Thursday, 31 July 2014

குரு - சீடன்....8


 ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்கள் 

எல்லோரும் குரு ஆகிவிட முடியாது ! நீரில் மிதக்கின்ற பெரிய கட்டையால் பலரைத்தன் மீது ஏற்றி செல்லமுடியும் ; அதுவே சிறிய துண்டானால் ஒரே ஒருவன் அமர்ந்தாலும் அமிழ்ந்து போகும் . ஆதலால் கடவுளே குருவாக வருகிறார் ; மனித இனத்திற்கு வழி காட்டுகிறார் !

சற்குரு ஒருவர் மட்டுமே ! அவர் கடவுள் மட்டுமே ! ஆனால் உபகுருக்கள் பலர் இருக்கலாம் . நாம் ஒருவரிடமிருந்து எதையாவது கற்றுக்கொண்டால் அவரும் ஒரு உபகுருவே !!
கடவுளை அறிய உண்மையிலேயே நீ தாகம் கொண்டிருந்தால்உண்மையான குருமார்களை கடவுளே அவ்வப்போது உனக்கு அனுப்பி வைப்பார் . நீ சிரமப்பட்டு அவரை தேடி அலைய வேண்டியதில்லை !

மூன்று வகை வைத்தியர்கள் உள்ளனர் !

சிலர் நோயாளியின் நாடியைப்பார்ப்பார்கள் ; நோயாளியைப்பார்த்து ``இந்த மருந்தை சாப்பிடு `` என்று மட்டும் கூறி மட்டும் விரைந்துவிடுவார்கள் !இவர்கள் கடைத்தரமானவர்கள் . அதுபோல் உபதேசத்தை மட்டும் கூறி விட்டு அத்துடன் நின்று விடும் குருக்கள் உள்ளனர் ! தனது உபதேசத்தால் நன்மை விளைந்ததா இல்லையா --சீடனிடம் அது எங்கே தடுக்கி நிற்கிறது என்பதைப்பற்றி அவர்கள் அக்கறை கொள்ளமாட்டார்கள் !!

அடுத்த வகையினர் மருந்தைக்கூறுவார்கள் .அதை சாப்பிட மறுப்பவனிடம் பேசி , அந்த மருந்தை சாப்பிடுவதால் வரும் நன்மையை அவனுக்கு விளக்கி கூறுவார்கள் ; இவர்கள் நடுத்தரமானவர்கள் ! அதுபோல் நடுத்தரமான குருக்களும் உள்ளனர் . இவர்கள் விதவிதமாக விளக்கம் அளிப்பார்கள் அந்த உபதேசத்திற்கு ஏற்ப சீடன் நடக்க பல வழி காட்டுவார்கள் ! ஆனாலும் அது விளையாமல் போவதின் அடிப்படையை --தளைகளை உடைத்து மாற்ற சக்தி அற்றவர்களாய் இருப்பார்கள் !!

முதல்தர வைத்தியர்கள் உள்ளனர் ! மென்மையாக சொல்வதை நோயாளி கேட்காவிட்டால் பலவந்தமாக அவனை பணிய வைக்கவும் தயங்க மாட்டார்கள் ; தேவைப்பட்டால் நோயாளியின் மார்பின் மீது முழங்காலை வைத்து அழுத்தியாவது அவனுடைய தொண்டைக்குள் மருந்தை திணித்து விடுவார்கள் ! அதுபோல் உத்தம குருக்கள் --இறைவனை நெருங்கியவர்கள் சீடனின் மனத்தை அதன் தளைகளை தகர்த்து இறைவனிடம் திருப்ப தங்கள் வல்லமையை பயன்படுத்துவார்கள் !!

புதிய இடத்திற்கு போவதற்கு விபரம் தெரிந்த வழி காட்டி ஒருவனுடைய சொற்படி நடக்க வேண்டும் . பலருடைய யோசனையை கேட்கத்தொடங்கினால் குழப்பத்தில்தான் முடியும் . அவ்வாறே கடவுளை அடைவதற்கான பாதையிலும் உண்மை குரு ஒருவருடைய அறிவுரை மட்டுமே நம்மை மென்மேலும் உய்விக்கும் !

குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும் குரு என்பவர் கடவுளின் பிரதிநிதி என்பதை உணரவேண்டும் ! குரு சொல்வதை கடவுளுக்காக என்று அப்படியே ஒரு குழந்தை போல நம்பி நடந்தால்தான் இறை அனுபூதி கிட்டும் ! 

குழந்தையின் நம்பிக்கைதான் எத்தகையது பாருங்கள் ! ஒருவனை காட்டி ``இவன் உன் அண்ணன் `` என்று கூறுகிறாள் தாய் . அதனை நூற்றுக்கு நூறு அல்ல நூற்றி ஐம்பது சதவீதம் நம்பி விடுகிறது குழந்தை ! அத்தகைய நம்பிக்கை குருவிடம் வேண்டும் !! கடவுளுக்காக குருவிடம் நம்பிக்கை வைக்கும்போது கடவுளே குருவை மாற்றி சரியான குருவை அனுப்பி வைப்பார் !!

குரு ஆவதற்கு எல்லோரும் விரும்புகின்றனர் ; ஆனால் சீடனாக இருக்க யாருக்கும் ஆசையில்லை ! நல்ல சீடனே குருவாக உயர்த்தப்படுவான் !!
கடவுள் மனிதனுக்கு காட்சி அளித்து அவனுடன் பேசி மக்களுக்கு உபதேசிக்குமாறு ஆணையிட்டால் அந்த குருவின் வார்த்தைகள் எவ்வளவு வல்லமை உள்ளவை தெரியுமா ? அவைகள் மலைகளைக்கூட அசைத்து விட வல்லமை உள்ளவை ! அத்தகைய குருக்களின் உபதேசங்களே பூமியை புரட்டி போட்டிருக்கின்றன !!

ஆனால் மனித ஞானத்தில் விளைந்த சொற்பொழிவுகள் இருக்கின்றனவே , அவை எவ்வளவு நுட்பம் வாய்ந்தவையாய் இருந்தாலும் கவர்ச்சி உள்ளவையாய் இருந்தாலும் அதனை மக்கள் சில நாட்களே கேட்பார்கள் ; பிறகு மறந்தும் விடுவார்கள் !!

கங்கையைப்போன்றவர் குரு ! குப்பை கூளத்தை எல்லாம் மக்கள் கங்கையில் ஏறிகின்றனர் ; ஆனாலும் அந்த நதியின் புனிதம் குறைவது இல்லை ! அதுபோல நிந்தை , அவமானம் , வெறுப்பு , உபத்திரவங்கள் இவைகளால் அசைக்கபடாத ஆழ்ந்த சாந்தி அவரிடத்து நிலைத்திருக்கும் ! அல்லல் உறுவோர் அவரை அண்டினால் குருவின் சாந்தி அவர்களுக்கும் சமாதானத்தை உண்டாக்கும் !!

குரு ஒரு தோழியைப்போன்றவர் ! கிருஷ்ணனுடன் ராதை ஒன்றுசேரும் வரை தோழிக்கு ஓய்விருக்கவில்லை ! அதுபோல் கடவுளுடன் சீடன் ஒப்புறவாகும் வரை குருவின் பணி ஓய்வதில்லை ! அத்தகையவரே சிறந்த குரு !!!

No comments:

Post a Comment