Thursday 5 October 2023

மகரிஷி அவர்களுடன் ……8 ( 6000th POST OF THIS BLOG )

 


இன்று வள்ளல் பெருமான் அவர்களின்  200வது ஜெயந்தி தினம்.

அவர் மகரிஷி அவர்களை ஆட்கொண்டதை மகரிஷி அவர்களே ஒரு கவியில் சொல்லியுள்ளார்கள். அது கீழே - 



05-02-1985அன்று மகரிஷி அவர்கள் தைப்பூசம் முன்னிட்டு வடலூர் வரப்போவது அறிந்து அங்கு அவர்களை சந்திக்க திட்டமிட்டேன்.நான் நெய்வேலியில் பணிபுரிந்தபோது அடிக்கடி வடலூர் சென்று வருவது வழக்கம். எனவே இந்த வாய்ப்புக்காக திட்டமிட்டு நெய்வேலியில் உள்ள நண்பர்களுக்கும் தெரிவித்திருந்தேன்.

ஆனால் பணி நிமித்தமாக பஞ்சாப் செல்லவேண்டியாகி விட்டது.

தைப்பூசம் அன்று மகரிஷி வடலூரில் நிகழ்த்திய சொற்பொழிவு மிக அற்புதமாக அமைந்ததாக என் நண்பர்கள் தெரிவித்தனர். சொற்பொழிவின் நடுவில் மகரிஷி சில நிமிடங்கள் சமாதி நிலையில் ஆழ்ந்து திளைத்தபோது அரங்கத்தில் உள்ள அனைவருக்குமே ஓர் அருள் அலை பாய்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாம். இதனை பலரும் எனக்கு தெரிவித்தனர். என்னால் அந்த நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் இன்னும் உள்ளது.

ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி  அவர் அவ்வப்போது சமாதி நிலையில் ஆழ்ந்தார்; பரவச நிலை அடைந்தார் என படித்திருக்கின்றோம். மகரிஷி அவர்கள் தான் அடைந்த பரவச நிலையை வடலூரில் கூடியிருந்த   ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கும் உணர்த்திய இந்நிகழ்ச்சி பலருக்கும் தெரியாத ஒன்று. எனவே இப்பதிவு.

( "வள்ளலார் விரித்த  கடை" என்ற தலைப்பில் என் நண்பர்கள் மகரிஷி பேசியதை சுருக்கமாக எனக்கு அனுப்பி வைத்தனர். அதனை பிறகு இங்கு பதிவிடுகின்றேன்).

1981ம் ஆண்டு மகரிஷி திருச்சி வந்தபோது வள்ளலார் பற்றி அவரிடம் நிறைய கேள்விகள் கேட்டேன். அவற்றில் ஒரு கேள்வியான

 " கடை விரித்தேன், கொள்வாரில்லை என வள்ளலார் ஆதங்கப்பட்டிருக்கின்றாரே " 

என்பதற்கு மகரிஷி அவர்கள் அளித்த பதில் -

" கடைத்தெரு என்றால் அந்த காலத்தில் வியாபாரிகள் பண்டமாற்று முறையில் பொருட்களை விற்பதற்கு ஏற்ற முறையில் வீடுகள் அமைந்த பகுதிகளைத் தவிர்த்து ஊருக்கு வெளியே ஓர் இடம் ஒதுக்கி கடை வீதி என அமைத்திருந்தனர். இப்போது கடைவீதி ஊருக்கு நடுவிலேயே, மக்கள் வசிக்கும் பகுதியிலே வந்து விட்டது.

வள்ளலார் எல்லாம் வல்ல முழுமுதற்பொருளாக உள்ள, சேரவேண்டிய இடமாக, கடைத்தேற வேண்டும் என்ற எண்ணத்தில் ' கடை விரித்தேன் ' என சொல்லியுள்ளார். இங்கு கடை என்றால் சுத்த வெளி எனக்கொள்ளவேண்டும். கடையை மூடிவிட்டாரா? திறந்தே உள்ளது. அதனால்தான் இவ்வளவு பேர்கள் இறையுணர்வு அனுபவிக்க வந்துகொண்டே உள்ளார்கள். நாம்தான் உலக மக்கள் அனைவருக்கும்   இந்த ஆன்மீகக் கடை பற்றி சொல்லி விளக்க வேண்டும். "


No comments:

Post a Comment