Sunday 20 March 2022

மத்த விலாசப் பிரஹசனம்.


அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை. 


ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.


இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன். 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:- 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்



பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது. 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர். 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது. 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர். 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

Thanks to Sri Chandrasekar who sent this for Gnanavayal

No comments:

Post a Comment