Sunday, 15 January 2023

மகரிஷி அவர்களுடன்............1

மகரிஷி அவர்களை எப்போது தெரிந்துகொண்டீர்கள், தொடர்பு கொண்டீர்கள், எப்போது தீட்சை பெற்றீர்கள், அவரிடம் தாங்கள் பெற்ற அனுபவங்கள் இவற்றினை பகிர்ந்து கொள்ளுங்கள் எனப் பல ஆண்டுகளாக நண்பர்களும், அன்பர்களும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தொடரில் எனது அனுபவங்களை அவ்வப்போது எழுத எண்ணியுள்ளேன். முதலில் மகரிஷி பற்றி அறிந்துகொண்ட  முதல் நிகழ்ச்சி -

எனக்கு அப்போது 14 அல்லது 15 வயதிருக்கலாம். எனது மூத்த சகோதரர் திரு சுவாமிநாதன் அவர்கள் ஒரு திருமண நிகழ்ச்சிக்குச் சென்று வந்து அந்த திருமணம் எப்படி  நடைபெற்றது என்று வீட்டில் உள்ள அனைவரிடமும் விரிவாகச் சொன்னார். அவர் மயிலாடுதுறை விவசாய அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம்...முதுநிலைப் பேராசிரியர் முனைவர் லட்சுமணனும் அங்குதான் பணியாற்றிக்கொண்டிருந்தார் என நினைக்கின்றேன்.

எனது சகோதரர் சொன்னது :

"திருமணம் மிக, மிக எளிமையாக நடைபெற்றது. ஒரு பெரியவர் மணமக்களை அழைத்து அவர்கள் பெற்றோர்களிடமும், சபையோரிடமும் ஆசி பெற வைத்தார். பிறகு தவம் நடத்தினார்.  

கால் மணி நேரம் தவம் முடிந்த பிறகு சபையோரை 'மணமக்கள் பெயர்களை சொல்லி வாழ்த்தச்' சொன்னார். மணமகன் மணமகளுக்கு தாலி கட்டினார். பிறகு அவர் மணமக்களை வாழ்த்திப் பேசினார். வந்திருந்த பெரியவர்கள் இருவர் மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நிறைவு பெற்றது. மிக குறைந்த செலவில் நடைபெற்ற திருமணம் இது. இதுபோல எல்லோரும் கடைபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என பலரும் பேசிக்கொண்டார்களாம்."

எனது சகோதரர் அந்த பெரியவரிடம் பெற்ற பாக்கெட் சைஸ் சிறு கையேட்டினைக் காட்டினார். 

அந்த கையேடு இன்றுவரை என்னோடுதான் உள்ளது. கிட்டத்தட்ட 55 ஆண்டுகளாகிவிட்டதால் நைந்து போய் விட்டாலும் பத்திரப்படுத்தியுள்ளேன்.

பிறகு  அந்த பெரியவர்தான் அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி என்று அறிந்துகொண்டேன்.

அந்த கையேட்டின் scan பக்கங்கள் கீழே தந்துள்ளேன் - 

 










மேற்கண்ட கையேட்டில் 

1. தவம் கற்க தகுதி - ஆணாக இருந்தால் வயது 21க்கு மேலும், பெண்ணாக இருந்தால்  40க்கும் மேலும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள் 

2. வாழ்க வையகம், வளர்க நன்னெறி என வாழ்த்தியுள்ளார்கள் 

3. உலக நண்பன் எனத் தன்னை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment