Thursday 26 May 2022

இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் - 2


 பல்வகை உணவுகள்


சங்க காலத்தில் கரிய சட்டியில் பாகுடன் வேண்டுவன கூட்டி நூல் போல அமைத்த வட்டிலும், பாகில் சமைத்த வரிகளையுடைய தேனிறாலைப் போன்ற மெல்லிய அடைகள், பருப்பையும் தேங்காயையும் உள்ளீடாகக் கொண்ட கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த மோதகம், இனிப்புடன் மாவு கரைத்துத் தயாரித்த சிற்றுண்டிகள் ஆகியவற்றைத் தயாரித்து உண்டனர்.
தென்பாண்டி நாட்டுப் பரதவர்கள், கொழுத்த இறைச்சியிட்டுச் சமைக்கப்பட்ட சோற்றைப் பெரிதும் விரும்பி உண்டனர்.
பாண்டியர் தலைநகரான மதுரையில் ஏழைகளுக்கென உணவுச்சாலைகள் அமைக்கப் பெற்று, அங்கிருந்த எளியவர்களுக்கு, பலாப்பழம், மாம்பழம், வாழைப்பழம், முந்திரிப்பழம், பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய், இனிப்புச் சுவையுடைய பண்ணியங்கள் சமைக்கப் பெற்ற கிழங்கு வகைகள், பாற்சோறு ஆகியன படைக்கப்பெற்றன.
தோப்புகளில் வாழ்ந்த உழவர்கள், பலா, வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றை வழிநடை செல்லும் பாணர்க்கு அளித்து விருந்தோம்பினர்.
எட்டுத் தொகை கூறும் உணவு முறைகள்:-
உளுந்து மாவினை நெய்விட்டுப் பிசைந்து கொடி போன்று கயிறு திரித்து வெய்யிலில் உலர்த்தினர். இக்காலத்து ‘வடாகம்’ போன்று அமைவது இது.
எயினர்கள் முள்ளம்பன்றியின் ஊனை உண்டனர்.
சோறு வேறு, ஊன் வேறு எனப் பிரிக்க இயலாதவாறு, ஊன் குழையச் சமைத்த உணவு பற்றிய குறிப்பினைப் பதிற்றுப்பத்தில் காணலாம்.
செவ்வூணுடன் துவரையைக் கலந்து துவையலாக்கி உண்டனர்.
அவரை முதலானவற்றை உணவில் கூட்டிச் சர்க்கரை கலந்து உண்டனர்.
இறைச்சியைத் துண்டித்து வேக வைத்து நெய்விட்டுத் தாளிதம் செய்தனர்.
கடுகைக் கொண்டு நெய் கலந்தும் தாளிதம் செய்தனர்.
பாலுடன் கலந்த சோற்றில் தேன் கலந்து உண்டனர்.
பழஞ்சோறு, புளிச்சோறு ஆகியவற்றையும் உணவாகக் கொண்டனர்.
மட்பாண்டங்களில் சமையல் செய்தனர். உணவு உண்ணும்போது, சோற்றில் நெய் பெய்து உண்டனர்.
குறமகள் தன் பசி தீரத் தினைமாவினை உண்டாள்.
முற்றிய தயிரைப் பிசைந்தும், ‘புளிப்பாகன்’ எனும் கழம்பைத் தலைவனுக்கு அளித்தும் தலைவி மகிழ்ந்தாள்.
பாலை நிலத்து வழிச் செல்வோர் நீர்வேட்கை தணிய நெல்லிக்காய் உண்டனர். பசி தீர விளாம்பழம் உண்டனர்.
மருதநில உழவன் நிலம் உழுதற்குச் செல்லுமுன் விடியலில் வரால்மீனைச் சோற்றில் பிசைந்து உண்பார்.
கார் காலத்து மழை பெய்தபின் புற்றில் இருக்கும் ஈசலை இனிய ஆட்டு மோருடன் பெய்து அத்துடன் புளிச்சோற்றைக் கலந்து உண்பர்.
மறவர், வெண்சோற்றுடன் பன்றி இறைச்சியைக் கலந்து உண்டனர்.
இறைச்சியுணவு தெவிட்டி வெறுத்தால், பால் கலந்து செய்தனவும் வெல்லப்பாகு கொண்டு செய்தனவுமான பணியாரங்களை உண்டனர்.
இறைச்சி கலந்த சோற்றுணவில் நெய்யை நீரினும் மிகுதியாகப் பெய்து உண்டனர். நெய்யால் வறுக்கப்பட்ட வறுவலையும், சூட்டுக்கோலால் சுடப்பட்ட கறியையும் சுவைத்தனர்.
உழவர்கள் வாளை மீன் பொரியலுடன் பழைய சோற்றை உண்டனர்.
குடிவகை:-
சங்ககால மக்கள் பல்வேறு மூலப்பொருள்களிலிருந்து தயாரித்த மதுவையும் கள்ளையும் பருகி மகிழ்ந்தனர்.
தென்னங்கள், பனங்கள், அரிசிக்கள், தேக்கள், யவன மது தோப்பிகள், நறும்பிழி, குங்குமப்பூ மணம் கமழும் தேறல் போன்ற பல்வகை மதுவையும், கள்ளையம் அவரவர் விருப்பத்திற்கும் வாழ்க்கைத் தரத்திற்குமேற்ப தயாரித்துப் பருகினர்.

No comments:

Post a Comment