருப்தி. குரு அவர்களிடம், “நீங்கள் புனிதர்கள் என நினைக்கிறீர்களா?”எனக் கேட்டார்.

அவர்கள், “இல்லை குரு. நாங்கள் படிக்காத பாமரர்கள். எங்களால் அவ்வளவு உயர்ந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால் நாங்கள் என்ன சொன்னாலும் கேட்காமல் மக்கள் எங்களைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றனர். நாங்கள் அவர்களைத் தடுக்க முயன்றோம். நீங்கள்தான் குரு. உங்களிடம்தான் போக வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை” என்றனர்.

இதைக் கேட்ட குரு, “சரி நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் உங்கள் பிரார்த்தனை என்ன?” எனக் கேட்டார். அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் சுட்டி, “நீ சொல். நீ சொல்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தனர். 

சற்று கோபம் அடைந்தாலும் குரு மீண்டும் மிகப் பொறுமையுடன் கேட்டார், “யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் யாராவது ஒருவர் சொல்லுங்கள்” என்றார்.
அந்த பாமரர்கள் மூவரும், “நாங்கள் கற்கத் தயாராக உள்ளோம். சரியான பிரார்த்தனை முறையை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் முயல்வோம்” என்றனர். 

ஆனால் பிரார்த்தனை பெரிதாக இருந்தால் நாங்கள் அதை மறந்துவிடக் கூடும் எனவும் கூறினர்.

குரு, சம்பிரதாயமான பிரார்த்தனை முறைகள் அனைத்தையும் கற்றவர். அவை மிகப் பெரியவை. மூவருக்கும் அது மிக நீளமானதாகத் தெரிந்தது. குரு அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்த பின்னும் அவர்கள் மறந்தனர். மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொடுத்தால்தான் நினைவில் கொள்ள முடியும் என வேண்டிக்கொண்டனர். 

 குருவுக்கு ஆத்திரம். இன்னொரு விதத்தில் மூவரும் முட்டாள்கள் என்பதில் மகிழ்ச்சி.

இவர்களைப் பற்றி எடுத்துக் கூறி மக்களை எளிதாகத் தன் பக்கம் திருப்பிவிட முடியும் என நம்பினார். குருவுக்கு அவர்கள் விடை கொடுக்கும் முன் குருவின் காலைத் தொட்டு வணங்கினர். மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் குரு விடை பெற்றார். 

அவர் படகில் ஏரியின் நடுவில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரும் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, “நில்லுங்கள், நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம். மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்” எனக் கேட்டனர். 

குரு அவர்கள் தண்ணீரின் மேல் ஓடி வந்ததையும், தண்ணீரின் மேல் நின்றுகொண்டு பேசுவதையும் பார்த்து அதிசயத்துவிட்டார். குரு, “என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பிரார்த்தனைதான் சரியானது. அதைத் தொடருங்கள்” என வணங்கினார்.

- Three Hermits என்னும் லியோ டால்ஸ்டாய் கதையின் சுருக்கப்பட்ட வடிவம் 

No comments:

Post a Comment