தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை என அமையும் சங்க நூற்களில் உணவு முறை பற்றிய பல்வேறு குறிப்புகள், புலவர்களால் வருணனைகளாகவும், உவமைகளாகவும் பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
தொல்காப்பியத்தின் இலக்கண நூற்பாக்களில் தேன், எள், எண்ணெய் ஆகியன பழக்கத்தில் இருந்தன என்பதற்குரிய சான்றுகளைக் கூறு கின்றன.
சங்க இலக்கியமான பத்துப்பாட்டிலும் பல்வேறு உணவுக் குறிப்புகள் கிடைக்கின்றன.
விருந்தோம்பும் பண்பு சங்கத் தமிழரின் உயிர்ப் பண்பாக விளங்கியது.
அல்லில் ஆயினும் விருந்தினரை உவப்போடு வரவேற்கும் பண்பு, செல்விருந்தோம்பி, வருவிருந்தினை நோக்கிக் நிற்கும் மாண்புடைய மக்கள், சங்க கால மக்கள்.
தலைவன்-தலைவியின் வாழ்க்கையை விவரிக்கும் இடமாயினும், பாடல் பெறும் அரசனின் புகழைப் பாடும் இடமாயினும், புலவர்கள் உணவு முறைகளைப் புகுத்தித் தங்கள் பாடலை இயற்றினர்.
பொருநர், பாணர், கூத்தர் என்னும் கலைவாணர்கள் பேரரசர்களையும், சிற்றரசர்களையும், செல்வந்தர்களையும் கண்டு தத்தம் கலைகளை விளக்கிப் பரிசில் பெறச் செல்லுங்கால் மன்னர்கள் அவர்களுக்கு நல்லாடை கொடுத்து நல்ல சுவையான உணவு படைத்துப் பொருளுதவியும் அளித்தனர்.
இவ்வாறு பரிசில் பெற்ற கலைஞர்கள் தாங்கள் பரிசில் பெற்ற இடத்தின் உணவுப்பழக்கங்கள் குறித்து பாடத் தவறவில்லை.
அவர்களின் பாடல்களிலிருந்து கிடைக்கும் விவரப்படி ஐவகை நிலப்பாகுபாடிற்கேற்ற உணவு முறைகளைக் காண்போம்.
குறிஞ்சி நிலத்தார் உணவு:-
சோழ நாட்டுக் குறிஞ்சி நில மக்கள் தேனையும் கிழங்கையும் உண்டனர்.
பிற நிலத்தார்க்கும் இவைகளைக் கொடுத்து அதற்குப் பதிலாக மீனும், நெய்யும், நறவையும் வாங்கிச் சென்றார்கள்.
நன்னன் என்னும் குறுநில மன்னனின் சவ்வாது மலையின் அடிவாரத்தில் இருந்த சிற்றூர் மக்கள், நெய்யில் வெந்த இறைச்சியுடன் தினைச்சோறு உண்டதாகக் குறிப்பு கிடைக்கின்றது.
இவைமட்டுமின்றி, உடும்பின் இறைச்சியையும், பன்றி இறைச்சியையும், மானின் இறைச்சியும் உண்டனர்.
நெல்லால் சமைத்த கள்ளையும் மூங்கில் குழையினுள் முற்றிய கள்ளையும் பருகினர்;
மூங்கில் அரிசிச் சோற்றுடன் பலாக்கொட்டை, மா, புளிநீர், மோர் கொண்டு தயாரித்த குழம்பு சேர்த்து உண்டதாகவும் அறிகின்றோம்.
மலை நாட்டைக் காவல் புரிந்த வீரர்கள் உட்கொண்ட இறைச்சியும் கிழங்கும், மலைமீது நடந்து சென்ற கூத்தர்கள் தினைப்புனக் காவலனால் கொல்லப்பட்ட காட்டுப் பன்றியின் இறைச்சியை வாட்டித் தின்றமையும் இக்கருத்திற்குச் சான்றாகும்.
பாலை நிலத்தார் உணவு:-
பாலை நிலத்து மக்கள் இனிய புளியங்கறி இடப்பட்ட சோற்றுடன் ஆமாவின் இறைச்சியை உண்டனர்.
தொண்டை நாட்டினைச் சேர்ந்த பாலை மக்கள் புல்லரிசியினை நில உரலிற் குற்றிச் சமைத்து அதனுடன் உப்புக் கண்டம் சேர்த்து உண்டிருக்கின்றனர்.
விருந்தினர்க்குத் தேக்கிலையில் விருந்து படைத்தனர். மேட்டு நிலத்தில் விளையக்கூடிய ஈச்சங்கொட்டை போன்ற நெல்லரிசிச் சோற்றுடன் உடும்பின் பொரியலையும் அவர்கள் உட் கொண்டனர்.
முல்லை நிலத்தார் உணவு:-
நன்னனது மலைநாட்டு நிலத்தார் அவரை விதைகளையும் மூங்கில் அரிசியையும், நெல்லின் அரிசியையும் கலந்து புளி கரைக்கப்பட்ட உலையிற் பெய்து புளியற்கூழாகக் குழைத்து உட் கொண்டனர்.
அதுவுமின்றிப் “பொன்னை நறுக்கினாற் போன்ற அரிசியுடன் வெள்ளாட்டிறைச்சி கூட்டி ஆக்கிய சோற்றையும் தினைமாவையும் உண்டனர்”.
தொண்டை நாட்டு முல்லை நிலத்தார் பால் கலந்த திணையரிசிச் சோறும் வரகரிசிச் சோற்றுடன் அவரைப் பருப்பு கலந்து பெய்த கும்மாயம் என்று பெயர் பெற்ற உணவையும் உண்டிருந்தனர்.
மருத நிலத்தார் உணவு:-
நீர் வளமும் நில வளமும் நிறைந்த இந்நிலத்து மக்கள் கரும்பையும், அவலையும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து அவர்களிடமிருந்து மான் இறைச்சியையும் கள்ளையும் பெற்றனர்.
ஒய்மாநாட்டு மருத நிலத்தார் வெண் சோற்றையும், நண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலவையையும் உண்டனர்.
தொண்டைநாட்டு மருத நிலச் சிறுவர்கள் பழைய சோறு உண்டனர்.
அவலை இடித்து உண்டனர்.
தொண்டை நாட்டு மருதநில மக்கள் நெற்சோற்றுடன் பெட்டைக் கோழிப் பொரியல் உண்டதுடன் பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியவற்றையும் உண்டனர்.
நெய்தல் நில மக்களின் உணவு:-
நெய்தல் மக்கள் கடல் இறால், வயல் ஆமை இவற்றைப் பக்குவப்படுத்தி உண்டனர். பனங்கள், நெல்லரிசிக் கள் போன்றவற்றை உண்டனர்.
கள் விற்கப்படும் இடங்களில் மீன் இறைச்சி, விலங்கிறைச்சி ஆகியனவும் விற்கப்பட்டன.
ஓய்மாநாட்டு நெய்தல் நிலத்தார் உலர்ந்த குழல் மீனின் சூடான இறைச்சியுடன் கள் உண்டதாகத் தெரிகின்றது.
தொண்டை நாட்டுப் பட்டினத்தில் கொழுக்க வைத்த கருப்பஞ்சாறு பருகினர்...
அரண்மனைகளில் நாவிற்குச் சுவையான உணவுடன், சுவையான கள்ளும் தரப்பட்டது.
உணவில் இனிப்புகள், முல்லையரும்பு ஒத்த அன்னம், பாலைக் காய்ச்சி அதனோடு கூட்டின் பொரிக்கறிகளும், கொழுத்த செம்மறிக் கடாவின் இறைச்சியினைச் சுட்டும் வேகவைத்தும் படைக்கப்பட்டன.
விருந்தின் முடிவில், குங்குமப்பூ மணக்கின்ற தேறல் பருகத் தரப்பட்டது.
தொண்டை நாட்டுத் தலைவன் இளந்திரையன் பலவகையான இறைச்சி உணவைத் தயாரித்து விருந்து படைத்தது மட்டுமின்றிச் செந்நெற்சோறு வடித்துச் சர்க்கரை அடிசில் ஆக்கிச் சிறியவர்கட்குச் சிறிய வெள்ளிக் கலங்களிலும், முதியோர்க்குப் பெரிய வெள்ளிக் கலங்களிலும் அளித்து மகிழ்வித்தான்....
No comments:
Post a Comment