Monday 12 September 2022

ஆனைக்குப்பு

அரசர்களின் விளையாட்டு என வருணிக்கப்படும் செங்களம் (Chess), இருவர் விளையாடும் ஒரு பலகை விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டுக்குத் தமிழில் ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் இவ்விளையாட்டில் பயன்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இரண்டு நிறங்களில் காய்கள் அமைந்திருப்பது வழக்கம்.

விளையாடும் பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும். செங்களம் அதிட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு விளையாட்டு அன்று. மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானவையாகும். தற்காலங்களில் இவ்விளையாட்டானது பாடசாலைப் பாடவிதானத்திலும் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகம் பூராகவுமுள்ள பல மில்லியக்கணக்கான மக்களால் வீடுகளில், பூங்காக்களில், கழகங்களில், இணையத்தளத்தில், கணினியிலும் போட்டித்தொடர்களாகவும் விளையாடப்பட்டு வருகிறது.


செங்களம் மனித இனத்தின் பிரபல விளையாட்டுகளில் ஒன்றாகும். இது ஒரு விளையாட்டாக மட்டுமன்றி, ஒரு கலையாகவும் அறிவியலாகவும் கூட வர்ணிக்கப்படுவதுண்டு. இது சில சமயம் ஒரு போர் விளையாட்டாகவும், "மூளை சார்ந்த போர்க்கலை"யாகவும் பார்க்கப்படுவதுண்டு. பல விதமான சதுரங்க விளையாட்டுகளும், அதனுடன் தொடர்புடைய சில விளையாட்டுகளும் உலகமெங்கிலும் விளையாடப்படுகின்றன. 

ஒருவருடைய பகுதியில் (வெள்ளை/ கறுப்பு) ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள் மற்றும் எட்டு சிப்பாய்கள் காணப்படும். ஒவ்வொரு வகையான காயும் விதம் விதமாக நகரக்கூடியவை.



No comments:

Post a Comment