Thursday, 12 May 2022

சுஜாதா எழுதிய " வடக்கத்திக் கல்யாணம் ", etc


என் நண்பன் தேவேந்திர கோயல் போன வாரம் வரை நன்றாக இருந்தான். திடீரென்று கல்யாணம் செய்து கொண்டு விட்டான். கோத்ரேஜ் அலமாரி அப்புறம் ரேடியோ, ரெப்ரிஜிரேடர்,டெரிலின் சூட் கொடுக்கிறார்கள் என்று கல்யாணம் பண்ணிக் கொண்டானாம். கூட ஒரு பெண்ணையும் கொடுக்கிறார்கள் என்று பிற்பாடுதான் தெரிந்தது. லேட்!


• டெல்லியில் வடக்கத்திக் கல்யாணம் வினோதமானது. காலை எட்டு மணி வரைக்கும் இந்த வீட்டிலா கல்யாணம் நடக்கப் போகிறது என்றிருக்கும். திடீரென்று புயல்போல் சர்தார்ஜி வருவார், ஒரு லாரியில் நாற்காலிகளுடன். இன்னொரு சர்தார் சமைத்த கோழிகளுடன் வந்து இறங்குவார். பின்னால் ஒருவர் பந்தல் துணியுடன் வருவார். அவர் பின்னால் ஸ்வாகத் போர்டு, சக்கர கலர் விளக்கு கம்பிகள் இவற்றோடு எலெக்ட்ரீஷியன் சர்தார்ஜி. ‘பீப் பீப்’ என்று சத்தம் கேட்டு எல்லாரும் ஒதுங்குவார்கள். பாண்டு கோஷ்டி வந்து நிற்கும்.

அப்புறம் ஒரு வெள்ளைப் பெண் குதிரை நொந்துபோய் வரும். அதன் மேல் பூக்களால் ஆன ஒரு குழப்பம். அதுதான் பையன். பையன் பெண்ணின் முகத்தைப் பார்க்கவே மாட்டான். எல்லாவற்றையும் மூடி வைத்திருப்பார்கள். சிறு பையன்களுடன் தடி ஆண்பிள்ளைகள் டுவிஸ்ட் ஆடுகிறேன் என்று சுளுக்கெடுத்து உள்ளே ஒரு எலும்பு மளுக்கென்று ஒடிகிற வரைக்கும் ஆடுவார்கள். பிறகு எல்லோரும் கொக்கோகோலா சாப்பிடுவார்கள். நிறைய ஸ்வீட் வினியோகம் செய்வார்கள். இந்த ஊர் மாப்பிள்ளைகள் பெண்ணுக்குத் தாலி கட்டுவது இல்லை. அப்படி ஒரு வழக்கம் இல்லாதது நல்லதுதான். மற்ற சில்லறை அமர்க்களத்தில் அது மறந்துபோய் விடுமல்லவா?

• மெஸ்ஸில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் என் நண்பர் ஸ்ரீ திடீரென்று தேசபக்தி மிஞ்சிப் போய் ஜவான்களுக்கு ரத்தம் கொடுக்க வெலிங்டன் ஆஸ்பத்திரிக்குச் சென்றார். அவருக்கு ரத்தம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

• டில்லி கரோல்பாக்கில் உள்ள ஏராளமான மதறாசி ‘மெஸ்’களில் ஒன்றில் நுழைகிறோம். எல்லா மெஸ்களுக்கும் பொதுவான சில விஷயங்கள் : பஜனை சமாஜ நோட்டீஸ், ப்ரொப்ரைட்டரின் போட்டோ, ரீகல் தியேட்டரில் ஞாயிறு காலை தமிழ் சினிமா விளம்பரம், ஊதுபத்தி, காதில் பூ வைத்த ராயர், பேரேடு கணக்கு நோட்டு, ‘தோஸ்ஸை’ (இன்றைய ஸ்பெஷல்) அப்புறம்... ஸ்டெனோகிராபர்கள்.

• நம் தமிழ் வார, மாதப் பத்திரிகைகளின் தரத்தைப் பற்றி வருத்தப்பட வேண்டியது படித்தவர்களின் பொறுப்பு. ஒரு முக்கியமான தமிழ்ப் பத்திரிகையில் வெளியான சிறுகதையின் ஆரம்பம் இப்படி!

‘சாப்பிட்ட களைப்பால் சோபாவில் சாய்ந்திருந்த சேகரை மெல்லத் தொட்டாள் உஷா. தொடர்ந்து “இந்தாருங்கள்” என்று அழைத்தாள்.‘

உஷா மேலே என்ன செய்தாள் என்று நமக்கு ஆர்வம். இத்துடன் ஒரு ஆங்கிலக் கதையின் ஆரம்பத்தை ஒப்பிடலாம்.

‘தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த ஆசாமிக்கு ஒரு தலை இல்லை...’

இந்த ஆரம்பம் திடீரென்று நம்மைக் கவர்கிறது. மேலே அவசரப்பட்டு படிக்கிறோம். இம்மாதிரி துவங்கி எப்படி ஆசிரியர் தப்பிக்கப் போகிறார்  என்று. இப்படித் தப்பிக்கிறார்: “தலை இல்லை என்றா சொன்னேன்? மன்னிக்கவும், எனக்கு ஞாபக மறதிஅதிகம். ஒரு கை இல்லை அவனுக்கு.”
எப்படியோ, உங்களை கதைக்குள் இழுத்து விட்டார். தமிழில் நல்ல சிறுகதைகளே இல்லை என்று சொல்ல வரவில்லை. என் வருத்தம் ஏன் இப்போது கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறார்’, கு.ப.ராஜகோபாலனின் ‘விடியுமா’ போன்ற கதைகள் வருவதே இல்லை என்பதுதான்.

• காற்று வாங்கப் போனேன் - ஒரு
கழுதை வாங்கி வந்தேன் - அதைக்
கேட்டு வாங்கிப் போனான் - அந்த
வண்ணான் என்ன ஆனான்?... ஆ.... (காற்று)

தமிழ் சினிமாப் பாட்டுகளை இம்மாதிரி கொஞ்சம் மாற்றிப் போட்டுப் பாடுவதில் உற்சாகமிருக்கிறது. மற்றொரு உதாரணம் :

பாலிருக்கும் பழமிருக்கும், பசியிருக்காது. பஞ்சணையில் தூக்கம் வரும், காற்று வராது.

நீங்கள் வேறு உதாரணங்கள் யோசிக்கலாம்.

• அச்சுப் பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது. ‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகராகிறார். சென்ற இதழில் சில சுவாரஸ்யமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்தகம், சுமையுள்ள புத்தகமானது. “அத்தா, உனை நான் கண்டுகொண்டேன்” என்ற ஆழ்வார் வரி, “அத்தான் உனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது. நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்றதற்கே.  அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள எடினத்தை நான் அறிவேன்.

சுஜாதா எழுதிய கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து.

No comments:

Post a Comment