Sunday, 6 March 2022

விண்ணில் மிதக்கும் தங்கச் சுரங்கம்

Thanks - The Hindu Tamil


 சூரிய மண்டலம் உருவானபோது ஏற்பட்ட மோதலில் பல சிறுகோள்கள் பெரும் கிரகங்களிலிருந்து பிரிந்து உருவாகி மிதக்கத் தொடங்கின. அப்படி உருவான சிறுகோள்களில் ஒன்றே, சைக்கி 16 எனும் சிறுகோள். இந்தச் சிறுகோள் மார்ச் 17, 1852இல் அன்னிபாலே டி காஸ்பரிஸ் எனும் இத்தாலிய வானியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அன்பின் கடவுளான ஈரோஸைத் திருமணம் செய்த சைக்கி எனும் கிரேக்கத் தேவதையின் பெயரை இந்தச் சிறுகோளுக்கு அவர் சூட்டினார்.

200 கி.மீ. அகலம் கொண்ட இந்தச் சிறுகோள் 'கோல்ட்மைன் ஆஸ்டிராய்டு' என்று நாசாவால் குறிப்பிடப்படுகிறது. இந்த விண்வெளிச் சுரங்கம் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சூரிய மண்டலத்தில்தான் சுற்றி வருகிறது. உண்மையில், இது தங்கம், பல அரிய வகை உலோகங்கள் போன்றவற்றால் ஆன ஒரு பெரிய விண்வெளிப் பாறை.

இந்தச் சிறுகோளில் இருக்கும் தங்கத்தின் மதிப்பு மட்டும் இந்திய ரூபாய் மதிப்பில் 750 கோடி கோடிக்கு மேல் என்று நாசா மதிப்பிட்டுள்ளது. பல விலைமதிப்பற்ற உலோகங்கள் நிறைந்திருப்பதால் அதன் ஒரு சிறு துண்டுகூடப் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கும் என்று நாசா கூறுகிறது.

நாசாவின் கூற்றுப்படி, இந்த சைக்கி 16 (Psyche 16) சிறுகோள் பூமியிலிருந்து 32 கோடி கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தச் சிறுகோள் தற்போது செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களின் சுற்றுப்பாதைகளுக்கு இடையில் அமைந்துள்ளது.

நாசா விண்வெளி நிறுவனம் அதன் தோற்றத்தைக் கண்டுபிடிக்க 2026ஆம் ஆண்டுக்குள் 'சைக்கி 16' என்கிற பெயரில் ஒரு சிறுகோள் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. நாசாவின் திட்டத்தின்படி, வரும் 2026ஆம் ஆண்டில் சைக்கி சிறுகோளை ஆய்வு செய்ய ஒரு விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்படும். சைக்கி 16 சிறுகோளை, மல்டிஸ்பெக்ட்ரல் இமேஜர், காமா-ரே, நியூட்ரான் ஸ்பெக்ட்ரோமீட்டர், மேக்னெட்டோமீட்டர், ரேடியோ இன்ஸ்ட்ருமென்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி நாசா அனுப்பும் விண்கலம் ஆய்வு செய்யும்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கல்யாணி சுகத்மே இந்தத் திட்டத்தின் பேலோட் மேலாளராக இருக்கிறார். இவர் மும்பையில் வளர்ந்தவர். அவருடைய பெற்றோர் கணிதப் பேராசிரியர்கள். மும்பை ஐ.ஐ.டி.யில் படித்த அவர் தற்போது நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் பணிபுரிகிறார். சரியான, முறையான பகுப்பாய்வு ஆராய்ச்சி மூலம் இந்தச் சிறுகோள் பற்றிய துல்லியத் தகவலை இவருடைய தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிக்கும் என்று நாசாவுடன் சேர்ந்து நாமும் நம்புவோம்.


No comments:

Post a Comment