’வாழ்க வளமுடன்’ எனும் வாசகத்தை தாரக மந்திரமாகக் கொண்டு, மக்களுக்கு போதித்தவர் வேதாத்திரி மகரிஷி. இவர் அமைத்துக் கொடுத்த ‘மனவளக்கலை’ எனும் பயிற்சி இன்றைய உலகின் மன அழுத்தத்தில் இருந்தும் டென்ஷன் முதலானவற்றில் இருந்தும் விடுவிக்க வல்லது என்கிறார்கள் மனவளக்கலையைக் கற்றுத் தரும் பேராசிரியர்கள்.
’மனவளக்கலை என்பது மிக எளிமையான பயிற்சி. கிட்டத்தட்ட, இலகுவான முறையில் நாம் செய்கின்ற தவம். இந்தத் தவத்தின் பலன்கள் எண்ணிலடங்காதவை. முக்கியமாக தவத்தின் பயன்களாக பத்து விஷயங்களைச் சொல்லுகிறேன்’ என்று வேதாத்திரி மகரிஷி விவரித்துள்ளார்.
1. மனித வாழ்வின் பெருநிதியாகிய கரு மையத்தைத் தூய்மையாகவும், வலுவுடையதாகவும், அமைதியும் இன்பமும் பெருக்கும் திறனுடையதாக்க் கொள்ளவும் மனவளக்கலை எனும் தவம் உதவுகிறது.
2) நமக்குள்ளே இருக்கிற இறையுணர்வு வெளிப்படும். அறநெறி நின்று வாழும் தன்மையை மேம்படுத்தும். .
3) மனத்தின் விரியும் தன்மை பெருகுகிறது. மனதைக் குறுக்கிக் கொண்டு சிந்திப்பதெல்லாம் கடந்து, பரந்த மனத்துடன் பரந்துபட்டு எல்லா மனிதர்களையும் அவர்களின் கவலைகளையும் நாம் எடுத்துக் கொண்டு பிரார்த்திக்கிற குணம் வந்துவிடும்.
4) எண்ணம், சொல், செயல்கள் மூன்றும் மூன்று திசைகளில் இருந்த நிலை மாறும். மூன்றும் ஒரே திசையில் பயணிக்கும். செயலாலும் சொல்லாலும் முக்கியமாக எண்ணத்தாலும் கூட தவறு செய்யாத நிலையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கும்.
5) அறிவின் திறன் கூடும். அதன் கிரகிக்கும் சக்தியும் அதிகரிக்கும். .
6) எல்லோரிடமும் ஒத்துப் போகிற குணம் வந்துவிடும். எதையும் சகித்துக் கொள்ளுகிற மனோநிலை பெருகும். .
7) அவ்வப்போது செய்துவிடக் கூடிய தவறுகளையும், நம்மிடம் இருக்கக் கூடிய தீய குணங்களையும் களைந்து தூய்மையைப் பெருக்கிக் கொள்ள துணைபுரிகிறது. அதுமட்டுமல்ல... பிறரின் குற்றம் குறைகளை இயல்பாகப் பார்க்கின்ற குணமும் அவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் குத்திக்காட்டாத பேச்சும் என்றெல்லாம் நம்மை மாற்றிவிடும்.
8) ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய்கின்ற திறன் மொத்தத்தையும் வழங்கும்.
9) தன் அமைதி, குடும்ப அமைதி, சமுதாய அமைதி முதலானவற்றையே வாழ்க்கையாகக் கொள்வோம். இவையே உலக அமைதிக்கு வழி வகுக்கின்றன.
10) நடக்கக் கூடியதையே நினைக்கச் செய்து நினைத்ததையே நடக்கச் செய்கிறது.
இப்படியான தவத்தின் பலன் எல்லோருக்கும் கிடைக்கட்டும். வாழ்க வையகம். வாழ்க வளமுடன்’ என்று விவரித்துள்ளார் வேதாத்திரி மகரிஷி. .
No comments:
Post a Comment