Sunday 19 June 2022

இறைவனின் பொதுத் தன்மைகள் - சைவசித்தாந்தம்

 


1. இறைவன் தோற்றமும் அழிவும் இல்லாதவன். அதாவது பிறப்பு, இறப்பு இல்லாதவன்.


2. உயிர்களைப் போல் மலங்களினால் என்றைக்கும் பிணிக்கப் படாதவன். 

3. இறைவன் ஓர் உருவமாகவோ, ஒரு பொருளாகவோ விளங்காது அதிசூட்சுமப் (உருவமற்ற) பொருளாக விளங்குபவன். 

4. படைத்தல் (உயிர்களை), காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும்     அவன் செய்கின்றான். அதைத் திருவிளையாடல் என்று குறிப்பிடுவர். மேலும் மறைத்தல், அருளல் என்ற இருதொழில்களை உயிர்களுக்கு அருளின் பொருட்டுச் செய்கின்றான். உயிர்களின் அறிவை மறைப்பது ஆணவ மலமாகும். அந்த மறைக்கும் ஆற்றலைத் தூண்டி உலக இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்து தன்னைக் காட்டாது ஆணவ மலத்தின் சக்தி ஒடுங்க உயிர்களை அனுபவிக்கச் செய்வது மறைத்தலாம். அருளல் என்பது ஆணவமலம் அடங்க அடங்க உயிர்களை அருளை நோக்கி வரச்செய்தல் ஆகும். 

5. அவ்வாறு தொழில்களைச் செய்யும்போது தான் தனித்து நின்றும், உயிர்களோடு உடனாக நின்றும் செய்கின்றான். 

6. குறிப்பிட்ட உருவம் இல்லாதவன். தன் தொழில்களைச் செய்ய, உயிர்களுக்கு அருள் வழங்குதற்கு ஏற்ப வேண்டும் வடிவங்களை எடுத்துக் கொள்வதும் உண்டு. அவ்வாறு உருவம் எடுப்பது உயிர்களுக்கு உதவும் பொருட்டே ஆகும். 

7. இறைவனின் உருவத்தைத் திருமேனி என்று கூறுவர். இவை மூன்றாகும். அருவம், உருவம், அருவுருவம் என்பவை அவை. அருவம் என்பது கண்களுக்குப் புலப்படாதது. அவ்வாறு புலப்படாத சக்தியாய் நின்று இறைவன் உயிர்களுக்கு அருள்புரிகின்றான். உருவம் என்பது கண்களுக்குப் புலப்படுவது; உயிர்களுக்கு ஞானம் தருகின்ற பொழுது ஞானாசிரியர் வடிவில் தோன்றி அருள்புரிவது. அருவுருவம் என்பது புலப்பட்டும் புலப்படாதும் நிற்பது. அதாவது நம் போன்றவர்களுக்குப் புலப்படாது ஞானிகளாகிய உயிர்களுக்குப் புலப்படுகின்ற திருமேனி. இவ்அருவுருவவடிவத்தை அறிவுறுத்துவதற்குத் திருக்கோவில்களில் இலிங்கவடிவம்     அமைந்துள்ளது.

பொதுவாக, இறைவன் உருவமில்லாது இருப்பதுதான் அடிப்படை இலக்கணமாகும். தன் பொருட்டன்றி உயிர்களுக்கு அருள் தருவதற்காகவே இவ்வடிவத்தைப் பெறுகின்றான். இவ்வாறு என்றும் உள்ளவனாய், பிறப்பு இறப்பு அற்றவனாய், தனக்கென உருவம் அற்றவனாய், உயிர்களுக்கு அருளும் பொருட்டு மூவகைத் திருமேனிகளைக் கொண்டவனாய், ஐந்து தொழில்களைச் செய்கின்றவன் இறைவன் ஆவான் என்பது இதுவரை கூறப்பெற்றது.

No comments:

Post a Comment