Tuesday 10 January 2023

BUGHOUSE CHESS

விளையாட்டுகளிலேயே ரொம்பவே பழைமையான ஒன்று சதுரங்க ஆட்டம். விளையாடப்படும் முறையில் தொடங்கி, பின்பற்றப்படும் விதிமுறைகள், பயன்படுத்தப்படும் காய்கள் வரை பல மாற்றங்களை இந்த ஆட்டம் கண்டிருக்கிறது. இப்போது 64 கட்டங்களுடன் 32 காய்களோடு உலகம் முழுக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விதிமுறையின் அடிப்படையில் ஆடி வருகிறோம்.

வரலாறு நெடுகவும் இந்த ஆட்டம் பல மாற்றங்களை எதிர்கொண்டிருக்கிறது எனும்போது சமகாலத்தில் அது என்ன மாதிரியான உருமாறுதல்களுக்குள் சென்று கொண்டிருக்கிறது? இந்தக் கேள்வியிலிருந்துதான் மூன்று அல்லது நான்கு பேர், அல்லது ஒரே நேரத்தில் இரண்டு போர்டுகளில் ஆடும் ஆட்டத்தை நோக்கி செஸ் நகர்ந்திருக்கிறது.

இயல்பில் நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் செஸ் போர்டின் வடிவமைப்பு இருவர் மட்டுமே ஆடுவதற்கானது. அதில், கூடுதல் நபர்கள் ஆடினால் காமெடியாகத்தான் முடியும். மூன்று அல்லது நான்கு நபர்கள் ஆடுவதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செஸ் போர்டுகளும் இருக்கின்றன. இந்த வகையிலான போர்டுகள் வட்டமாகவோ அல்லது அறுகோணமாகவோ அல்லது வழக்கத்தைவிடப் பெரிய அளவிலான சதுரமாகவோ காணப்படும். 64 கட்டங்களும் 32 காய்களும் வழக்கமாக ஆடும் ஆட்டத்தில் பயன்படுத்தப்படும். இங்கே ஆடுபவர்கள் அதிகரிப்பதால் 96 கட்டங்கள் 160 கட்டங்கள் கொண்ட போர்டுகளுமே பயன்படுத்தப்படுகின்றன. மேலும், 48 முதல் 64 காய்களும் இங்கே பயன்படுத்தப்படும். ஆன்லைனிலும் இரண்டுக்கும் மேற்பட்டோர் ஆடும் வகையிலான ஆட்டங்கள் கிடைக்கின்றன. இவற்றில் போர்டுகளின் வடிவத்தைப் பொறுத்து காய்களின் நகர்வுகளில் சில சிறு சிறு மாற்றங்கள் இருக்கக்கூடும்.


‘Bughouse Chess' என்பதும் செஸ்ஸின் இன்னொரு உருமாறிய வகைதான். ஒரே நேரத்தில் இரண்டு போர்டுகளில் ஆடப்படும் ஆட்டமாக இதைப் புரிந்துக்கொள்ளலாம். இரண்டு போர்டுகளில் ஒரே நேரத்தில் எனும்போது ஒரே வீரர் இரண்டு போர்டுகளிலும் நகர்வுகளைக் செய்வாரா என்றால் நிச்சயமாக இல்லை. இது இரண்டு வீரர்கள் இணைந்து அணியாக ஆடும் ஆட்டம். இருவரில் ஒருவர் கறுப்புக் காய்களுடன் ஒரு போர்டிலும் இன்னொருவர் வெள்ளைக் காய்களுடன் இன்னொரு போர்டிலும் ஆடுவர். எதிரணியிலும் அதேமாதிரியே. கறுப்புக் காய்களுடன் ஆடும் வீரர் தன்னுடைய போட்டியாளரின் வெள்ளைக் காய்களைக் கைப்பற்றினால், அந்த வெள்ளைக் காய்களை இன்னொரு போர்டில் வெள்ளைக் காயுடன் ஆடிக்கொண்டிருக்கும் தன்னுடைய அணியின் வீரருக்குக் கொடுக்க வேண்டும். தன்னுடைய சக வீரர் மூலம் கிடைத்த காயை ஆட்டத்தில் எந்த நிலையிலும் இவர் பயன்படுத்திக்கொள்ள முடியும். மற்றபடி விதிமுறைகளும் நகர்வுகளும் வழக்கமான செஸ் ஆட்டத்தை ஒத்ததுதான். ஆயினும் வழக்கமான ஆட்டத்தைவிட அதிக சுவாரஸ்யத்தைக் கொடுக்கக்கூடியது.

மேக்னஸ் கார்ல்சன் போன்ற உலக சாம்பியன்களுக்குக்கூட விருப்பமான ஆட்ட வகை இது.

Standard, Rapids, Blitz, Bullets போன்றவை செஸ்ஸில் ஆடும் நேரத்தின் அடிப்படையில் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை. ஆனால், இதைக் கடந்தும் Crazy house, hexagonal, atomic என செஸ்ஸிலேயே இன்னும் பலவடிவத்தில் பலவிதமாகவும் ஆட்டங்கள் ஆடப்பட்டு வருகின்றன. இவற்றிற்கு ஆதரவான ஒரு தரப்பு இருந்தாலும் இந்த மாதிரியான உருமாறிய வடிவங்களில் ஈடுபாடில்லாதவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

விஸ்வநாதன் ஆனந்தேகூட இந்த மாதிரியான வடிவங்களில் முழுத் திருப்தியுடையவர் இல்லை. ``கார்ல்சன்கூட ரெண்டு போர்டுல செஸ் ஆடிப் பார்த்திருக்கேன். எப்டி ஒரு போர்ட்ல இருக்குற காயின்ஸ் வச்சு இன்னொரு போர்ட்ல ஆட முடியும்? என்னால அவங்க வேகத்துக்கெலாம் ஆட முடியல. இதுல என்ன க்ரியேட்டிவிட்டு இருக்கும்னும் தெரியல. புக்ஸ் வச்சு செஸ் பயிற்சி எடுக்குறது போரடிக்குதுன்னு நினைக்குறவங்க இதைப் பண்ணலாம். ஆனா, இது எதுவுமே அடுத்த கட்டத் துக்குப் போகல. அதுவரைக்கும் சந்தோஷம். அதேநேரத்தில், நான் குறுகிய வடிவ செஸ் போட்டிகளுக்கும் எதிரி அல்ல. க்ளாசிக்கல் செஸ்தான் எனக்குப் பிடிச்சிருக்கு.’' க்ராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ‘ஆனந்த விகடன்' இதழுக்கான பேட்டி ஒன்றில் இந்த விஷயத்தைப் பகிர்ந்திருந்தார்.

நேரெதிராக நின்று மோதிக்கொள்ளும் இரு போர்ப்படைகள் என்பதுதான் செஸ்ஸின் அடிப்படையே. எனில், இந்த உருமாறுதல்கள் செஸ்ஸின் அடிப்படையையே குலைத்துவிடாதா எனில், அதற்கான பதில் இல்லை. ஆனால், இப்படியான மாற்றங்கள் எல்லா விளையாட்டிலுமே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கிரிக்கெட்டே டி20 என்கிற வடிவத்தையும் தாண்டி The Hundred, T10 எனச் சுருங்கத் தொடங்கிவிட்டது. விதிமுறைகளிலும் எக்கச்சக்க மாற்றங்கள் வரத் தொடங்கிவிட்டன. வீடியோ கேம்ஸுக்கு இணையான வேடிக்கைகளை நிகழ்த்தும் வகையில் விதிமுறைகளை வகுத்துவருகிறார்கள். ஆக, இந்த மாதிரி கொஞ்சம் வினோதமான, வேடிக்கையான மாற்றங்களை அத்தனை விளையாட்டுகளுமே எதிர்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் செஸ்ஸுமே இதற்கு விதிவிலக்கல்ல என்பதே நிதர்சனம்.



நன்றி - விகடன் 

No comments:

Post a Comment