Wednesday, 30 July 2014

குரு - சீடன்....7

இரவில் ஞான நூலைப் படித்துக் கொண்டிருந்தார் குரு.

 திருடன் ஒருவன் சத்தமில்லாமல் உள்ளே புகுந்தான், காலில் ஒரு பாத்திரம் பட்டு உருண்டது. குரு, 

“சத்தம் செய்யாதே, என் கவனம் சிதறுகிறது” என்றார்.

பயந்த திருடன் கத்தியை எடுத்து குருவை குத்த நினைத்தான். அவனைப் பார்க்காமலேயே, “உனக்கு பணம்தானே வேண்டும்?” அந்த இழுப்பறையில் இருப்பதை எடுத்துக் கொள்” என்றபடி மீண்டும் படித்தார்.
இழுப்பறையில் இருந்த பணத்தை திருடன் எடுத்தபோது, “நாளைக்கு வரிக்கட்ட வேண்டும். அதற்கு மட்டும் கொஞ்சம் வைத்துவிட்டு மீதி எல்லாவற்றையும் எடுத்துக் கொள்’ என்றார் குரு.


கொஞ்சம் பணத்தை வைத்துவிட்டு வாசல் நோக்கி நடந்த திருடனிடம் அவனைப் பார்க்காமலே, “கொடுத்தவனுக்கு நன்றி சொல்ல வேண்டும், நன்றியில் தான் நல்ல விஷயங்கள் ஆரம்பமாகும்” என்றார்.
“நன்றி” என்று திக்கி தடுமாறி சொன்ன திருடனிடம் “கதவை சாத்திவிட்டு போ, இல்லயேல் காற்றில் விளக்கு அணைந்துவிடும்” என்றார் குரு. கதவை சாத்திவிட்டு ஓடினான் திருடன்.


சில நாட்களுக்கு பின் காவலர்களிடம் மாட்டிக் கொண்டு சிறைப்பட்டான் திருடன். எங்கெங்கு திருடினான் என்றஉண்மையைக் காவலர்களிடம் சொல்ல, குருவும் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

“இவன் எனக்கு எந்த கெடுதலும் செய்யவில்லையே; அவனுக்கு பணத்தேவை இருந்ததால் நான்தான் கொடுத்தேன். அவனும் நன்றி சொல்லிவிட்டு சென்றான். இதை அவனிடமே கேளுங்கள். நான் சொல்வது உண்மைதானே அப்பா?” என்றார் குரு.


திருடன் கண்களில் கரகரவென கண்ணீர் வழிந்தது. பின்னாளில் அவன் குருவின் சீடனாகிவிட்டான்


அதிகாரமும், சட்டமும் செய்யமுடியாத மன மாற்றத்தை அன்பு ஒரு நொடியில் செய்துவிடும்

No comments:

Post a Comment