Tuesday, 10 January 2023

மனதால் சாப்பிடுவது எப்படி?

 

எல்லோரும்தான் சாப்பிடுகிறோம்... 

ஆனால் எப்படிச் சாப்பிடுகிறோம்..?

`வாயாலதான்... வேறெப்படி..?’ என்ற க்ரின்ஜ் டைப் பதில்களுக்கு ‘ஸாரி!’


மனதால் சாப்பிடுவது என ஒன்று இருப்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்? 

‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ என்று ஆங்கிலத்தில் சொன்னால் ஒருவேளை புரியலாமோ என்னவோ! 

மைண்ட்ஃபுல் ஈட்டிங் குறித்தும், அதன் பலன்கள் குறித்தும் விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆலோசகரும் பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன்.

`இந்த ‘மைண்ட்ஃபுல்னெஸ்’ என்பதை மனந்தெளிநிலை என்றும் தமிழ்ப்படுத்தலாம். ஒருவர் அத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள்மீது குவிக்கும் கவனத்தைக் குறிக்கும் இந்த கான்செப்ட்டை பௌத்த மதம் பெரிதும் வலியுறுத்துகிறது. மைண்ட்ஃபுல்னெஸ் என்பதும் ஒருவித தியானநிலை. இந்த டெக்னிக், உண்ணுதல் தொடர்பான கோளாறுகள், மனப்பதற்றம், மன அழுத்தம் எனப் பல விஷயங்களை சமாளிக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.


மைண்ட்ஃபுல் ஈட்டிங் என்பதற்கும் உணவிலுள்ள கலோரிகள், கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் போன்றவற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்ணும்போதான நிகழ்தருணத்தை மனதார ரசித்து அனுபவிக்கச் செய்வதுதான் இதன் நோக்கம். எப்படிப்பட்ட உணவுப்பழக்கத்துக்கும் பொருந்துகிற பிரத்யேக திறமை இது. மிக அடிப்படை உணர்வான இதில் உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டியது முக்கியம். சுவை, பதம், மணம் என உணவின் அனைத்து அம்சங்களையும் உணர்ந்து சாப்பிட வேண்டியதுதான் நோக்கமே. இந்த டெக்னிக்கைப் பழகுவதன் மூலம், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒருவர் சாப்பிடும்போது தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. சரியான எடை நிர்வகிக்கப்பட உதவுகிறது. சரிவிகிதமாகச் சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குகிறது.

மைண்ட்ஃபுல் ஈட்டிங் என்ற கான்செப்ட்டைப் பின்பற்றுவோருக்கு உணவு அனுபவம் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்பதால், அவரது எண்ணமெல்லாம் அந்த அனுபவத்தை ரசிப்பதிலும் பாராட்டுவதிலும்தான் இருக்கும். என்ன சாப்பிடுவது, எவ்வளவு சாப்பிடுவது என்பதை அவரே தீர்மானிப்பார்.



மைண்ட்ஃபுல் ஈட்டிங்... மனதில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்!


மெதுவாகச் சாப்பிடுவது, மென்று சாப்பிடுவது.

கவனச்சிதறல் இல்லாமல் சாப்பிடுவது.மனது ‘போதும்’ என்று சொன்னதும் சாப்பிடுவதை நிறுத்திவிடுவது.


எப்படிப் பழக்கப்படுத்துவது?


உண்மையான பசிக்கும், பசியைத் தூண்டும் விஷயங்களுக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

உணவின் நிறம், சுவை, வாசனை, பதம் என அணு அணுவாக ரசித்து அனுபவித்துச் சாப்பிட வேண்டும்.

நீங்கள் உண்ணும் உணவானது உங்கள் தோற்றத்தில் மட்டுமன்றி, உணர்வுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களையும் உணர வேண்டும்.

உணவைப் பாராட்ட வேண்டும், உணவுக்கு நன்றி செலுத்த வேண்டும்.




No comments:

Post a Comment