Monday, 28 July 2014

பக்தி....3

குரு பக்தி

ஈச்வரனைக் காட்டிலும், குரு பெரியவர்;ஈசுவர பக்தியைக் காட்டிலும் குருபக்தி விசேஷம் என்கிறார்களே, ஏன்?என்று கேட்டால்: ஈசுவரனை யாரும் பார்க்கவில்லை. பிரத்தியக்ஷமாக நாம் பார்க்ககடிய ஒரு மனிதர் எப்போதும் சுத்தமாய், ஞானம் உடையவராய், அசைவு இல்லாத சித்தம் உடையவராய், அப்பழுக்கு இல்லாமல் நமக்குக் கிடைத்து விட்டால் நாம் எந்த மனச்சாந்திக்காக ஈசுவரனிடத்தில் போகிறோமோ அந்த சாந்தி இவரிடம் பக்தி செலுத்தினாலே கிடைத்து விடுகிறது. அதனால் தான்,




குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:குருர் தேவோ மஹேச்வர:|

என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ச்லோகத்தில் குருவுக்கும் 

பரமாத்மாவுக்கும் அபேதம் சொல்லியிருப்பது ஒரு விசேஷம். Incidental - ஆக இதிலேயே இன்னொரு விசேஷம், இதில் விஷ்ணு, சிவன் இருவரையும் சொல்லியிருப்பதால் இந்த ச்லோகத்தைச் சொல்லி நாம் குருவந்தனம் பண்ணினால் நமக்கு சிவ- விஷ்ணு அபேத பாவமும் உண்டாகி விடும். ஜகத்தை ஸ்ருஷ்டிப்பது, பரிபாலிப்பது போன்ற பல காரியங்கள் ஈசுவரனுக்கு இருக்கின்றன. அவை எல்லாம் குருவுக்கு இல்லை. அவனுக்கு ஆபீஸ் உண்டு;இவருக்கு ஆபீஸ் இல்லை. ஆபீஸ் இருக்கிறவனிடம் போய்த் தொந்தரவு கொடுப்பதைவிட ஆபீஸ் இல்லாமல் சும்மா இருக்கிறவரிடம் நம் காரியத்தை மிக எளிதாக முடித்துக் கொண்டு விடலாம். ஈச்வரனுக்கு என்ன என்ன உத்தமமான குணங்கள் எல்லாம் இருக்கின்றனவோ அவை எல்லாம் இந்த குருவிடத்தில் இருக்கின்றன. இவர் சுத்தமானவர், பொய் சொல்லாதவர்; வஞ்சனை தெரியாதவர்;இந்திரியங்களை எல்லாம் வென்றவர்;கருணை நிறைந்தவர்;மகா ஞானி. இவரைப் பிரத்யக்ஷமாக பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்கிறோம். பகவானையோ பிரத்யக்ஷத்தில் பார்க்க முடியவில்லை. ஆகவே குருவின் திருவடிக் கரங்களைப் பற்றிக்கொண்டு பக்தி செய்ய ஆரம்பித்துவிட்டால், ஈசுவர பக்தியினால் நமக்கு என்ன அனுகூலங்கள் உண்டாகின்றனவோ அத்தனையும் சுலபமாக உண்டாகிவிடும். அதனால் தான் குருபக்தி ¢உயர்ந்தது என்ற சொன்னார்கள்.

ஆனால் தெய்வ பக்தியை மறக்கக்கூடாது. இந்த குருவை இவனோடு சேர்த்து வைப்பதே தெய்வந்தானே? தெய்வ அநுக்ரகம் இல்லாவிட்டால் இந்த குருவை இவன் எப்படி அடைவான்? 

 துர்லபம் த்ரயமேவைதத் தேவாநுக்ரஹ ஹேதுகம்| மநுஷ்யத்வம் முமுக்ஷ§த்வம் மஹாபுருஷஸம்ச்ரய:| '' 

தெய்வாநுக்ரஹத்தாலேயே ஒருத்தனுக்குக் கிடைக்கிற மூன்று பெரிய வாய்ப்புகள்: 

ஒன்று, மநுஷ்ய ஜன்மா கிடைப்பது. 
இரண்டு, ஸத்ய தத்துவத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை பிறப்பது; 
மூன்று, மஹா புருஷனான ஒரு குரு கிடைப்பது''

என்று ஆசார்யாள் 'விவேக சூடாமணி' ஆரம்பத்தில் சொல்லியிருக்கிறார். 

எல்லோருக்கும் எக்காலத்திலும் குரு ஈச்வரன்தான்: தக்ஷிணாமூர்த்தி தான். ஸ பூர்வேஷாமபி குரு:காலேநாநவச்சேதாத்|| நம் குருவுக்கும் அந்த குருவுடைய குருவுக்கும் அவருடைய குருவுக்கும் ஞானம் எப்படிப் பூர்ணமாக ஏற்பட்டிருக்கும்?இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு குருவைச் சொல்லிக்கொண்டே போனால் கடைசியில் ஒருத்தருக்கு ஸாக்ஷ£த் ஈசுவரனேதான் குருவாக இருந்து ஞானத்தை தந்திருக்க வேண்டும் என்று தெரியும். அதனால்தான் தெய்வத்தை மறக்கக் கூடாது என்றார்கள். இதையே வேறு விதமாகவும் சொல்வதுண்டு. குரு, ஈசுவரன் என்ற இரண்டு பேர் என்று வைத்துக் கொள்ளாமல் ஈசுவரனே குருவாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டு விட்டோமானால் குரு பக்தி, ஈசுவர பக்தி என்ற இரண்டு தனித்தனியாகப் பண்ணவேண்டாம். குருவே ஈசுவரன் என்று கருதி அந்த குருவான ஈசுவரன் ஒருத்தனிடத்திலேயே பூர்ண் சரணாகதி பண்ணிவிடலாம். குரு பரம சுத்தமானவராக, உத்தமமானவராக இல்லாவிட்டாலும்கூட, இவர் மூலமாக நாம் நித்திய சுத்தனும் உத்தமோத்தமனுமான ஈசுவரனையே பக்தி பண்ணுவதால், அந்த ஈச்வரனே இவர் மூலமாக நமக்கு அநுக்கிரஹம் பண்ணிவிடுவான். இதனால் தான் குருவையே ப்ரம்மா, விஷ்ணு, சிவன், இந்த மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம் என்று எடுத்த எடுப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர :|

குருஸ் ஸாக்ஷ£த் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம :|| 

No comments:

Post a Comment