Tuesday 12 July 2022

ராமாநுஜர் - திருக்கோஷ்டியூர் நம்பி

 


வைகுண்டத்தில் திருமாலுக்குத் தொண்டு செய்யும் நித்யசூரிகளுள் ஒருவரான புண்டரீகர் என்பவர் தான் திருக்கோஷ்டியூர் நம்பியாக அவதரித்ததாகப் பெரியோர்கள் கூறுவர். ராமானுஜரின் ஐந்து குருமார்களில்
திருக்கோஷ்டியூர் நம்பியும் ஒருவர்.

திருவரங்கத்தில் ராமாநுஜரின் உணவில் சிலர் விஷம் கலந்து விட்டார்கள். இதை அறிந்த ராமாநுஜர், “ஒரு துறவியானவன் எந்த உயிரின் மனமும் நோகாதபடி வாழ வேண்டுமே! அவ்வாறிருக்க, ஒருவன் எனக்கு விஷம் வைத்திருக்கிறான் என்றால், நான் அவன் மனதை எவ்வளவு தூரம் நோக வைத்திருப்பேன்!” என்று எண்ணி வருந்தி, உண்ணா விரதம் இருக்கத் தொடங்கினார்.


இச்செய்தியைக் கேள்வியுற்று திருவரங்கத்துக்கு வந்தார் திருக்கோஷ்டியூர் நம்பி. நம்பியின் வரவை அறிந்த ராமாநுஜர் அவரைத் தேடிச் செல்ல, காவிரி மணலில் திருக்கோஷ்டியூர் நம்பி நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது மதியம் பன்னிரண்டு மணி. தீயாய்க் கொதிக்கும் காவிரி மணலில் விழுந்து திருக்கோஷ்டியூர் நம்பியை வணங்கினார் ராமாநுஜர். குருவுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர் “எழுந்திரு!” என்று சொல்லும் வரை சீடர்கள் தரையிலேயே விழுந்து கிடப்பார்கள். ராமாநுஜர் வெகு நேரமாகக் காவிரி மணலில் விழுந்து நமஸ்கரித்தபடி இருக்க, திருக்கோஷ்டியூர் நம்பி எதுவுமே சொல்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

இதைக் கண்ட ராமாநுஜரின் சீடர்களுள் ஒருவரான கிடாம்பியாச்சான், ராமாநுஜரை எழுப்பித் தமது மடியிலே கிடத்திவிட்டுத் திருக்கோஷ்டியூர் நம்பியைப் பார்த்து, “நீர் ஒரு குருவா? மெல்லிய தாமரையை அடுப்பில் இட்டு வாட்டுவது போல், இமையில் வளர்ந்த விழியை எரியும் நெருப்பில் இடுவது போல், கொடியில் பிறந்த மலரைக் கொடிய புயலின் கையில் தருவது போல், எங்கள் ராமாநுஜரின் உடலைக் கொதிக்கும் மணலில் இப்படி வாட்டுகிறீரே! அவர் வாடுவதைக் கண்டும் கருணையில்லாமல் நிற்கிறீரே!” என்று கோபத்துடன் பேசினார்.

அதுவரை மௌனமாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி, ராமாநுஜரின் அனைத்துச் சீடர்களையும் பார்த்து, “ராமாநுஜருக்கு இவ்வளவு சீடர்கள் இருந்தாலும், அவர் என்னை நமஸ்கரித்து இங்கே விழுந்து கிடந்த போது நீங்கள் யாரும் அவரை எழுப்பவில்லை. ஏனெனில், அவ்வாறு எழுப்பினால் உங்களுக்கு நான் சாபம் கொடுப்பேனோ என்ற அச்சம் உங்களுக்கு இருந்தது.

ஆனால் கிடாம்பி ஆச்சான் மட்டும் தான் தன்னைப் பற்றிக் கவலைப் படாமல், ராமாநுஜர் மேல் அக்கறையுடன் அவரை வந்து எழுப்பினார். அப்படிப்பட்ட ஒருவர் தான் இனி ராமாநுஜருக்கு உணவு சமைத்துப் பரிமாற வேண்டும்! ராமாநுஜருக்காகத் தன் உயிரையும் கொடுக்கத் துணிந்துவிட்டார் இவர்! எனவே இனியும் ராமாநுஜரின் உணவில் யாரேனும் விஷம் கலக்க முயன்றால், இந்தக் கிடாம்பி ஆச்சான் அதை உண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாவது ராமாநுஜரைக் காத்து விடுவார்” என்றார்.

அப்போது திருக்கோஷ்டியூர் நம்பியை வியப்புடன் பார்த்தார் ராமாநுஜர். “ஆம் ராமாநுஜா! உன் உணவில் யாரோ விஷம் கலந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். இனி அவ்வாறு நடக்கக் கூடாதல்லவா? தனக்கு ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை, நீ நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணும் கிடாம்பியாச்சான் போன்ற ஒருவர் உனக்கு மடைப்பள்ளித் தொண்டு செய்தால் தான் இனி உனக்கு எந்த ஆபத்தும் நேராமல் இருக்கும்!” என்று கூறினார் திருக்கோஷ்டியூர் நம்பி.

No comments:

Post a Comment