Monday, 14 July 2014

ஆன்மீக ஆனா, ஆவன்னா - 19



"அம்மா, மேதகு அப்துல் கலாம் மாணவர்களுக்குச் சொன்ன அறிவுரைகளை தெரிவித்தீர்கள் அல்லவா, அவற்றை எங்கள் பள்ளி தாளாளர் அவர்கள் அழகாக அச்சிட்டு எல்லா மாணவ, மாணவிகளிடம் தந்துள்ளார்.   அசெம்பளி கூட்டத்தில் நாங்கள் இவற்றைப் படித்து உறுதி எடுத்துக் கொண்டோம் " என்கிறாள் ஒரு மாணவி.

" மிகவும் மகிழ்ச்சி. தாளாளருக்கு நன்றியும், பாராட்டுகளையும் என் சார்பில் தெரிவித்து விடுங்கள் " என்கிறார்கள் அம்மா.

 "நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும். இது நான் என்னுடைய வாழ்வில் நான் கற்றுக்கொண்ட பாடம் என மேதகு அப்துல் கலாம் சொன்னது என் சகோதரனுக்கு ஒரு புது உற்சாகத்தைத் தந்தது " என்கிறாள் ஒரு மாணவி.

" நம் மகரிஷி  அவர்களும் ' உனக்கு உடல் இருக்கா, உயிர் இருக்கா இந்த தகுதி போதும் ஆன்மீகப் பயிற்சிகள் பெற்று முன்னேற ' " என்கிறார்கள் அம்மா.

" மகரிஷி அவர்கள் மாணவர்களிடம் பேசியிருக்கின்றார்களா? " என ஒரு மாணவி கேட்க

" நிறைய தடவை.....  சென்னையில், கோவையில்  கல்லூரிகளுக்கேச்  சென்று மாணவர்கள் மேம்பட என்னென்ன பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறித்தியிருக்கிறார்கள். அமெரிக்கா  சென்றிருந்தபோது  பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் உரையாற்றி யிருக்கின்றார்கள்" என்கிறார்கள் அம்மா.

" மாணவர்களுக்கு மகரிஷி அவர்கள் சொன்ன அறிவுரைகளைச் சொல்லுங்களேன் " என மாணவிகள் கேட்கின்றனர்.

"மகரிஷி பேசியதை அப்படியே உங்களுக்குச் சொல்கின்றேன்...

'  மனித வாழ்வில் மாணவப்பருவம் மிக்க மதிப்புடையது. வயதுக்கும், அறிவுக்கும், கடமைக்கும் இணைப்புக் காட்டி முன்னோர்கள் மனிதனுடைய வாழ்வை நான்கு வகையில் பிரித்தார்கள். அவை 1. இளமை நோன்பு 2. இல்லறம் 3. அகத்தவம் 4. தொண்டு என்பனவாகும். ஒன்றன்பின் ஒன்றாக முறையோடு இவற்றைப் பயிற்சி செய்வதற்காக வேறுபடுத்தியும், வரிசைப்படுத்தியும் பேசப்பட்டனவேயோழிய, வாழ்வில் பொறுப்பேற்ற ஒவ்வொருவருக்கும் இந்நான்கு பண்பாடுகளும் வாழ்வில் இணைந்தே செயலாக வேண்டும்.

இந்நான்கு பிரிவுகளில் " இளமைநோன்பு"  என்ற ஒன்றைப்    பயிலும்  காலம்தான்  மாணவப் பருவம். மனிதன் சிறப்புற, வாழ்வில் வளம் பெற  மாணவப் பருவமே ஏற்றதோர் பயிற்சிக் காலம்.  நல்வாழ்வின் இன்றியமையாத தேவைகளான 1. எழுத்தறிவு  2. தொழிலறிவு 3. இயற்கை தத்துவ அறிவு  4. ஒழுக்க பழக்கங்கள் என்ற நான்கும் இணைந்ததே முழுமையான கல்வியாகும். இவற்றைப் பயின்று கொள்ளவேண்டிய  பொருத்தமான, இன்றியமையாத காலம் மாணவப் பருவமே.  எழுத்தறிவு, தொழிலறிவு  இரண்டும் இன்று  விரிவாக எல்லாப் பள்ளிகளிலும் கல்வி முறையில் பாடத்திட்டங்களாக  கற்றுத் தரப்படுகின்றன. இயற்கைத் தத்துவ அறிவும், செம்மையான வாழ்வுக்கு ஏற்ற    ஒழுக்க பழக்கங்களும் அகத்தவதாலன்றி க்  கிட்டாது.  மாணவர்களுக்குப்  படிப்பில்  மனம்  நிலைக்க,  ஒவ்வொரு துறையிலும் ஆழ்ந்து பொருள் உணர, அவற்றை  நினைவிலே வைத்துக்கொள்ள , போதிய மனவலுவு, கூர்மை, நுண்மை ஆகிய இவை  அகத்தவம் ( தியானம் ) என்ற உளப்யிற்சியினால்தான்  கிடைக்கின்றது.

 உடல், உயிர், மனம், மெய்ப்பொருள்  இந்நான்கின் நிலைகளையும்  இவை ஒன்றோடொன்று இணைந்த உறவுகளையும்  தெளிவாகத் தெரிந்து   கொள்ளும்போதுதான்  ஒருவர் விஞ்ஞானக் கல்வியில் எந்த பகுதியிலும்  சிறந்து விளங்க முடியும். பொருளியல், உயிரியல், உளவியில், கருவியியல், சமூகயியல் ஆகிய விஞ்ஞானங்கள் வேறு வேறாகத் தோன்றியபோதிலும்  உண்மையில் இவை எல்லாவற்றிலும்  ஊடுறுவிய  தொடர்பு  இருக்கின்றது.  இக்கல்விகளில்  ஆழ்ந்த பொருளுணர்ந்து  கருத்தோடும், பொறுப்போடும்  தேர்ச்சி பெற அகத் தவப்பயிற்சி  இன்றியமையாத  துணையாகும். மேலும் மனிதனிடம் அடங்கியுள்ள ஆற்றல்களை  முறைபடுத்த வேண்டுமாயின்
இளமைநோன்பு  காலமாகிய மாணவப் பருவம்தான் சிறந்தது.
அறிவு,  ஆற்றல் சிதறாமல்  செயல்கள் நெறி பிறழாமல் ஒன்றோடொன்றி இணைந்து சிறப்புற மாணவப் பருவத்திலேயே  பயிற்சி செய்து கொள்ள வேண்டும்.

இப்பருவத்தை நழுவவிட்டால், தேவையற்ற துன்பங்களும், சிக்கலும் விளைவிக்கத்தக்க எண்ணங்களும், செயல்களும் இடம் பிடித்துக் கொள்ளும். பிற்காலத்தில்  இவற்றை மாற்றி ஒழுங்குபடுத்தி நலம் காண்பதில் மிகுதியான முயற்சி எடுக்க வேண்டும்.

மாணவப் பருவத்தில் எழுத்தறிவு, தொழிலறிவு இரண்டை மட்டுமே வளர்த்துக் கொண்டு  இயற்கை தத்துவம், ஒழுக்க பழக்கங்கள் இவற்றை அலட்சியம் செய்து விட்டால் வாழ்க்கை எனும் இன்ப ஊற்று நச்சு ஆகி விடும். வறண்டு போகும்

எனவே மாணவப் பருவத்தில் அகத்தவம் பயின்று மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் பெறும் மாணவர்கள் வாழ்க்கையில் சாதனைகள் நிகழ்த்தப்போவது நிச்சயம் '

" என்ன மாணவிகளே, மகரிஷி  அவர்கள் கூறியதைக் கேட்டீர்களா " என 
அம்மா கேட்க 

 "மனவளகலைப் பயிற்சிகளை உடனடியாக கற்று சாதிக்கப்போகிறோம் "
என்கிறார்கள் மாணவிகள்.

 - தொடரும் 

No comments:

Post a Comment