Friday 27 May 2022

இலக்கியமும் உணவுக் குறிப்புகளும் - 3

பத்திய உணவு:


பிணியுற்றபோது உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடித்தனர். கடும் பிணிகள் உற்றபோது பிணியாளன் விரும்பிய உணவு வகைகளைக் கொடுக்காமல் மருந்தின் தன்மைக்கேற்ப உணவை ஆய்ந்து கொடுத்தனர். இக்காலப் பத்திய உணவுக்கு இணையாக இதனைக் கருதலாம்.

குழந்தை உணவு:

குழந்தைகட்கு நெய்ச் சோறு ஊட்டினர்.

விரத உணவு:
பார்ப்பனர் எனும் பிரிவினர் எப்போதும் விரத உணவு கொள்வர்.
இதனைப் படிவ உண்டி என்று குறுந்தொகை குறிப்பிடும். காமத்தின் இயல்பைக் கட்டுப்படுத்தும் தன்மை இப்படிவ உண்டிக்கு இருந்தது என்பதை உரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.
அறிவர் உணவு:
அறிவர் எனும் முக்காலமும் உணரும் துறவியர் நெல்லால் சமைத்த சோற்றுடன் வெண்ணெயைக் கலந்து உண்டனர். அதன்பின் ‘வெப்பத் தண்ணீர்’ அருந்துவர். இதற்கெனச் சேமச் செப்பினையும் உடன் வைத்திருந்தனர்.
கைம்மை மகளிர் உணவு:
கணவனை இழந்த பெண்டிரை ‘உயவர் பெண்டிர்’ ‘கழிகல மகளிர்’ என்று அக்காலத்தில் அழைப்பர்.
இவர்கள் உணவில் நெய் போன்றவை சேர்க்கப்படவில்லை. கைகளில் இலையை இட்டு அதில் வெறும் நீர்விட்டுப் பிழிந்த சோற்றுடன் எள்ளுத் துவையலையையும், புளி கொண்டு வேக வைத்த வேளைக் கீரையையும் உண்பர். சிலர் அல்லி அரிசியை உண்பர்.
அந்தணர் உணவு:
பாற்சோறு, பருப்புச்சோறு, நெற்சோறு, மிளகு கலந்த நெய்யுடன் கூடிய கொம்மட்டி மாதுளங்காய், மாவடு ஊறுகாய் போன்றவற்றை உண்டனர். அத்துடன் பலாப்பழம், வாழை, இளநீர், நுங்கு ஆகியவற்றையும் உண்டிருக்கின்றனர்.
உணவைச் சமைக்கும் முறை:
இக்காலத்தில் சமையற்கலையைக் கற்பிக்கும் நூல்கள் பல இருப்பதைக் காணலாம்.
சங்க காலத்தும் ‘மடை நூல்’ என்னும் பெயரில் சமையற் கலை நூல் இருந்தது என்பதையும் அந்நூலினை வீமசேனன் எழுதினான் என்பதையும் அந்நூலில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ள உணவு களையெல்லாம் அக்காலத்தவர் சமைத்து உண்டனர் எனும் செய்திகளைச் சிறுபாணாற்றுப் படைப் பாடல் மூலம் அறியலாம்.
சங்க கால மக்கள் மண்பாண்டத்தில் சமைத்துப் பானையில் சோறு உண்டனர்.
உலக்கைக் கொண்டு நெல்லைக் குற்றி அதனை உலையில் பெய்து சமைத்தனர். அரிசியை அரிக்கும் பழக்கத்தால் அதில் உள்ள பல சத்துக்கள் கழிநீரில் வீணாகி விடுகின்றனர். எனவே, அரிசியை அரிக்காமல் அப்படியே உலை பெய்து சமைத்தலே நல்லது. சங்க கால மக்கள் இயல்பாகவே அரிசியை அரிக்காமல் உலையில் இட்டுச் சமைத்தனர்.
பழந்தமிழரின் சமைக்கும் முறைகள் இயல்பாகவே இக்கால அறிவியல் நெறிக்கேற்ப அமைந்திருப்பது எண்ணி மகிழத்தக்கது.
உண்ணும் முறை:
சங்க காலத்து மக்கள் உணவை வாழை இலையிலும் தேக்கிலையிலும் இட்டு உண்டனர்.
வெள்ளி, பொன் போன்ற கலங்களிலும் உண்டனர்.
சமைத்த உணவைச் சுடச்சுட உண்டு வயிர்த்தனர். உணவை நாவினால் புரட்டிக் கொடுத்து மென்று விழுங்கினர். இதனை “நாத்திறம் பெயர்ப்ப உண்டு” என்று புறநானூறு அழகுற விளக்கும்.
நன்றி: மூலிகை மணி

No comments:

Post a Comment