Sunday 29 May 2022

மகாபாரத தத்துவ விளக்கம்


மகாபாரத யுத்தம் பற்றிய தத்துவ விளக்கம் ஒன்று பல ஆண்டுகளாக  'வாட்ஸ் அப் ' இல்  சுற்றி,  சுற்றி வருகிறது. 

குருக்ஷேத்திர யுத்தத்தில் போரிட்ட வீரர்களுள்  பெரும்பாலானவர்கள் வீர மரணம் எய்தினார்கள் என்பது மகாபாரத இதிகாசம் சொல்லும் செய்தி.

சஞ்சயன்  போர் முடிந்த பின், குருக்ஷேத்திர  யுத்தம் நடந்த இடத்திற்கு செல்கிறார். அங்கு பேரமைதி  நிலவுகிறது. " இங்கு தானா யுத்தம் நடந்தது? இங்கு தான் அர்ஜுனரும் கிருஷ்ணரும் போரிட்டார்களா? இங்கு தான் கீதை உபதேசிக்கப்பட்டதா? "போர் நடந்ததற்கான தடயம் எதுவும் இல்லையே ! குனிந்து நிலத்தைப் பார்க்கிறார் சஞ்சயன் .  இத்தனைப் பேரை பலி வாங்கிய இடத்தில் , ரத்தம்  சிந்தின தடயம் கூட இல்லையே ! ஒரு வேளை நிலம் அத்தனை ரத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டு விட்டதோ? என்று சஞ்சயன் சிந்திக்கும் நேரத்தில்,
" நீ உண்மை அறியும் நோக்கத்தில்  இங்கு வந்திருக்கிறாய் சஞ்சயா. ஆனால் உனக்கு அது தெரியவே போவதில்லை. " என்று , வயது முதிர்ந்த மெண்மையான குரல் சஞ்சயனைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

"யார் அது ?" திரும்பிப் பார்த்த சஞ்சயன் கண்களுக்கு ஒரு வயதான மனிதர் தூசு படிந்த உடையுடனும்,  தூசு படிந்த தேகத்துடனும்  மெதுவாக சஞ்சயனை நோக்கி நடந்து வந்துக் கொண்டிருந்தார்.

"யார் நீங்கள்? என்ன சொல்கிறீர்கள்? " சஞ்சயன் கேட்க ,

அந்த மனிதர் "ஆமாம் நான் மீண்டும் சொல்கிறேன்.  குருக்ஷேத்திர  யுத்தம் நடந்தா இல்லையா என்கிற உன்னுடைய சந்தேகம்  தீரப் போவதில்லை." என்று உறுதியான குரலில் சொல்லிவிட்டு , " உனக்கு உண்மையான யுத்தம் யாருக்கும் யாருக்கும் என்று தெரியாத வரை உன் சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கும் சஞ்சயா .' என்று முடித்தார். .

" நீங்கள் என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ?" சஞ்சயன் கேட்க.....

பெரியவர் சொல்லத்  தொடங்குகிறார்...
" மஹாபாரதம் புராணம், இதிகாசம், என்பது மட்டுமல்ல, அது ஒரு உண்மை நிகழ்வும்  கூட. இதையெல்லாம்  தாண்டி அதில்  ஒரு பெரிய தத்துவம் அடங்கியிருக்கிறது  என்பது உனக்குத் தெரியுமா?

"தத்துவமா? கொஞ்சம் புரியும் படியாகத்தான் விளக்குங்கள்  பெரியவரே " குழம்பிய சஞ்சயன் வினவ ...பெரியவர்  தொடர்கிறார்.

"குருக்ஷேத்திர யுத்தம் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே நடந்த போர் என்கிற வரை உனக்குத் தெரியும்.இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் இருக்கிறது .  நான் சொல்லட்டுமா ?" என்று கேட்டு விட்டு சஞ்சயனின் பதிலுக்குக் காத்திராமல் தொடர்ந்தார்.

"பாண்டவர்கள்  என்பவர்கள் நமது ஐந்து புலன்கள்....மெய், வாய்,கண் மூக்கு , செவி  என்று கொள்ளலாம்."

"அப்படியானால் கௌரவர்கள் ?" சஞ்சயன் மீண்டும் கேட்க.....

" வேறு யார் சஞ்சயா? நம்மை தினம் தினம் தொடர்ந்து வந்து ஐம்புலன்களுக்கும்  ஆரம்பத்தில் இன்பத்தைத் தருவது போல் தந்து, இறுதியில் மீளாத் துயரில் தள்ளும், தீய செயல்கள் .  அவைகளுடன் நாம் தினமும் போரிட்டால்  வெற்றி பெறலாம்."

'அப்படியா ? அவைகளுடன் போரிட்டு நாம் வெற்றி பெற முடியுமா?" சஞ்சயன்  வினவ ....

'கண்டிப்பாக வெற்றிப் பெறலாம். கிருஷ்ணர் தேரோட்டியாக இருக்கும் போது  வெற்றி  நிசசயம் தானே."

சஞ்சயன் மௌனமாக அவரையே பார்க்க , பெரியவர் தொடர்ந்தார்.
" கிருஷ்ணன் உனக்காக தேரோட்டுவாரா  என்று தானே பார்க்கிறாய்? கிருஷ்ணர் வேறு யாருமில்லை. உன் உள் மனம் தான் கிருஷ்ணர். உன் ஆத்மா தான் கிருஷ்ணர். நீ தவறு செய்யும்போதெல்லாம், ஓடோடி வந்து  உன்னைத் தடுக்க  முற்பட்டு, பின் உன்னால்  புறந்தள்ளப்பட்டு ,  வருத்தத்துடன் தோல்வியடைகிறதே  உள்ளுணர்வு அது தான்  கிருஷ்ணர் . உன்  ஆத்மாவிடமும், உள்ளுணர்விடமும்  உன் வாழ்க்கையைக் கொடுத்து விட்டால் நீ  வெற்றியடைவது சர்வ நிசசயம்."

சஞ்சயன் விளக்கத்தைக் கேட்டு ஆச்சர்யத்தில் உறைந்தான். ஆனால் மனதில் இன்னும் கேள்விகள்  பாக்கி இருந்தன.

" நீங்கள் சொல்லும் விளக்கம் உண்மையானால் ,   துரோணாச்சார்யர்,  பீஷ்மர்...இவர்கள் எல்லாம் ஏன் தீமைகளின் பக்கம் இருந்தார்கள் ? அதற்கு என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்? "

அந்த  மனிதர் மிகுந்த மனவருத்தத்துடன்  சஞ்சயன் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார்....

" உன் மரியாதைக்கு உரிய பெரியவர்களை, நீ பார்க்கும் கோணம், நீ வளர வளர மாறிக் கொண்டே வருவதை நீ உணர்ந்திருப்பாய் சஞ்சயா.   யாரையெல்லாம்  தவறே செய்யாதவர்கள், அப்பழுக்கற்றவர்கள், குற்றமற்றவர்கள்   என்று நினத்துக் கொண்டிருந்தாயோ   அவர்கள் எல்லோரிடமும்  தவறு இருக்கிறது என்பதை ஒரு நாள் நீ உணர நேரிடும். அவர்களும்  தவறிழைத்தவர்களே  என்கிற உண்மை உனக்கு  மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கும் .
அவர்கள் உனக்கு நன்மை செய்பவர்களா ? தீமை செய்பவர்களா? என்கிற மாபெரும் சந்தேகத்தைத் தரும் சந்தர்ப்பங்களை  வாழ்வில்   நீ சந்திக்க நேரிடும்.  அப்பொழுது, அவர்களுக்கு எதிராக நீ போர்க் குரல் கூட எழுப்ப நேரிடும்.   நீ இத்தனைக் காலம் மரியாதை வைத்திருந்தவர்களுக்கு எதிராகப் போர்க் குரல் எழுப்புவது  அவ்வளவு எளிதான காரியமா என்ன?  மனம் குழப்பமடைந்து, தெளிவற்ற நிலையில்  நீ செய்வதறியாது  திகைத்து நிற்கும் போது,  கீதையின்  மகத்துவம் உனக்குப் புரியும் . நம் வாழ்விற்கு வழி காட்டும் விளக்கு என்பதும் உனக்கு விளங்கும் ."

உண்மை புரிய புரிய சஞ்சையின் கால்கள் நிற்க முடியாமல் நடுங்கின. உண்மையின்  கனம் சஞ்சயனைத்  தரையில் அமர வைத்து விட்டது.
ஆனாலும் இன்னும் ஒரு விளக்கம் தேவையாயிருந்தது அவனுக்கு.

 அப்படியென்றால்........ கர்ணன் பற்றி என்ன சொல்வீர்கள்? என்று சஞ்சயன் கேட்க....

"கர்ணன் தான் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். நல்ல வேளை  மறக்காமல் கேட்டாயே!" என்று தொடர்ந்தார்.....

" கர்ணன்  வேறு யாருமில்லை. நம் ஐம்புலன்களிடமும்  சகோதரப் பாசத்துடன் உறவாடும்  " ஆசை" தான்  கர்ணன்.. நம்முள்ளேயே இருந்து கொண்டு , நமக்கேத் தீமையை விளைவிக்கும் 'ஆசைகள்' எல்லாமே  கர்ணனை நினைவுபடுத்தும்.

 ஒவ்வொரு முறையும்  உன் ' ஆசைகள் ' உன்னை வெல்லும் போது ,  அதற்காக நீ தவறு செய்யும் போது, நீ உனக்கே  ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்துக்  கொள்கிறாயே , அது உனக்குக்  கர்ணனை நினைவுப்  படுத்தவில்லையா ?

விளக்கம் கேட்ட சஞ்சயன் வியப்பில்  ஆழ்ந்து போனான்.  மனதில்  ஆயிரம் எண்ணங்கள் சூழ , விளக்கங்களை  இணைத்துப் பார்க்க முயன்று கொண்டே, பெரியவர் இருக்கும் திசையைப் பார்த்தான் சஞ்சயன்.

அதற்குள் பெரியவர் மறைந்து விட்டிருந்தார். ஆனால் அவர் விட்டு சென்றதோ 

'யுத்தம் நேற்றும் நடந்தது,
இன்றும் நடக்கிறது,
நாளையும் நடக்கும்.'

என்கிற மிகப் பெரும் வாழ்க்கைத்  தத்துவம்.

 'வாட்ஸ் அப் ' இல் படித்தது  

No comments:

Post a Comment