Thursday, 14 December 2023

மகரிஷி அவர்களுடன்...........11

இந்த பதிவில் வரும் நிகழ்வினை நினைக்கும்போதெல்லாம் நான் நெகிழ்ந்து போவேன்; பெருமிதம் கொள்வேன். மகரிஷி அவர்கள் என்னைத் தகுதிப்படுத்தி உற்சாகமூட்டிய, என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி. 

2000ம் ஆண்டு ஜனவரி முதல் வாரம் - ஆழியாரில் நடந்த ஒரு மூன்று நாள் பயிற்சியிக்கு சென்றிருந்தேன். இரண்டாம் நாள் காலை நிகழ்வு முடிவடைந்து மகரிஷி அவர்கள் தன் காலணிகளை அணிந்துகொள்ள வரும்போது அங்கு ஓரமாக நின்றுகொண்டிருந்த என்னைப் பார்த்து
 " எப்ப வந்தீங்க? "என்று வாஞ்சையுடன்  கேட்க
 " இரண்டு நாளாயிற்று சாமி " என பதில் அளித்தேன். 
" ஏன் என்னைப் பார்க்க வரவில்லை? " என மகரிஷி கேட்க
 " தங்களை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றேன் சாமி " என பதில் அளித்தேன். 
உடனே அவர்கள் " இன்று மதியம் மூன்று மணிக்கு வாங்க  "  என அழைத்தார்கள்.

சரியாக மூன்று மணிக்கு அவரது அறைக்குச் சென்றேன். எதோ எழுதிக்கொண்டிருந்த அவர்கள் என்னைப் பார்த்தவுடன் முகம் மலர வாழ்த்தினார்கள். நானும், மாலாவும் திண்டுக்கல்லிலிருந்து வெளிவரும்  'அன்புநெறி' மாத இதழில் ' மாணவர் பக்கம் ' என்ற தலைப்பில் எழுதிவரும் கட்டுரைத் தொடரினைக் குறிப்பிட்டு
 " நான் தொடர்ந்து படித்து வருகின்றேன். ஆக்கபூர்வமான  கட்டுரைகள். எட்டு வயதிலிருந்து பதினான்கு வயது மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயன்தருமாறு எழுதுகின்றீர்கள். " எனப் பாராட்டினார்கள். மேலும்
"இன்றைய இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்லும் மிகப் பெரிய பொறுப்பு நமக்குள்ளது. தங்கள் எதிர்கால இலக்குகளை அவர்களே தேர்ந்தெடுத்து செயல் படுத்த பயிற்சிகள் தர வேண்டும். "எனவும் கூறினார்கள். இளைஞர்கள் முன்னேற்றம் பற்றி பல நல்ல கருத்துக்களைக் கூறினார்கள். 

 அப்போது நான் " யார் ஒருவர் தன் இளவயதில் ன் எதிர்காலத்தைப் பற்றி தீர்க்கமாக முடிவெடுக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகின்றார்கள். சாதிக்கின்றார்கள் என பல மனோவியல் நிபுணர்கள் தங்கள் ஆய்வினை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். " எனக் கூறினேன்.

உடனே மகரிஷி அவர்கள் " நானும் என் எதிர்காலம் பற்றி பத்தொன்பது வயதில் ஒரு கவிதை எழுதியுள்ளேன். அதில் நான் எண்ணியபடி எல்லாமே நடந்துள்ளது " என்றார்கள். " அந்த கவிதை ஞானக்களஞ்சியத்தில் உள்ளதா? நான் பயன்படுத்திக்கொள்ளலாமா? " என மிக ஆவலுடன் கேட்டேன்.

அதற்கு மகரிஷி அவர்கள்  1955க்குப் பிறகு நான் எழுதியவைதான் அச்சில் உள்ளன. இந்த கவி ஒரு தாளில் எழுதப்பட்டு ஒரு பழைய டைரியில் உள்ளது " என்றார்கள். எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்த உணர்வு. அந்தக் கவியினைத் தந்தால் என் கட்டுரையில் எழுதி அன்பு நெறிக்கு அனுப்புகின்றேன். " என வேண்டினேன்.

தன் உதவியாளரை  அழைத்து பீரோவில் இருந்த பழைய டைரிகளில்  தேடினார்கள்.  4 மணி மாலை நிகழ்விற்கு மகரிஷி செல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
" அந்த கவியினை நான் உங்களுக்கு அனுப்பி வைக்கின்றேன்." எனக் கூறி 
"நாம் இந்த நூற்றாண்டின் நிறைவில் இருக்கின்றோம். அடுத்த ஆண்டு புது நூற்றாண்டு  மட்டுமல்ல - அடுத்த மில்லினியத்தையும் காண இருக்கின்றோம். குழந்தைகளை, இளைஞர்களை ஊக்குவிக்கும்படியாக உங்கள் பணி தொடரட்டும்." என வாழ்த்தி அனுப்பினார்கள்.

மகரிஷி கவியினை எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், 2000 செப்டம்பர் மாத அன்பொளி மாத இதழில் " மகரிஷிகள் தங்கள் வாலிப வயதில் உருவாக்கி வெற்றி கண்ட சங்கல்பம் " என்ற தலைப்பில் மகரிஷி அவர்களின் இள வயது கவி வெளியாகியிருந்தது. அது மாத்திரமல்ல " இந்த சங்கல்பத்தினால், தான் எதிர்பார்த்த பயனும், உலகத்திற்கு தர நினைத்த பயனும் கிடைத்த பின்   அன்று எடுத்த முடிவு " என்ற தலைப்பில் புதிதாக ஒரு கவி எழுதி வெளியிட்டிருந்தார்கள்.

நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை !

அந்த கவிகள் கீழே -

 

அடுத்த முறை மகரிஷி  அவர்களை சந்தித்தித்தபோது நன்றி சொல்லி 
" 'செல்வதில் சிறந்திடுவேன்'  கவிதையினை மாணவர்களுக்கான பயிற்சிகளில் சொல்லி அவர்களை உற்சாகப படுத்துவோம். இந்த கவிகளை ஞானக்களஞ்சியத்தில் வெளியிட ஏற்பாடு செய்யுங்கள் " என வேண்டினோம். அப்போது  மகரிஷி அவர்கள்
 " நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். உங்களால்தான் இந்த இரண்டு கவிகளும் வெளிவந்துள்ளன"என்று எங்களைத்  தகுதிப் படுத்தினார்கள்.

ஞானக்களஞ்சியம் அடுத்த பதிப்பில் இக்கவிகள் வெளியாகின.
அதனைக் கீழே கொடுத்துள்ளேன்:

பிப்ரவரி 2001 மாத அன்புநெறி இதழில் மகரிஷி அவர்களின் கவிதையினை மாணவர் பக்கம் கட்டுரையில்  எழுதியிருந்தோம்.
அது கீழே -

மேற்சொன்ன நிகழ்வினை நினைக்கும்போதெல்லாம் மகரிஷி எங்களிடம் காட்டிய அன்புக்கும், கருணைக்கும் என்றென்றும் நன்றியுடன் அவர் விரும்பிய உலக அமைதி கிட்டிட இளைய தலைமுறையை உருவாக்க உறுதி கொண்டோம்.

அந்த முயற்சியில் பத்து ஆண்டுகளுக்குமுன் எல்லா வயது மாணவர்களுக்கான Value Education பயிற்சி மூன்று நாட்களுக்கு தேர்ந்தெடுத்த மனவளக்கலை ஆசிரியர்களுக்கு ஆழியாரில் தரப்பட்டது. 

அப்பயிற்சி தற்போது 'பதின்பருவ பயிற்சியாக' மாணவர்களுக்கும், மாணவியருக்கும்  15நாட்கள் தனித்தனியே நடத்தப்பட்டு வருகின்றன.



No comments:

Post a Comment