Monday 7 March 2022

அம்மாவின் டைரியிலிருந்து....2


அம்மா @ ஆழியார்

 அம்மாவின் டைரி.......

மாவிளக்கு 

அம்மாவின் டைரியிலிருந்து முதலில் வீட்டில் குழந்தை பிறந்த பிறகு அதற்கு மொட்டை அடிக்க கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை அவர்கள் எழுதியபடி கீழே தந்துள்ளேன் :

முதல் மொட்டை - கூறைநாடு அங்காளம்மன் கோயிலிலும் 

இரண்டாவது மொட்டை - வைதீஸ்வரன் கோயிலிலும் 

மூன்றாவது மொட்டை  குலதெய்வம் புவனகிரி ஐயனார் கோயிலிலும்

நான்காவது மொட்டை  தெரு பிள்ளையார் கோயிலுக்கும் 

ஐந்தாவது மொட்டை வீட்டில் உள்ள சாமி படங்களுக்கும் அவசியம் அடிக்க வேண்டும்.

பிறகு வேண்டுதல்கள் இருந்தால் மற்ற கோவில்களுக்கும் அடிக்கவேண்டும்

 எல்லா இடங்களிலும் மொட்டை அடித்தபின் சாமிக்கு மாவிளக்கு போட்டு படைக்க வேஎண்டும்.

அங்காளம்மனுக்கும், ஐயனாருக்கும் மாவிளக்கோடு கஜ்ஜாயம் செய்து படைக்க வேண்டும்.

மாவிளக்கு செய்முறை

தேவைப்படும் பொருட்கள் :

பச்சரிசி  முக்கால் கிலோ

வெல்லம்  அரை கிலோ

முந்திரி, திராட்சை, நெய், தேன், ஏலக்காய் - தேவையான அளவு

தேங்காய் - ஒன்று

பச்சரிசியில் பால் கலந்து பிசைந்து உலர்ந்த பிறகு கல் இயந்திரத்திலோ அல்லது உரலில் விட்டு இடித்தோ அல்லது வேறு வகையில் அரைத்தோ எடுத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி அதில் கலந்து கொள்ள வேண்டும். வெல்லத்தையும் நன்கு நசுக்கி பொடி செய்து மாவுடன் கலக்க வேண்டும். முந்திரி, தேன், திராட்சை மற்றும் ஏலக்காய் பொடி இவற்றை மாவுடன் நெய் விட்டு கலந்து நன்றாக பிசைய வேண்டும். பிறகு இந்த மாவினை இரண்டு சம பங்காகப் பிரித்து  இரண்டு உருண்டைகளாக  பிடித்து அதை அழகான கூம்பு வடிவமாக மாற்றி அடிப்பக்கம் பெரிதாகவும் மேல் பக்கம் ஒரு குழி ஏற்படுத்தி அதில் நெய் விட்டு திரி விட்டு ஏற்றி படைக்க வேண்டும்.

ஸ்ரீராம் & அம்மா 1994

( எனக்கு சிறு வயதில் மொத்தம் 14 மொட்டைகள் போடப்பட்டன. ஸ்ரீராமிற்கு 9 மொட்டைகள்! மாவிளக்கு பற்றிய என் பழைய பதிவினைப் படிக்க இங்கே சொடுக்கவும் )






No comments:

Post a Comment