ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி!
மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான்!
இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்…
அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது…!
இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள்!
இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு பொய்கை, ஊற்று என்று பெயர்.
தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு சுனை, கயம் என்று பெயர்!
ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு குட்டை என்று பெயர்!
இன்றைக்கு இந்த சொல் சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது!
மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு குளம் என்று பெயர்!
அழுக்கு போகக்குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால் அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு!
பகல் முழுதும் வயலில்வெயிலில் வேலைசெய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல்.
இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது.
No comments:
Post a Comment