Showing posts with label தர்மம். Show all posts
Showing posts with label தர்மம். Show all posts

Wednesday, 24 December 2014

தர்மம்....13

 தர்மசங்கடம் என்றால் என்ன?

நீங்கள் ஒரு பதவியில் இருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு குடும்பம் இருக்கிறது. ஒருவர் உங்களுக்கு இலஞ்சம் தர வருகிறார். நீங்கள் யோசிக்கிறீர்கள். அந்தப் பணத்தை வாங்கினால் பையனின் படிப்புக்கு உதவும். வாங்குவதா வேண்டாமா என சங்கடப்படுவீர்கள்.

ஆனால் இது தர்மசங்கடமல்ல.

பையனின் படிப்புக்கு உதவுவது நல்லது (தர்மம்). ஆனால் இலஞ்சம் வாங்குவது தப்பு (அதர்மம்)....

ஒரு மாட்டைக் கொல்வதற்காக ஒருவன் அதை துரத்தி வருகிறான். மாடு உங்கள் வீட்டுக்குள் ஓடிவந்துவிட்டது. அதைத்தேடி வந்தவன் மாட்டைக் கண்டீர்களா என உங்களிடம் கேட்கிறான். உங்கள் நிலை சங்கடமாகி விட்டது. மாடு உள்ளே நிற்கிறது என உண்மையை சொன்னால் மாட்டின் உயிருக்கு ஆபத்து. காணவில்லை என்று சொன்னால் சத்தியம் தவறியதாகிவிடும்.
இதுதான் தர்மசங்கடம்.


இரண்டு நல்ல(தர்ம) செயல்களிலே எதைச் செய்வது என சங்கடப்பட்டால் அதுவே தர்மசங்கடம்.

Tuesday, 23 December 2014

தர்மம்....12

 முன்வந்து உதவி செய் 

காஞ்சி பெரியவர்




* மனதாலும், இனிமையான பேச்சாலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களை தினமும் செய்.
* நம்மிடம் உள்ள பணமெல்லாம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு இருக்கட்டும்.
* அனைத்து செயல்களிலும் அளவறிந்து நிற்கிற மனநிலை வந்தால் தான் அமைதி உண்டாகும்.
* நமது சொந்த விருப்பங்களுக்காக செயல்படுகிறோம் என்ற நிலையை மாற்றி, நமக்கு எவ்விதமான லாபமும் தராத செயல்களில் ஈடுபட வேண்டும்.
* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருப்பது தான் மங்களம். எங்கே நாம் போனாலும் அங்கே மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.
* அவரவரும் உரிய கடமையை பக்தியோடு பின்பற்றினால் தான் மனதில் ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு ஞானம் கைகூடும்.
* ஒழுக்கம் இருந்தால், அப்புறம் ஒவ்வொரு துறையிலுமே ஒழுக்கத்தினால் உண்டாகிற அழகும் ஏற்பட்டு விடுகிறது.
* துன்பம் இருக்கும் இடத்திற்கு நாமாக முன்வந்து சென்று, அந்தத் துயரத்தை நீக்க நம்மால் முடிந்த செயலை செய்ய முயல வேண்டும். இது மிகப்பெரிய தர்மமாகக் கருதப்படுகிறது

Monday, 8 December 2014

தர்மம்....11

 தர்மம் என்பது என்ன?

நன்மைகள் வேண்டி செய்யப்படும் செயலகள் அனைத்தும் தர்மம் எனப்படும்.எதை செய்தால் நன்மை ஏற்படுமோ அதுவே தர்மமாகும்.”தரு”என்ற பதத்திலிருந்து பிறந்தது தர்மம் என்ற சொல்லாகும்.”த்ரு”என்றால் தாங்குதல் என்று பொருள்படும்.மனிதனை தன் நிலையிலிருந்து வீழாமல் மேல் நிலைக்கு உயர்த்துவாதாகும்.

பொதுவாகவே எல்லோரிடமும் ஒரு கருத்து உண்டு.ஒரு மனிதருக்கு எவ்வளவு தர்மம் செய்தாலும்,அவருக்கு ந்ன்றி இருப்பதில்லை,பெற்ற தர்மத்தை உணர்ந்து பார்ப்பதில்லை என சங்கடபடுவோரும் உண்டு.தர்மம் என்பதே எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வதாகும்.

பூமியின் இயங்கியல் விதிப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதிர் விளைவு உண்டு.சில நபர்களுக்கு சீக்கிரமாக எதிர் விளைவு கிடைக்கும்.பல நபர்கள் தாமதமாக உணருவார்கள்.பிறருக்கு எந்த விதத்திலும் துன்பம் தராமல் நன்மையே செய்தால்,அவ்ரால் நமக்கு மீண்டும் நனமை கிடைக்கவேண்டியதில்லை.யார் மூலமோ,நாம் செய்த உதவி பல மடங்காக கிடைக்கும்.இப்படித்தான் தீமை செய்தாலும்.அதனால் தர்மத்தை செய்து,நனமையை பெறுவோம்.

Saturday, 13 September 2014

தர்மம்....10

அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது.குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு  பிடித்துக் கொடுத்தால்தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது.

ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் ஒரு நகை
கிடை ப்பதைப்  பார்த்து எடுத்தார்.அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது.ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார்


மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றான்.
தாமதத்திற்குக் காரணமும் கேட்டான்.

ஞானி சொன்னார்,''நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு  ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில்  எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை.மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால் நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள்.எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை.நகையை அப்படியே வைத்துக் கொண்டால் அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள்.எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை.அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன். ''

மன்னன், ''இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?''என்று கேட்டான்.அதற்கு ஞானி,''தர்ம வழியில் நடக்கும் ஒருவனை தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை,''என்று சொல்லியவாறு கம்பீரமாக அங்கிருந்து நடந்தார்.மன்னன் வணங்கி விடை கொடுத்தான்

Friday, 29 August 2014

தர்மம்.....9

 தனக்குத் மிஞ்சித் தர்மம்


'' த னக்குத் மிஞ்சித் தர்மம்''என்பதற்கு நான் புது வியாக்யானம் செய்கிறேன்

:எது உயிர் வாழ்வதற்கு அத்யாவச்யமோ, எதெல்லாம் இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாதோ, அந்த bare necessities -க்குத் தேவயானதைத் தான் 'தனக்கு'என்று இங்கே சொல்லியிருப்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இல்லாவிட்டால், 'தனக்கு'என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரச் செலவுகள் பண்ணிக் கொண்டே போய் எத்தனை வருமானம் வந்தாலும் தானம் பண்ண ஒன்றுமே இல்லாமல் ஆக்கிக் கொள்வதாகத்தான் முடியும். ஸொந்தச் செலவுகளை அவசியத்திற்கு அதிகமாக எவரும் வைத்துக்கொள்ளாவிட்டால்தான் தனக்கு மிஞ்சிக் கையில் தர்மத்துக்குப் பணமே இருக்கும். 

முடிவில்லாமல் தனக்கென்று ஆடம்பர போக்யங்களை (லக்ஷ்ரிகளை) ப் பெருக்கிக் கொண்டே போய்விட்டு, ''தனக்கு மிஞ்சித் தர்மம் பண்ண எதுவுமே இல்லை''என்று கைவிரித்தால் அது நியாயமில்லை. ஆனதால், தனக்கென்று எவ்வளவு குறைவாகச் செலவழிக்க முடியுமோ, அப்படி எளிமையாக வாழ்ந்து, மிச்சம் பிடித்து, அதைத் தர்மத்துக்குச் செலவழிப்பதுதான் ''தனக்கு மிஞ்சித் தர்மம்''.

 ''தர்மம் பண்ணியே ஆகவேண்டுமே!வேதத்தில் 'தர்மம் சர'என்றும், படிப்பு ஆரம்பத்திலேயே அவ்வை 'அறம் செய விரும்பு'என்றும் சொல்லியிருப்பதைச் செய்தேயாக வேண்டுமே!ஆனதால், நமக்கு வரும்படி எவ்வளவு குறைச்சலாயிருந்தாலும் அதற்குள் தர்மம் பண்ணும்படியாகவும் செலவைக் கட்டுப்படுத்திக்கொண்டு 'தனக்கு மிச்சும்'படிப் பண்ண வேண்டும்''என்றே இந்த வசனத்தை அர்த்தம் பண்ணிக்கொள்ள வேண்டும்*

அப்படிச் செய்தால் எவனுமே தர்மத்துக்காகச் சேமித்துத்தான் ஆகவேண்டும் என்றாகும். அதாவது, எவனுமே கடன்படமாட்டான்!இது ஒரு பெரிய ஸ்வய உபகாரம்!


இப்போது ஸர்க்காரே கடன் வாங்குவதாக ஆகிவிட்டிருக்கிறது!அதே வழியில் வேண்டாத வஸ்துக்களையெல்லாம் ஜனங்களும் அத்யாவச்யமாக்கிக் கொண்டால் எல்லாரும் கடனாளியாக வேண்டியதுதான். கடன் வாங்காமலிருப்பதே பெரிய உபகாரம். ஏனென்றால் நாம் கடன் வாங்கிச் செலவழிக்கிறபோது, நாம் தர்மம் பண்ண முடியாது என்பதோடு மற்றவர்களையும் கடன் வாங்கி டாம்பீகம் செய்யத் தூண்டுகிறோம். பிறத்தியாருக்கும் ஸாத்யமில்லாத ஆசைகளைக் கிளப்பிவிடுகிற விதத்தில் எவனொருத்தனும் டாம்பீகமாக வாழ்கிறதுதான் பெரிய ஸமூஹ த்ரோஹமான கார்யம். அநாதியான நம் சாஸ்த்ரங்களிலிருந்து நேற்று காந்தி வரையில் சொல்லி வந்த எளிய வாழ்க்கையை (simple living ) வசதியுள்ளவர்களும் மேற்கொண்டால் எந்தக் கம்யூனிஸமும், வர்க்கப் போராட்டமும் வரவே வராது. 

எளிய வாழ்க்கையால் இவன் நிறைய மிச்சம் பிடித்து தர்மமும் பரோபகாரமும் செய்வது ஒரு பக்கம்;இதைவிட முக்யமாக மற்றவர்களுக்கு ஆசை,

அஸ¨யை, கடன் இவற்றை ஏற்படுத்தாமல் இருக்கிறானே, இதுதான் பெரிய உபகாரம். 'வரவே சிறுத்து, செலவே பெருகினால் அது திருடு'என்றே ஆன்றோர் மொழி இருக்கிறது. கடன் வாங்கின பணம் இன்னொருத்தனுடையதுதானே?அந்தப் பணம் தனக்கு வருமா, வருமா என்று இவன் திருப்பிக் கொடுக்கிற வரையில் அவன் திருட்டுக் கொடுத்துவிட்டது போல அவஸ்தைப் பட்டுக் கொண்டுதானே இருப்பான்?அதனால்தான் இதைத் திருடு என்றே சொல்லியிருக்கிறது. ''கடன் பட்டார் நெஞ்சம்''மட்டுமில்லாமல் ''கடன் கொடுத்தார் நெஞ்ச''மும் கலங்கும்படியாக இப்படி இரண்டு சாராருக்கும் அபகாரம் பண்ணுகிற இரவல் பழக்கத்தை விடுவதே பெரிய உபகாரந்தான்.  

Sunday, 10 August 2014

தர்மம்.....8

எவனொருவன் சிறிதளவாவது தர்மம் செய்யவில்லையோ அவன் பிறந்தும் பிறவாதவனே. அவன் பிறப்புப் பயனற்றது.

தானே கொண்டு போய்க் கொடுத்த தர்மம் உத்தம பலனைக் கொடுக்கும்.

கூப்பிட்டுக் கொடுத்த தர்மம் மத்திமமான பலனைக் கொடுக்கும்.

தன்னை வந்து யாசித்தவனுக்கு கொடுத்த தர்மம் கடைத்தரமான பலனைக் கொடுக்கும்.


-கிருபானந்த வாரியார்.

Saturday, 9 August 2014

தர்மம்.....7

ராஜ நீதி


'ஒன்றினால் இரண்டை அறிந்து, நான்கினால் மூன்றை வசம் செய்து, ஐந்தை வென்று,ஆறினைக் கற்று, ஏழை விட்டு விட்டுச் சந்தோஷமாய் இரு...'

மஹாபாரதத்தில் பிரஜாசுர பர்வத்தில் விதுர நீதியில், ராஜநீதியோடு பரிபாலனம் செய்ய வேண்டிய ஓர் அரசனுக்குப் பொருந்துமாறு சொல்லப்பட்ட சுலோகத்தின் கருத்து இது.

1) புத்தி- 
2) சரி,தவறு -
3) நண்பன், விரோதி, நடுனிலையாள்ர்
 4) சாம, தான, பேத, தண்டம் 
5) ஐம்புலன், 
6) விரோதிகளையும் அவர்கள் படைகளையும் பற்றிய உடன்படிக்கை, யுத்தம், போர் நடப்பு, விரோதிகளில் எதிர்ப்பில் திடமாக இருத்தல், அவசியம் இருந்தால் செய்ய வேண்டிய இருதரப்பு நடவடிக்கை, சமாதானம்- 
 7) பெண், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, தகாத வார்த்தைகள்,கோரமான தண்டனை, பண விரயம்.

Monday, 4 August 2014

தர்மம்.....6

கல்வி கற்பது மாணவனின் தர்மம்.கற்பிப்பது ஆசிரிய தர்மம். இல்லற வாழ்க்கையை உள்ளபடி நடத்துவது இல்லற தர்மம். நீதி தவறாமல் ஆட்சி நடத்துவது அரச தர்மம். துறவு வாழ்க்கை மேற்கொண்டால், அந்த மரபுப்படி வாழ்வது துறவு தர்மம். நல்லவர்களையும், நல்லவைகளையும் காத்து தீயவர்களையும், தீயவைகளையும் அழிககப் போர் தொடுப்பது அவதார தர்மம். தர்மம் தலை காக்கும் என்பது முதுமொழி.

 தர்மப்படி வாழ்கின்றவனுக்கு மனப் போராட்டம் இருக்காது. தர்மப்படி வாழப் புத்தி தான் வழிகாட்டுகிறது. ஆனால் தர்மப்படி வாழாமல் மன உணர்ச்சிகளுக்கும், சூழ்நிலைக்கும் அடிமையாகி மனம் போன போக்கில் வாழ்ந்தால், நமது இயல்பாகிய அமைதி போய்விடுகிறது. மாறாக மனப்பிளவு ஏற்படுகிறது. அதாவது நீ செய்வது தவறு என்று நமக்குள்ளேயே ஒரு மனம் நம்மைக் குத்திக் காட்டத் துவங்கி விடுகின்றது. ஆனால் அதை நாம் கவனிப்பதில்லை அல்லது அலட்சியப்படுத்துகிறோம். இந்நிலையில் பிழையாகச் செயல்படுகின்ற ஒரு மனமும், அந்தப் பிழையைச் சுட்டிக்காட்டிக்கொண்டே இருக்கின்ற ஒரு மனமும் ஆக நமது மனம் பிளவுபட்டுவிடுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மனக்குரலை மதித்து தர்மநெறிப்படி வாழ்கின்ற மனம் ஒன்றுபட்டு இருக்கின்றது. அந்த மனதின் அமைதி குலைவதில்லை.

Friday, 1 August 2014

தர்மம்.....5

ஒரு காடு இருந்ததாம். அதன் பக்கத்தில் ஒரு பெரிய நதி, சின்னக் குட்டை இரண்டும் இருந்தனவாம். காட்டிலே தீப்பிடித்துக்கொண்டதாம். அப்போது பலமான காற்று சேர்ந்து கொள்ளவே எரிகிற சருகுகள், விறகுத் துண்டுகள், மண் எல்லாம் அடித்துக்கொண்டு வந்து குட்டையிலும் விழுந்ததாம். நதியிலும் விழுந்ததாம்.

குட்டையை மண்ணும் செத்தையும் பாதி அடைத்தது என்றால் பாக்கி பாதி அப்படியே அந்த உஷ்ணத்தில் வற்றி, மொத்தத்தில் குட்டை இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டது. மஹாநதியில் விழுந்த குப்பைக் கூளங்களை, அவை பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் தன் பிரவாஹமே அணைத்து அடித்துக்கொண்டுபோய் ஸமுத்திரத்தில் விட்டு இருந்த இடம் தெரியாமல் பண்ணிவிட்டது.

குப்பை குட்டையை இல்லாமல் பண்ணிற்று. நதியோ குப்பையை இல்லாமல் பண்ணிவிட்டது. இந்த மாதிரிதான் தோஷமாகத் தெரிகிற சில பழக்க வழக்கங்கள் பூர்வ காலத்தில் வீர்யத்தோடிருந்தவர்களைச் சேர்ந்தபோது அந்த தோஷம் அவர்கள் சக்தியில் அடிபட்டுப் போயிற்று. பலஹீநர்களான நாம் அந்த வழக்கங்களைக் கைக் கொண்டாலோ தோஷம் நம்மை அடித்துப் போட்டுவிடும்.

அவர்களுடைய சக்தி நமக்கு இல்லாததால், கலியுகத்தில் எப்படி இருக்கணுமென்று அவர்கள் சட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார்களோ, அதற்கு அடங்கித்தான் நாம் நடக்கணும். "அல்டிமேட்'டாக அஹிம்சா போஜனத்துக்குப் போகத்தான் எல்லாரும் முயற்சி செய்யணும் என்பதே நமக்கான தர்மம்.

- காஞ்சி மகா பெரியவர்

Monday, 21 July 2014

தர்மம்.....3

வினா:

சுவாமிஜி, தர்மம் செய்வதும், தர்மம் வாங்குவதும், மற்றவருக்காக இறங்குவதும் மனிதனின் பலவீனத்தைத் தானே காட்டுகிறது ?

மகரிஷியின் விடை:

தர்மம் செய்வதும், பிறர் துன்பம் கண்டு இறங்குவதும் தான் மனிதன் இயல்பாகும். இது பலவீனம் அல்ல. ஆன்மாவின் பலமாகும். வாங்குவதை விட கொடுப்பது அதிகமாக இருக்க வேண்டும். தேவையுள்ள போது வாங்குவதில் தவறில்லை. கொடுப்பவரின் மனத்திருப்திக்காகவும் வாங்கலாம்.




ஒருவர் பிச்சை எடுக்கிறான் என்றால் அங்கு தான் ஏழ்மை மற்றும் பலவீனம்(Poverty and Weakness) வருகிறது. பட்டினி கிடப்பவனுக்கு உணவு அளிக்க வேண்டியது தான். ஆனால் நன்றாகச் சாப்பிட்டு விட்டு இருப்பவனுக்கும், வீட்டில் சென்று அறுசுவை உணவு உண்பவருக்கும் சாப்பாடு போடுவது தர்மம் ஆகாது. 

Friday, 18 July 2014

தர்மம்.....2



தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் - செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்


மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் - நம்மை


வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - நம்மை
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - செய்த

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - என்றும்


தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் 

Tuesday, 15 July 2014

தர்மம்

 தர்மம் என்பது என்ன?



நன்மைகள் வேண்டி செய்யப்படும் செயலகள் அனைத்தும் தர்மம் எனப்படும்.எதை செய்தால் நன்மை ஏற்படுமோ அதுவே தர்மமாகும்.”தரு”என்ற பதத்திலிருந்து பிறந்தது தர்மம் என்ற சொல்லாகும்.”த்ரு”என்றால் தாங்குதல் என்று பொருள்படும்.மனிதனை தன் நிலையிலிருந்து வீழாமல் மேல் நிலைக்கு உயர்த்துவாதாகும்.



 பொதுவாகவே எல்லோரிடமும் ஒரு கருத்து உண்டு.ஒரு மனிதருக்கு எவ்வளவு தர்மம் செய்தாலும்,அவருக்கு ந்ன்றி இருப்பதில்லை,பெற்ற தர்மத்தை உணர்ந்து பார்ப்பதில்லை என சங்கடபடுவோரும் உண்டு.தர்மம் என்பதே எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்வதாகும்.