Wednesday 9 November 2022

நால்வகை ஆசிரமங்களும் கடமைகளும்

 பிரம்மச்சர்யம் (மாணவப் பருவம்) ஆசிரம கடமைகள்


பிரம்மச்சாரி குருவை சாதாரண மனிதராக பார்க்காமல், குருகுலத்தில் குருவிடம் குற்றம் குறைகள் கண்டு அலட்சியம் செய்யாது, இறைவனாக நினைக்க வேண்டும். ஏனெனில் குரு என்பவர் அனைத்து தெய்வத்தன்மை வாய்ந்தவர். குருவின் மனம் விரும்பும்படி பணிவிடை செய்வதே ஒரு பிரம்மச்சாரிக்கு இலக்கணம். இல்லற சுக போகங்களில் ஈடுபடாது, குருவிடம் தன் உடல்-மனம் ஒப்படைத்து, தர்ம சாத்திர நூல்களை கற்றுத் தெளிய வேண்டும். பிரம்மச்சாரி, குருகுல கல்வி முடிக்கும் போது, கல்விக் கற்றுக் கொடுத்த குருவுக்கு குருதட்சணை வழங்கியபின் “சமாவர்த்தனம்” எனும் சடங்கு செய்து கொண்டு கிரகஸ்த ஆசிரமத்திற்கு (இல்லற வாழ்விற்கு) நுழையலாம்.

இல்லற தர்ம கடமைகள்

இல்லற வாழ்வில் ஈடுபடுபவன் அறவழியில் பணம் ஈட்டி, இல்லறத்தை நல்லறமாக நடத்த வேண்டும். இவர்கள் பஞ்ச மகாயக்ஞங்கள் செய்வது சிறந்தது என இந்து சமய வேத வேதாந்த சாத்திரங்கள் கூறுகிறது. யக்ஞம் ஐந்து வகைப்படும்.

1. தேவ யக்ஞம்:- வேத மந்திரங்களினால் வேள்விகள் வளர்த்து தேவர்களுக்கு ஹவிஸ் அளித்து மகிழ்விப்பது.
2. ரிஷி யக்ஞம்:- உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, இதிகாசங்கள், திருமுறைகள், திருக்குறள் போன்ற தெய்வீக நூல்களை கேட்டல், படித்தல் மற்றும் அவைகளை சிந்தித்தலே ரிஷி யக்ஞம் ஆகும்.
3. பித்ரு யக்ஞம்:- . நீத்தார் வழிபாட்டின் மூலம் நமது மூதாதைர்களுக்கு சிரார்த்தம், திதி, தர்ப்பணம் கொடுப்பதின் மூலம் இறந்த முன்னோர்களை மகிழ்விப்பது.
4. மனுஸ்ய யக்ஞம்:- வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அமுது படைத்து விருந்தோம்புவது.
5. பூத யக்ஞம்:- பசு, காகம் முதலிய விலங்குகளுக்கு உணவு படைத்தல்.


இல்லற தர்மத்தில் இருந்தாலும், பகவானிடம் பக்தி செலுத்த வேண்டும். படைக்கப்பட்ட பொருள்கள் எல்லாம் ஒரு காலாத்தில் அழியும் தன்மை உடையதோ அவ்வாறே கண்ணுக்குப் புலப்படாத சொர்க்கம் முதலிய லோகங்களும் அழியும் தன்மை உடையது என்று அறிந்து கொள்ள வேண்டும்.

உடல் மற்றும் வீடு போன்ற பொருட்களில் “ நான் - எனது ” (அகங்காரம் - மமகாரம்) என்ற கர்வம் இன்றி வாழ வேண்டும். பொறுப்புணர்வு பெற்ற மகன்களிடம், குடும்பப் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு, கிரகஸ்தன் (இல்லறத்தான்), தன் மனைவியை மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு அல்லது தன்னுடன் அழைத்துக் கொண்டு வானப்பிரஸ்த ஆசிரம (காட்டில் வாழ்தல்) தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


வனப் பிரஸ்தர்களின் (காடுறை வாழ்வு) கடமைகள்

வனப் பிரஸ்தனின் முதன்மையான தர்மம் தவம், இறைபக்தி மட்டுமே. வானப் பிரத்த தர்மத்தில் வாழ்பவர்கள், மரவுரி, இலைகள், புற்கள், மான் தோல் ஆகியவற்றை உடையாகக் கொண்டு, காட்டில் கிடைக்கும் கிழங்குகள்-வேர்கள்-பழங்கள் உண்டு வாழவேண்டும். தாடி, மீசை முடிகளை நீக்கக் கூடாது. தினமும் மூன்று முறை குளிக்க வேண்டும். தரையில் படுக்க வேண்டும். கோடை காலத்தில் நாற்புறமும் நெருப்பு மூட்டிக் கொண்டு, கண்களால் சூரியனை நோக்கிக் கொண்டும், மழைக்காலத்தில் வெட்டவெளியில் நின்றும், குளிர் காலத்தில் கழுத்துவரை நீரில் நின்று கொண்டும் தவம் செய்ய வேண்டும். மிருகங்களை கொன்று உண்ணக் கூடாது. காட்டில் கிடைக்கும் நீவாரம் போன்ற சரு, புரோடாசம் முதலிய ’ஹவிஸ்’ (தேவர்களுக்கான உணவு) செய்து அந்தந்தக் காலத்திற்குரிய இஷ்டிகள் (யாகங்கள்) செய்ய வேண்டும். மேலும் அக்னி ஹோத்திரம், தர்சபூர்ணமாஸங்கள், சாதுர்மாஸ்ய விரதம் போன்ற விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தவம் செய்வதால் அதன் பலனாக, அந்த வனப்பிரஸ்தன் மகர் லோகத்தை அடைந்து, பின்னர் இறைவனை வந்தடைவான்.

சந்நியாச தர்ம(துறவறம்) கடமைகள்

கர்மங்களினால் (சாத்திரத்தில் கூறிய செயல்களால்) கிடைக்கும் நல்லுலகங்கள் கூடத் துயரத்தைத் தரும் என்ற பேருண்மையை உணர்ந்தவர்கள், செயல்களைத் துறந்து சந்நியாச தர்மத்தை ஏற்க வேண்டும். துறவி கௌபீனம் (கோவணம்) அணிந்து கொண்டு, கையில் கமண்டலம், தண்டு வைத்து கொள்ளலாம். சத்தியமான சொற்களை பேச வேண்டும். மௌனம் வாக்கின் தண்டம்பலனில் பற்றுக்கொண்டு செயல்களைச் செய்யாமல் இருப்பது, உடலின் தண்டம்; பிராணாயாமம் செய்வது, மனதின் தண்டம். இந்த மூன்று தண்டங்களைக் (திரி தண்டி) கைக் கொள்ளாத துறவி, வெறும் மூங்கில் தடியைச் சுமப்பதால் மட்டும் சந்நியாசியாக மாட்டான். நான்கு வர்ணத்தவர்களின் ஏழு வீடுகளில் மட்டுமே சமைத்த உணவை பிட்சை எடுத்து, அதில் கிடைப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும். துறவிக்கு, உரிய காலத்தில் பிட்சை உணவு கிடைக்கா விட்டாலும் வருத்தப்பட மாட்டான். அதேபோல், நல்ல உணவு கிடைத்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டான்.

துறவி எதனிடத்திலும் பற்றுக் கொள்ளாமல், புலன்களை அடக்கி, ஆத்மாவுடன் விளையாடிக் கொண்டு (தன்னிலேயே மனநிறைவு அடைந்தவனாக), எல்லா சீவராசிகளையும் சமமாகப் பார்த்து, தனியாகப் பூவுலகில் ஒரிடத்தில் தொடர்ந்து தங்காமல், நிலையின்றி திரிந்து வாழவேண்டும்.

மோட்சத்தில் விருப்பு-வெறுப்பற்ற துறவி, ஆத்மாவில் நிலைகொண்டவன் (ஞானநிஷ்டன்), வைராக்கியம் அடைந்தவன், ஆசிரம நியமங்களுக்கு (விதிகள்) கட்டுப்பட்டவன் அல்லன். தர்ம சாத்திரங்களில் கூறப்பட்ட செய்யத் தக்கவை, தகாதவை என்ற விதிகளை கடந்து, சந்நியாசி (துறவி) சுதந்திரமாக உலகம் சுற்றலாம்.

துறவி அனைத்தையும் அறிந்தவனானாலும், சிறுவனைப் போல் விளையாடுவான்; ஆற்றல் உள்ளவனானாலும், ஏதும் அறியாதவன் போல் இருப்பான்; பண்டிதனானாலும் பைத்தியம் போல் பேசுவான்; வேதாந்தங்கள் கற்றறிந்தவனானாலும் ஆசார – ஆசிரம நியமங்களை கடைப்பிடிக்காதவனாக இருப்பான். துறவிக்கு வேதம் கூறியுள்ள அக்னி காரியம் கிடையாது; யார் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வான்; எவரையும் அவமதிக்க மாட்டான்; மற்றவர்களிடம் விரோதம் கொள்ள மாட்டான்.

ஞானத்தில் நிலை பெற்ற துறவியிடம் இருமை (இன்ப- துன்பம், மான-அவமானம், குளிர்-வெப்பம்) போன்ற உணர்வுகள் காண முடியாது.

எந்தத் துறவிடம், ஞானமும் வைராக்கியமும் இல்லையோ, அவன் மூங்கில் தண்டத்தை சுமந்து வயிற்றை நிரப்பிக் கொள்பவனாக இருப்பானே தவிர, உண்மையான துறவியாக இருக்க மாட்டான். துறவியின் முதன்மையான தர்மம் – அமைதியும், அகிம்சைமே.
இவ்வாறாக ஒருவன் தன்னுடைய தர்மங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அந்தக்கரணம் (மனம்) தூய்மை அடைந்து, பட்டறிவு - மெய்யறிவு (ஞான-விக்ஞானம்) பெற்று இறுதியில் பிரம்மத்தை அடைகிறான்.


நன்றி :- விக்கிபீடியா

No comments:

Post a Comment