Wednesday, 27 December 2023

மகரிஷி அவர்களுடன்...........12

நான் மகரிஷி  அவர்களிடம் கேட்ட முதல் கேள்வி !

 மகரிஷி அவர்கள் முதன்முறையாக பிப்ரவரி 17ம் தேதி திருச்சி வந்தது பற்றி ஏற்கனவே சொல்லியுள்ளேன். பிப்ரவரி  18ம் தேதி மாலை  6 மணி அளவில்  "குடும்ப வாழ்வும் குண்டலினி யோகமும் " என்ற தலைப்பில் மத்திய பேரூந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பெரிய ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகரிஷி அவர்கள் மாலை  4 மணிக்கே தயாராகிவிட்டார்கள். அவர்கள் கொஞ்சதூரம் நடந்துபோய் வரலாமென சொன்னதின் பேரில் ஆழியாரில் அருளரங்கம் கட்ட உதவிய USA திருமதி இந்திரா குப்தா, அவருடன் வந்திருந்த டோனி ஸதானந்த் ( இவர் பிற்காலத்தில் நியூ ஜெர்சியில் தவப்பயிற்சி அளித்து வந்தார். 2019ல் இறைநிலை அடைந்தார் ), மகரிஷிக்கு உதவி செய்ய வந்த ஓமனா இவர்களுடன் நான் அனைவரும் மத்திய பேரூந்து நிலையம் அருகே நடந்து சென்றோம். அப்போது சைக்கிளில் வந்த ஓர் இளைஞன் அப்பகுதியில் ஒட்டப்பட்டிருந்த திரைப்பட கவர்ச்சி படத்தைப் பார்த்துக்கொண்டே  சாலையினை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்த போலீஸ்காரர் மீது மோதிவிட்டான். அப்புறம் அங்கே நடந்த சச்சரவுகளைப் பார்த்துக்கொண்டே  மாலை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தோம்.

மஹரிஷி அவர்களின் உரை கேட்க இருநூறு  அன்பர்களுக்குமேல்  வந்திருந்தனர்.  அன்றைய உரை மிகச் சிறப்பாக அமைந்தது. கலந்துரையாடல் பகுதியும் பலருக்கு உபயோகமாக இருந்தது. 

அன்று இரவு உணவுக்குப்பின் மகரிஷி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். பேரா.உலகநாதன் அவர்களும் எங்களுடன் இருந்தார். அப்போது மாலையில் நடந்த சம்பவம் பற்றி பேச்சு எழுந்தது.

நான் மகரிஷி அவர்களிடம் " சைக்கிளில் வந்த அந்த இளைஞனின் கவனம்  அந்த நடிகை படத்தால் சிதறி இப்படி நடந்துவிட்டது.இதுவே சைக்கிளுக்குப் பதிலாக வேறு ஒரு பெரிய வாகனமாக இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும் " எனக் கூறி மகரிஷி அவர்களிடம் என் முதல் கேள்வியினைக்  " கவர்ச்சி என்றால் என்ன? ஆபாசம் என்றால் என்ன ? " எனக் கேட்டேன். பேரா. உலகநாதன் என் கையினைப் பிடித்து அமுக்கி " இப்படியெல்லாம் சாமியிடம் கேட்கலாமா?" என கிசுகிசுத்தார். ஆனால் மகரிஷி அவர்களோ " இது ஒரு நல்ல கேள்வி. யாராவது நான் சொல்வதைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி  என்னைப் பார்த்து " கருவாடு பார்த்திருக்கிறாயா ? " எனக் கேட்டார்கள். " பார்த்திருக்கிறேன். நான் சுத்த சைவம் " என்றேன். "பார்க்க அழகாகவா இருக்கும் ?" எனக் கேட்டார்கள். " அருவெறுப்பாக இருக்கும் " என்றேன்.அதன் மணம் எப்படியிருக்குமெனக் கேட்டார்கள். " நாற்றம் குடலைப் புரட்டும் " என்றேன். 

 "கருவாடு சாப்பிடுபவர்களிடம் பேசிப்பாருங்கள். அதன் சுவை பற்றி - சப்புகொட்டிக்கொண்டு சிலாகிப்பார்கள். எனவே கருவாட்டின் கவர்ச்சி அதன் சுவையிலே! " என்றார்கள். மேலும் " மல்லிகைக்கு மணம் கவர்ச்சி. சில பூக்கள் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் மணம் இருக்காது. சிலவற்றிடம் இரண்டுக்கும் மேற்பட்ட புலன்களைக் கவரும் தன்மை இருக்கும். உதாரணம் -ரோஜா. கவர்ச்சி எல்லை மீறும்போது அது ஆபாசமாக மாறிவிடுகின்றது " என முடித்தார்கள். இந்த உரையாடல் முழுக்க, முழுக்க நகைச்சுவையாக இருந்தது.

பேரா உலகநாதன் அவர்கள் பிறகு என்னிடம் " இப்படியெல்லாம் சாமியிடம் கேட்கலாமா என்ற உணர்வில்தான் உங்கள் கையைப் பிடித்து அழுத்தினேன். ஆனால் சாமி நமக்கு பல  புதிய  விஷயங்கள் சொன்னார்கள். ரொம்ப நன்றி " எனப் பாராட்டினார்கள்.

எனக்கு அப்புறம் தைரியம் வந்து மகரிஷி அவர்களிடம் நிறைய சந்தேகங்களை எழுப்பினேன். அவற்றினை அவ்வப்போது இப்பகுதியில் பதிவிடுகின்றேன்.

ஞானவயலின் இந்த 7000மாவது பதிவினை மகரிஷி அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் மற்றும் நன்றியுடன் சமர்ப்பணம் செய்கின்றேன்.




.

No comments:

Post a Comment