Sunday 12 March 2023

INDRA SABHA ( from Mahabharata )


புஷ்கரமாலினி என்ற இந்திர சபை


நாரதர் சொன்னார் :  "சக்ரனின் {இந்திரனின்} தேவலோக சபாமண்டபம் பிரகாசம் நிறைந்தாக இருக்கிறது. அவன் தனது சொந்தச் செயல்களின் கனியாக {பலனாக} அதை அடைந்தான். ஓ குரு குலக் கொழுந்தே {யுதிஷ்டிரனே}, அது {இந்திரனின் சபா மண்டபம்} சூரியனின் பிரகாசத்தைக் கொண்டு, சக்ரனாலேயே {இந்திரனாலேயே} கட்டப்பட்டது.(1) விரும்பிய இடங்களுக்கெல்லாம் கொண்டு செல்லும் வகையில் உள்ள அந்த தேவலோக சபா மண்டபம், நூற்று ஐம்பது யோஜனை {1 யோஜனை = 8 மைல் = 12.8 கி.மீ.,} {150யோஜனை என்றால் 1920கி.மீ} நீளமும், நூறு யோஜனைகள் அகலமும் {1280 கி.மீ. அகலமும்}, ஐந்து யோஜனைகள் {64 கி.மீ} உயரமும் கொண்டது.(2) வயதால் ஏற்படும் பலவீனத்தையும், துன்பம், களைப்பு, அச்சம் ஆகியவற்றையும் விலக்கி, நன்மைகளையும், நற்பேற்றையும் அருளும் அந்த மண்டபம், தெய்வீக மரங்களால் அலங்கரிக்கப்பட்ட அறைகளும், இருக்கைகளும் கொண்டு, மிதமிஞ்சிய மகழ்ச்சியைக் கொடுக்க வல்லதாக இருக்கிறது.(3)

அந்தச் சபா மண்டபத்தில், ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரனே}, ஒரு அற்புதமான இருக்கையில், அழகும் செல்வமும் கொண்ட தனது மனைவி சச்சியுடன் தேவர்களின் தலைவன் {இந்திரன்} அமர்ந்திருக்கிறான்.(4) பல வண்ணங்களுடன் கூடிய மலர் வளையங்களைத் தரித்துக் கொண்டு, தூய வெள்ளுடை உடுத்தி, தலையில் கிரீடம் தரித்து, பிரகாசமான வளையங்களைத் தனது தோளில் அணிந்து கொண்டு, விவரிக்க இயலாத ஒரு வடிவைக் கொண்டு, அழகுடனும், புகழுடனும் அமர்ந்திருக்கிறான்.(5)

நூறு வேள்விகளைச் செய்த அந்த சிறப்புமிகுந்த தேவன் {இந்திரன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அந்த சபையில் உள்ளவர்களும், இல்லற வாழ்வைப் பின்பற்றுபவர்களுமான மருத்துகளால் தினமும் காக்கப்படுகிறான் {மருத்துகளின் பணிவிடையை ஏற்கிறான்}.(6) சித்தியர்களும் {Siddhyas}, தேவலோக முனிவர்களும், சத்யஸ்களும் {Sadhyas}, தேவர்களும், பிரகாசமான நிறம் கொண்ட மருதர்களும், தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, தேவ வடிவம் கொண்டு, அனைத்து ஆபரணங்களையும் பூண்டு, எதிரிகளை நொறுக்கும், இறவாதவர்களின் தலைவனுக்கு {இந்திரனுக்குப்} பணிவிடை கொண்டிருக்கிறார்கள்.(7,8)

ஓ பிருதையின் மகனே {யுதிஷ்டிரா}, தூய ஆன்மாவுடன், பாவங்கள் சுத்தமாகக் கழுவப்பட்டவர்களும், நெருப்பைப் போன்று பிரகாசித்து கொண்டிருப்பவர்களும், சக்தி கொண்டவர்களும், எந்தவிதமான துயரமும் இல்லாதவர்களும், கவலை என்ற நோயில் இருந்து விடுபட்டவர்களும், சோம வேள்வியைச் செய்பவர்களான தேவலோக முனிவர்கள் அனைவரும் இருக்கும் அந்த சோம வேள்வியைச் செய்யும் அனைவரும் இந்திரனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். பராசரர், பர்வதர், சாவர்ணி, காலவர், {ஏகதர், த்விதர், த்ரிதர்}, சங்கர், {லிகிதர், கௌரசிரர், துர்வாசர், ச்யேனர், தீர்க்கதமஷ், பவித்ரபாணி, ஸாவர்ணி,} யாஜ்ஞவல்கியர், பாலுகி, உத்தாலகர், ஸ்வேதகேது, தாண்டியர், பாண்டாயினி, ஹவிஷ்மான், கரிஷ்டர், மன்னன் ஹரிச்சந்திரன்; ஹிருத்யர், உதரசாண்டில்யர், பராசரியர், கிருஷீவலர், வாதஸ்கந்தர், விசாகர், விதாதா, காலா, காராலதந்தர், தஷ்டிரி, விஸ்வகர்மா, தும்புரு,(11-14) மேலும் பிற முனிவர்கள், அவர்களில் சிலர் பெண்கள் மூலம் பிறந்தவர்கள், மற்றவர்கள் காற்றின் மூலம் வாழ்பவர்கள், நெருப்பின் மூலம் வாழ்பவர்கள் ஆகியோர் இடியைத் தாங்கும் உலகங்களின் தலைவனான இந்திரனை வழிபடத் தயாராக நிற்கின்றனர்.

சகாதேவர், சுநீதர், பெரும் ஆன்மத் தகுதியுடைய வால்மீகி, பொய்யா மொழி கொண்ட சமீகர், வாய்மை தவறாத பிரசேதஸ், மேதாதிதி, வாமதேவர், புலஸ்தியர், புலஹர், கிரது, மருத்தர், மரீச்சி, பெரும் ஆன்மத்தகுதியுடைய ஸ்தாணு, கக்ஷீவத் {கக்ஷீவான்}, கௌதமர், தார்க்ஷ்யர், வைச்வானரர், காலகவ்ருக்ஷீய முனிவர், ஆச்ராவ்யர், ஹிரண்மயர், சம்வர்த்தர், தேவஹவ்யர், பெரும் சக்தி கொண்ட விஸ்வஸேனர், கன்வர், கத்யாயணர், ஆகியோரும் ஓ மன்னா {யுதிஷ்டிரா}, கர்க்கர், கௌசிகர் ஆகியோர் அனைவரும், தெய்வீக நீர்நிலைகள் மற்றும் தாவரங்கள், நம்பிக்கைகள், மேதைமைகள், கல்வி தேவி {சரஸ்வதி}, செல்வம், அறம், இன்பம், மின்னல் ஆகியவற்றுக்கு அதிபதிகளும் அங்கே இருந்தனர். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே} மழையைத் தனக்குள் அடக்கியுள்ள மேகங்கள், காற்றுகள், சத்தமாக ஒலியெழுப்பும் தெய்வீக சக்திகள்,(15-20) கிழக்கு புள்ளி {திசை}, வேள்விகளில் தெளிந்த நெய்யை அனுப்பும் இருபத்தியேழு நெருப்புகள்[1], அக்னி, சந்திரன், இந்திரனின் நெருப்பு {இந்திராக்னிகள்}, மித்ரன், சாவித்ரி {ஸவிதா}, அர்யமான்,(21) பகன், விஸ்வசத்யஸ்யர்கள் {விச்வேதேவர்கள்}, {ஸாத்யர்கள்}, குரு {பிருஹஸ்பதி}, சுக்ரன், விஸ்வாவசு, சித்திரசேனன், சுமணன், தருணன்,(22) வேள்விகள் {யஜ்ஞபுருஷர்கள்}, பிராமணர்களுக்கான கொடைகள் {தக்ஷிணைகள்}, கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியன ஓ பாரதா {யுதிஷ்டிரா}, வேள்விகளில் உச்சரிக்கப்படும் மந்திரங்கள் ஆகியன அங்கே காத்துக் கிடந்தன.(23) ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பல அப்சரஸ்களும், கந்தர்வர்களும், பலவகை நடனங்களையும், கருவி மற்றும் குரலால் எழுப்பப்படும் இசையையும் நற்பேற்றைக் கொண்டுவரும் சடங்குகளையும் செய்து பல திறன்களையும் வெளிக்காட்டிக் கொண்டு பலனையும், விருத்திரனையும் கொன்றவனும், சதக்ரதுவும், ஒப்பற்றவனுமான இந்திரனை வழிபட்டனர்.(24-26)


இவையெல்லாவற்றையும் தவிர்த்து, மற்றும் பல பிராமணர்களும், அரச மற்றும் தெய்வீக முனிவர்களும், நெருப்புக்கு ஒப்பாகப் பிரகாசித்து, மலர் அலங்காரங்களாலும் ஆபரணங்களாலும் நிரம்பி, பல்வேறு வகைகளிலான தெய்வீகத் தேர்களில் அந்த சபைக்கு வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கின்றனர்.(27) அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பிருஹஸ்பதியும் சுக்ரனும் அங்கே இருக்கின்றனர். இவர்களும் இன்னும் பல கடும் தவங்களை இயற்றிய ஒப்பற்ற துறவிகளும்,(28) பிருகுவும், பிரம்மாவுக்கு சமமான ஏழு முனிவர்களும், சோமனின் {சந்திரனின்} தேர் போன்ற தங்கள் தெய்வீகத் தேர்களில்  பயணித்து, அங்கே வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தனர்.(29) ஓ பெரும் கரம் கொண்ட ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, புஷ்கரமாலினி என்று அழைக்கப்பட்ட அந்த நூறு வேள்விகளைச் செய்த இந்திரனின் சபா மண்டபத்தை நான் கண்டிருக்கிறேன்.

No comments:

Post a Comment