Monday 27 June 2022

கம்ப ராமாயணம் - ஒரு பாடல்

ராமனின் அம்புத் துளைத்து, ராவணன் மாண்டு போனான். மண்டோதரி கணவன் மேல் விழுந்து புலம்புகிறாள் .. 

"எத்தனை முறை சொன்னேன் ! வேண்டாம்  அந்த மகராசி. அவள் நம் வம்சத்தையே  கெடுக்க வந்தவள் போல எனக்குத் தோன்றுகிறாள். விட்டு விடு  ராசா  என்று  எத்தனை முறை உங்களிடம் கெஞ்சினேன். காதில் வாங்கிக் கொள்ளவேயில்லையே.

இன்று அவள் கணவன் கையால் அடிபட்டு இறந்து என்னையும் நட்டாத்தில் விட்டு விட்டீர்களே.  அதுவும் சும்மாவா ராகவனின் அம்பு பாயந்திருக்கிறது. உடம்பில் ஒரு இடம் இல்லாமல் துழாவிக் கொண்டு சென்றிருக்கிறதே . அந்த ஜானகியின்  மேலுள்ளக் காதல்  உங்கள் உடம்பின் எந்த மூலையிலாவது ஒளிந்திருந்தால் ,அதை விட்டு விடக் கூடாது என்பது போலல்லவா துளைத்திருக்கிறது. 

தேவையா இது உங்களுக்கு.

மாற்றான் மனைவி மேல் காதல் வயப்பட்டால், இந்த நிலை தான் உருவாகும்." என்று மண்டோதரி அழுது புலம்புவதாக கம்பர் எழுதியிருக்கிறார்.  







ராவணின் அம்பு ராவணனின் உடலைத் துளைத்துக் கொண்டு சென்றதை இதை விட அருமையாக யாராலும் சொல்லிவிட முடியுமா என்ன?

      'வெள் எருக்கஞ் சடை முடியான் வெற்பு எடுத்த 
                      திரு மேனிமேலும் கீழும்
        எள் இருக்கும் இடன் இன்றிஉயிர் இருக்கும் 
                     இடன் நாடிஇழைத்தவாறோ?
        "கள் இருக்கும் மலர்க் கூந்தல் சானகியை
                     மனச் சிறையில் கரந்த காதல்
         உள் இருக்கும்'' எனக் கருதிஉடல் புகுந்து
                    தடவியதோ ஒருவன் வாளி?

ஒப்பற்ற ராமபிரானின் அம்பு,வெள்ளை எருக்கம் பூவை சூடும் சிவபெருமானுடைய , கயிலை மலையைத் தூக்கிய ராவணனுடைய அழகிய உடலின் மேல் பகுதியிலும், கீழ்ப் பகுதியிலும், எள் இருக்க இடம் கூட இல்லாமல், உயிர் இருக்கும் இடம் முழுதும் தேடி ஆராய்ந்த வண்ணம் சென்றதோ?தேன் குடிக் கொள்ளும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய சீதாதேவியை மனம் எனும் சிறையில் ஒளித்து வைத்திருந்த காதலானது, உள்ளே இன்னும் எங்காவது பதுங்கியிருக்கும் என்று எண்ணி உடல் முழுதும் நுழைந்து, தடவிப் பார்த்ததோ.

ஆஹா.... இதை விடவும், ஒழுக்க சிந்தனையை நான்கு வரிகளில் படம் பிடித்துக் காட்ட கம்பனைத் தவிர யாரால் முடியும் சொல்லுங்கள்.

நன்றி: இணையம் 

No comments:

Post a Comment