Tuesday, 8 March 2022

மகளிர் தினம்

 



ஆணகளுக்கும், பெண்களுக்கும் உள்ள வித்தியாசம் இது தான். கணவன் அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ போகும் போது கூட மனைவியானவள் "அவரை நல்லபடியாகக் காப்பாற்று," என்று ஏதேனும் ஒரு தெய்வத்தை வேண்டிக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம். சமுதாயத்தில் ஒரு பழக்கமாகவே இது வந்து விட்டது. ஆனால் ஆண்களோ நல்லதாக இருந்தாலும் பெண்ணை பாராட்டுவதற்கு ஒரு கஞ்சத்தனம்! பெரிய பெரிய நன்மைகளை எல்லாம் தொடர்ந்து பெற்றவர்கள் கூட என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள்? ஒரு சிறிய பாராட்டு வாய் திறந்து சொன்னால் அவள் கை ஓங்கி விடுமாம்!  தானாக தன்னுடைய மனைவியைப் பாராட்டி அதிலே இருந்து அந்த இன்பத்தை அடையக் கூடிய மறுக்கக் கூடிய உள்ளங்களுக்கு அன்பு என்பது எங்கே உண்டாகும்? இதற்கு அடிப்படைக் காரணம் என்ன என்றால் நீண்ட காலமாகப் பழக்கத்தில் பெண்களை சாதாரணமாக உபயோகப்படக் கூடிய பொருளாகவே மதித்து மதித்து, அதே மாதிரி நிலையிலே பல நூல்கள் வந்ததனால் அந்தக் கருத்து இன்றும் நிலவி வருகிறது. பெண்களுக்குச் சம உரிமை மாத்திரம் இல்லை, பெரிய மதிப்பும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அது தான் எனது கவிதை நூலிலே ஒரு கவியிலே எழுதி இருக்கிறேன்:


"பெண் வயிற்றி லுருவாகிப்
பெண் பாலுண்டே வளர்ந்தாய்
பெண் துணையால் வாழ்கின்றாய்
பெண்ணின் பெருமை உணர்,"

என்று, தாய்க்குலத்திற்கு நாம் ஏன் அவ்வளவு மதிப்புத்தர வேண்டியதாக இருக்கிறது என்று உலக சமாதானம் என்ற நூலில் ஒரு இடத்தில் விளக்கம் கொடுக்கும் போது,

"பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமை இதை விட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்பு பெற்ற மக்கள் தம்மை,
பிறர் வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்,
பெண்ணினத்தின் விடுதலைக்கு இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்,"


என்று எழுதியுள்ளேன்.  வேறு என்ன பெருமை இதைவிட எடுத்துக் கூறுவதற்கு? வேறு ஒரு பெருமையும் நீங்கள் பேச வேண்டியதில்லை; எல்லாருமே பெண்களால் அளிக்கப்பட்ட, பெறப்பட்ட பிள்ளைகள்தான் என்பதை உணர்ந்தாலே போதும்.  சம உரிமை மாத்திரம் அல்ல, இன்னும் பிரத்தியட்சமாக சில உரிமைகள்கூட அவர்களுக்குக் கொடுத்து நாம் வாழ வைக்க வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். போன காலம் எல்லாம் போகட்டும், இனி வருங்காலத்திலேயாயினும் முதலில் அவரவர்கள் வீட்டிலே தொடங்க வேண்டும்.

- வேதாத்திரி மகரிஷி

No comments:

Post a Comment