இரும்பை விரும்பு!
எவ்வளவு பெரிய பிரச்னைகளையும் நல்ல திட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் சுலபமாகத் தீர்க்கலாம் என்பதற்கு இந்தத் திட்டம் ஒரு உதாரணம். கம்போடியா நாட்டில் மட்டும் மொத்த மக்கட்தொகையில் பாதிப்பேர் இரும்புச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டிருந்தனர். உலக அளவில் இருக்கும் மக்கள் தொகையில் 3.5 பில்லியன் பேர் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் குறைபாட்டால் தான் பலருக்கும் ரத்த சோகை நோய் ஏற்படுகின்றது. இதைப் போக்க என்ன வழி என ஆராய்ந்த கம்போடியாவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சார்லஸ் தலைமையிலான ஆய்வாளர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர்.
அதுதான் இரும்பு மீன். ஆமாங்க. இரும்பினால் ஆன மீன்தான். ஒரு இரும்பு மீனானது 200 கிராம் எடை கொண்டது. இதைப் பயன்படுத்திச் சாப்பிட ஆரம்பித்த பின் காம்போடியா நாட்டு மக்கள் உடல் நலத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. பயப்படாதீங்க மக்கா! உணவுப்பொருளோடு இதையும் சேர்த்து பொரித்தோ அவித்தோ எதைச் சாப்பிட்டாலும் இரும்புச் சத்து அந்த உணவுகளில் கலந்து சக்தி கிடைப்பதாக நம்புகிறார்கள்.
இந்த இரும்பு மீன்களைத் தற்போது luckyironfish.com தளத்தில் ஆன்லைனிலும் வாங்கிக் கொள்ளலாம். `ஒரு மீன் வாங்கினால் ஒரு மீன் இலவசம்' எனக் கவர்ச்சிகரமான ஆஃபர்களும் 25 டாலர்களுக்குக் கிடைக்கின்றன. இரும்பு மீன்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களும் இந்தத் தளத்தில் இருக்கின்றன.
இரும்பு மீன்களைக் கண்டறிவதற்கு முன்பு வரை அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு இருந்து வந்துள்ளது. பிரசவிக்கும் தாய்மார்கள் இரும்பு மீன்களைப் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு அங்கு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த இரும்பு மீன்களை எப்படி உணவுப்பொருட்களோடு சேர்க்கிறார்கள் தெரியுமா? மீன்மீதுசில சொட்டுகள் எலுமிச்சைச் சாறை ஊற்றி காய்கறிகளோடு சேர்த்து பத்து நிமிடம் வேகவைத்தால் இரும்புச்சத்து அந்த காய்கறிகளில் படிந்து விடுகிறதாம். காம்போடிய மக்களில் பெரும்பாலானோர் தினமும் இரும்பு மீனையும் சேர்த்தே சமைக்கிறார்கள். `எங்கள் மக்கள் சாப்பிடத் தொடங்கிய ஒரு வருடத்திலேயே கிட்டத்தட்ட 50 சதவிகித அளவுக்கு இரத்தச்சோகை பிரச்னை மக்களுக்கு தீர்ந்துள்ளது' என அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இரும்பை ஏன் மீன் வடிவத்தில் பயன்படுத்த வேண்டும் எனக் கேள்வி எழுகிறதா? முதலில், ஆய்வாளர்கள் இரும்புக் குண்டைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்தனர். ஆனால், அந்நாட்டு மக்கள் அவ்வாறு பயன்படுத்துவதை விரும்பவில்லையாம். பிறகு, மீன்களை ராசியானதாகக் கருதும் மக்களிடையே அதன் மூலமே விழிப்புஉணர்வைப் புகுத்த எண்ணி, மீன் உருவத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
பசியில் மீனைத் தின்றால் பல் போய்விடும் மக்கா!
- விக்கி Thanks to Vikatan
No comments:
Post a Comment