Saturday, 21 October 2023

விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை

வாழ்வில் கருத்து வேறுபாடுகள் என்பது சாதாரணம். நண்பர்களாக இருந்தாலும், கணவன் - மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலொழிய வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையாது. ஒருவர் மேல் கொள்ளும் அதிகமான அன்பின் காரணமாக அவர் செய்தது, நாம் விரும்பாததாக இருப்பினும்  விட்டுக் கொடுத்துச் செல்கிறோம். அன்பு நிலைத்திருக்க விட்டுக் கொடுத்து வாழ்தல் இன்பம் பயக்கும். இதனால் உறவு பெருகும்.

இயன்றவரை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப்போவதில்லை. விட்டுக்கொடுக்க வேண்டிய நேரத்தில் அதை அன்புடனே விட்டுக்கொடுக்க வேண்டும். பிடிவாதம் கூடாது. எந்த நிகழ்வுகளையும், சிக்கல்களையும் மென்மையாகக் கையாளுங்கள். சில நேரங்களில் சில வருத்தங்களையும் பொறுத்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.

ஒரு அடர்ந்த காடு. அந்தக் காட்டின் நடுவே குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒருநாள் அந்தப் பாலத்தைக் கடப்பதற்காக இரண்டு ஆடுகள் எதிர் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறு முனையிலும் நின்றன. அந்தப் பாலத்தை ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தைக் கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன. முதலாவது ஆடு, "எனக்கு வழி விடு. நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே இரண்டாவது ஆடு "நான்தான் முதலில் வந்தேன்; எனக்கு நீதான் வழி விட வேண்டும்" என்றது.

இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும்போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன. ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்களின் தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன. விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லாததால் அவை தங்கள் பிடிவாதத்தால் மரணித்தன.

வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார்- மருமகள் உறவிலாகட்டும், கணவன்- மனைவி உறவாகட்டும் இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு பிடிவாத குணமே காரணம். நண்பர்கள் இடையே பிரிவு வருவதும் இந்த எண்ணத்தினால்தான்.

விட்டுக் கொடுத்தால் வேதனை இல்லை. வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது. விட்டுக் கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை. அடைவதுதான் அதிகம். விட்டுக் கொடுப்பதால் நம் உறவை வலிமைப்படுத்துகிறோம், நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம். பகைமையை விரட்டுகிறோம். விட்டுக் கொடுத்தலில் விவேகம் உண்டு. வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு.                  Thanks Kalki Online


No comments:

Post a Comment