Thursday 29 September 2022

காலமறிதல் - 3

 பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.


கல் நேரத்தில் காக்கை கூகையைக் கண்டால், கொத்தித் துரத்தி விடுகிறது. பகல் நேரத்தில் கூகைக்குக் கண் பார்வை குறைவு. ஆந்தையும் கூகையும் இரவுப் பறவைகள். இரவில் அவற்றுக்கு நன்றாகக் கண்தெரியும். காக்கை பகற் பறவை. இரவில் அதற்குப் பார்வை சக்தி குறைவு.

கூகையின் பலவீனப் பொழுது, பகல் என்பதால் அதைப் பயன்படுத்தி காக்கை கூகையை வெல்ல முடிகிறது.

அது போல அரசர்க்கும் தகுந்த காலம் வேண்டும். எதிரியின் பலவீனமான காலம் தனக்கு சாதகமான காலம். அதைப் பயன்படுத்தினால் தான் வெற்றி கிடைக்கும். எனவே அத்தகு காலத்தை எதிர்பார்க்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

தகாத காலத்தில் போர் தொடுத்து, பாலைவனப் பகுதிகளில் குடிக்க நீரும், உணவும் கிடைக்காமல், மாண்டு மடிந்த படைகளை வரலாறு காட்டுகிறது. கொட்டும் பனியில் மாட்டிக் கொண்டு ஹிட்லரின் படைகள் ரஷ்யப் பகுதியில் பேரிழப்பும், படுதோல்வியும் கண்டது. காலம் பார்ப்பது என்பது பருவம் பார்ப்பதும் ஆகும். படை எடுக்கும் மன்னவர்கள் தகுந்த காலத்தையும், சகுனத்தையும் உணர்ந்தே போர் தொடுத்தார்கள் என்பதை சங்க இலக்கியப் பாடல்களும் காட்டுகின்றன.

“வாட்கோள்” என்பது புற இலக்கியங்களில் ஒரு தனித்துறை. கொற்றவையை வணங்கி, வாளுக்குப் பூஜைசெய்து, சுபவேளையில் அந்த வாளைக் கோவிலிலிருந்து எடுத்துப் புறப்படுவதே வாட்கோள் என்பதாகும்.

சித்தர்களின் இலக்கியத்தில் நாசியில் ஓடும் சரம் கணக்கிட்டு, அதற்கேற்ற ஆயுதத்தை எடுத்துப் போர் செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இருக்கிறது. சரத்திற்கு ஏற்றபடி எந்தத் திசையில் நின்று போர் செய்ய வேண்டும் என்று கூடக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இக்கருத்துகளை எல்லாம் கூட, இக்குறட் கருத்துடன் இணைத்து வைத்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment