Tuesday 15 November 2022

உண்மையான குரு

உண்மையான குரு தன்னையே உயர்த்திப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். தன்னை நாடி வந்தவர்களை உயர்த்தப் பார்ப்பார்.

தன்னைக் கடவுளுக்கு இணையாகப் பறை சாற்ற மாட்டார். அவரிடம் படாடோபமும், பகட்டும் இருக்காது. பணிவும், எளிமையும் அவரிடம் இருக்கும். வசிஷ்டர் முதலான மகத்தான வேதகால முனிவர்களும் சரி, ஆதிசங்கரர் முதலான பிற்கால பெரும் துறவிகளும் சரி தங்களைக் கடவுள்களாகச் சொல்லிக் கொண்டதில்லை. பிற்காலத்தில் அவர்கள் சிஷ்யர்கள் அவர்களைக் கடவுள்களாக சித்தரித்திருக்கக் கூடும். ஆனால் அவர்கள் அப்படிச் சொன்னதில்லை. இதை யாரும் மறந்து விடலாகாது.
உண்மையான குரு வசூலில் குறியாக இருக்க மாட்டார். சொல்லப் போனால் பணம் பிரதானமாகும் போது மற்ற எல்லாமே பின்னுக்குத் தள்ளப்படுகிறது. ஞானமே முக்கியமாக நினைப்பவரே உண்மையான குரு. அவர் தன்னைக் குருவாக ஏற்றுக் கொண்டவர்களை ஞான நிலைக்கு உயர்த்துவதில் குறியாக இருப்பார்.
தன்னை நாடி வருபவர்களுக்குப் பிடித்ததை மட்டுமே சொல்லி மகிழ்விக்கும் மனப்போக்கு உண்மையான குருவிடம் இருக்காது. உண்மை கசந்தாலும் அதை மருந்தாக உட்கொள்ள வைத்து நலமடையச் செய்யும் மகத்தான அக்கறை அவரிடம் இருக்கும்.
தன்னைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கையில் அவருக்கு அக்கறை இருக்காது. தன்னைப் பின்பற்றுவோரின் தன்மையிலும், முன்னேற்றத்திலும் அவருக்கு அக்கறை இருக்கும்.
சொத்துக்கள் சேர்ப்பது, ஆள்பிடிப்பது, சித்துவித்தைகள் செய்து காட்டுவது போன்றவை உண்மையான குருவிடம் இருக்காது. ஞானத்தைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கம் மட்டுமல்லாமல் ஒரு உதாரண புருஷராய் அவர் வாழ்ந்து காட்டும் பண்பு இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான குரு ஒரு ஆரம்பம்தான். அவர் முடிவு அல்ல. உண்மையான குரு என்பவர் ஒரு வாசல் தான். அடுத்த நிலைக்கு அவர் மூலம் ஒருவர் சென்று கடந்து போக முடியும். அவர் தன்னிடமே ஒருவரைக் கட்டிப் போட நினைக்க மாட்டார். அவரைக் கடந்து செல்லவும் மகிழ்ச்சியுடன் உதவுவார்.
இதெல்லாம் இக்காலத்தில் உண்மையான குருவை அடையாளம் காண நமக்கு இருக்கும் அளவுகோல்கள். உண்மையான குருமார்கள் நம் புராணங்களிலும், வேதங்களிலும், உபநிடதங்களிலும் எப்படி இருந்திருக்கிறார்கள் என்பதை ஆழமாகப் படிக்கும் போது நமக்குப் புலப்படும் உண்மைகள்.
இன்னொரு உண்மையையும் நாம் இங்கே நினைவுகூர்வது நியாயமாய் இருக்கும். உண்மையான தேடலுடன் செல்கின்ற சீடனுக்கு உண்மையான குரு கண்டிப்பாகக் கிடைப்பார். எப்படி தண்ணீரும் எண்ணெயும் சேராதோ அப்படி நல்ல தேடலுடைய மனிதனும், போலி குருவும் சேர முடியாது. உண்மையான தேடலும், நோக்கமும் உள்ளவன் தன் அறிவுக் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே இருப்பான். அதைப் போலி குருமார்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தானாக விலகல் என்பது நேர்ந்து விடும். ஒருசில நேரங்களில் மோசமான குருவிடம் இருந்து கூட ஒரு உண்மைச் சீடன் நல்ல விஷயங்களைக் கற்றுக் கரை தேர்ந்துவிட முடியும். ஆனால் அது விதிவிலக்கே ஒழிய பொதுவாக நிகழ்வதல்ல.
ஒரு குழந்தைக்கு அதன் தந்தையைக் காட்டுபவள் தாய். ஒரு சீடனுக்கு இறைவனைக் காட்டுபவர் குரு. ஏட்டுக் கல்வியை மட்டும் அளிப்பவர் ஆசிரியர். ஞானத்தெளிவை அளிப்பவரே குரு. உண்மையான குரு தன்னை நாடி நம்பிக்கையுடன் வருபவர்களுக்கு இருவிதமாக வழிகாட்டுவார். தகுதி உடையவர்க்கு தகுந்த வழிகாட்டுவார். தகுதி இல்லா விட்டாலும் நோக்கம் உயர்வாக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் தகுதியை ஏற்படுத்தி பின்பு உயர்ந்த வழிகாட்டுவார்.
உண்மையான குருவின் உபதேசம் ஒரு குடம் பாலில் ஒரு சொட்டு மோர் விழுவது போலத் தான். அந்தக் குடத்தில் உள்ள பால் எப்படி இனி பாலாகவே இருந்து விட முடியாதோ அதே போல் அவரது சீடனும் முந்தைய அஞ்ஞான நிலையிலேயே தங்கி இருந்து விட முடியாது. அவரது உபதேசம் மிகப்பெரிய ஞான மாற்றத்தை அவனிடம் கண்டிப்பாக ஏற்படுத்தும்.
இன்றோ குரு என்ற வார்த்தையும் குருவழிபாடும் கொச்சைப்படுத்தப்பட்ட வார்த்தைகளாக மாறிவிட்டன.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழிவிழுமாறே.
என்று திருமூலர் எச்சரித்ததைப் போன்ற வேடிக்கையான காலகட்டத்தில் தான் நாம் இருக்கிறோம். அஞ்ஞானக் குருட்டுத் தனத்தை நீக்க முடியாத தகுதியற்ற குருவினைக் குருவாக ஏற்றுக் கொள்பவர்கள், அந்தக் குருட்டுத் தனத்தை நீக்க முடிந்த உண்மையான குருவினை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நடிப்பும், பகட்டும் பிடிப்பவனுக்கு நல்லதும், உண்மையும் பிடிக்காது. அது கசக்கவே செய்யும். இப்படி தகுதியும், ஞானமும் இல்லாத குருவும், முட்டாள் சீடனும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? ஞானமில்லாத இருவரும் குருடர்களே என்பதால் அவர்கள் குருட்டாட்டம் ஆடி கடைசியில் படுகுழியில் விழ வேண்டி இருக்கும்.
முன்பு குருவை எப்படி எல்லாம் பூஜிக்க வேண்டும் என்று சொன்ன அதே திருமூலர் பிற்காலத்தில் இப்படியும் குருக்கள் மழைக்காலக் காளான்களாய் முளைப்பார்கள் என்று ஞான திருஷ்டியில் உணர்ந்து பாடியது போல் அல்லவா இருக்கிறது.

No comments:

Post a Comment