Saturday, 15 November 2025

இறைவன் விரும்புவது என்ன.....


குயவன் ஒருவன் பானைகளைச்செய்து கொண்டிருந்தான்.

அங்கு ஏராளமான பானைகள், குடங்கள்,சட்டிகள்அடுக்கப்பட்டிருந்தன.

அவன் அருகில் ஓர் ஆடும் கட்டிப் போடப் பட்டிருந்தது.

அவ்வப்போது

அது 'மே..மே..' என்று

கத்திக் கொண்டிருந்தது.

அங்கே ஒரு வயதான மகான் ஒருவர் மெல்ல நடந்தே அங்கே வந்தார்.

குயவன் பானை செய்வதைப் பார்த்த படியே தரையில் அமர்ந்தார்.

வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் அந்தக் குயவன்.

அதை வாங்கிக் குடித்த குரு, .... இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா ?

என்று கேட்டார். இல்லீங்க சாமி.

இது ஏதோ காட்டாடு.

இந்தப் பக்கமாக வந்தது. பிடித்துக் கட்டிப் போட்டேன் ! என்றான் குயவன்.

எதற்காக ? என்று கேட்டார் குரு.

பண்டிகை வரப் போகிறதே ! இறைவனுக்கு பலி கொடுக்கலாமென்றுதான்....

என இழுத்தான் குயவன்.

பலியா ? குரு வியப்புடனே வினவினார்.

ஆமாம்சாமி.

தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் விசேஷம்.

தெய்வமும் மகிழ்ந்தே வரம் கொடுக்கும். எல்லாமே சுபீட்சமாக இருக்கும்.

இதைக் கேட்ட குரு எழுந்தார்.

தன் கையிலிருந்த குயவன் தண்ணீர் குடிக்க கொடுத்த மண் பானையை ஓங்கித் தரையில் அடித்தார்.

பானை துண்டு துண்டாகச் சிதறியது.

குயவன் திகைத்தே நின்றான். துறவியை வெறித்துப் பார்த்தான்.

துறவி,

பின் நிதானமாகத் கீழே குனிந்தார்.

சிதறிய ஓட்டாஞ் சில்லுகளை ஒன்று விடாமல் பொறுக்கி அடுக்கினார்.

பிறகு குயவனிடமே நீட்டினார்.

என்ன சாமி இது ?என்றான் குயவன் கோபமாக.

உனக்குத் தான் பிடிக்குமே அப்பா ?என்றார் குரு.

என்ன சாமி உளறுகிறீர்கள்?

குயவன் குரலில் உஷ்ணம் தெறித்தது.

என்னுடைய பானையை உடைத்து அடுக்கி என்னிடமே நீட்டுகிறீர்கள்.

இது எனக்குப் பிடிக்கும் என்று வேறு சொல்கிறீர்கள். கேலியா ? கிண்டலா ?

என்னை வம்புக்கு இழுக்கிறீர்களா ?

அல்லது உங்களுக்குப் பைத்தியமா ? என்றே ஆத்திரப் பட்டான்.

அப்படியெல்லாம் எதுவும் இல்லையப்பா.

உண்மையான அன்புடன் தான் இதை செய்தேன்.

குரு சிறிதும் பதட்டப் படாமலே சொன்னார்.

நான் செய்த அந்தப் பானையில் என் கடின உழைப்பு முழுவதும்

அடங்கியிருக்கிறதே ! அதை உடைக்க

நான் எப்படிச் சம்மதிப்பேன் ?

இது எனக்கு பிடிக்கும் என்று யார் உங்களுக்கு சொன்னது ?

சரி, நல்லது. ஆண்டவன் படைத்த ஓர் உயிரை கதறக் கதற வெட்டிக் கொன்று பலியிடலாம் என்று மட்டும் உனக்கு யார் சொன்னது ?

இதை இறைவன் வேறு மகிழ்ந்து ஏற்றுக்

கொண்டு மகிழ்ந்தே வரம் தருவான் என்று நீ எப்படி நம்புகிறாய் ?

எந்தத் தாய் தன் குழந்தை கதறுவதைக் கேட்டு சகிப்பாள் ?

அல்லது எந்தத் தகப்பன் தன் குழந்தை கொல்லப் படுவதை விரும்புவான்?

குருவிடமிருந்து அடுக்கடுக்காகக் கேள்விகள் பிறந்தன.

குயவன் நிதானமாக ஆட்டின் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்க்கத் தொடங்கினான்.

இறைவனிடம் என்ன இல்லை ?

உன்னிடம் என்ன உண்டு ?

அவர் எதை கேட்கிறார் ?

எதை நீ கொடுப்பாய் ?

அவன் படைத்த இந்த உலகில் அவனால் படைக்கப்பட்ட நீ அவன் படைத்த பொருட்களை அவனுக்கே படைப்பாயா ?

இறைவனுக்கு

நான் அதைச் செய்தேன்.

இதைச் செய்வேன் என்பதும்,

பதிலுக்கு அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான் என்பதும் வெறும் ஆத்ம வஞ்சனையே !

தூய எண்ணங்களால் மட்டுமே இறைவனை உணர முடியும்.

மனதால் மட்டுமே இறையுணர்வை எய்த முடியும்.

அன்பெனும் மலர் எடுத்து அணுதினமும் பூசை செய்.

நாம் எல்லா ஜீவன்களிடமும் அன்பு செலுத்தி சேர்ந்து வாழ்வதையே

இறைவன் எப்போதும்

விரும்புகின்றான்..!!

No comments:

Post a Comment